சென்னை திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பத்மா, அவருக்கு 48 வயது, தூய்மைப் பணியாளர். இவர், சென்னை தி.நகரில், வண்டிக்காரன் தெரு பகுதியில் கடந்த 11 ஆம் தேதி வழக்கம் போல தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் ஒரு பை கிடந்திருக்கிறது. அதில், 45 பவுன் தங்க நகைகள் இருந்தன. சற்றும் யோசிக்காமல் நகையை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் பத்மா. விசாரணையில், அந்த நகைகள் நங்க நல்லூரைச் சேர்ந்த பரமேஷ், என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவரிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. புதையல் போல நகைகள் கிடைத்தும் அதைத் திருப்பிக் கொடுத்த தன்னலம் இல்லா பத்மாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தமிழக முதல்வர் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இந்நிலையில், சென்னை மத்திய கோட்டத்தில் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் பத்மாவின் புகைப்படம் கொண்ட அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவிக்கப்பட்டது.
பத்மாவின் நேர்மைக்கு சன்மானமாக இந்தியா அஞ்சல் துறை வங்கி சார்பில், பிரீமியம் கணக்கு மற்றும் ரூ.15 லட்சத்தில் விபத்து காப்பீடு பாலிசி வழங்கப்பட்டது. அவரது பெயரில் கால வைப்புக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. 45 பவுன் நகையை பார்த்ததும் என்ன தோன்றியது? வெள்ளந்தியாக சிரிக்கிறார் பத்மா உடன் அவரது கணவர். “தி நகரில் வேலை துவங்கறதுக்கு முன்னாடியும், பிறகு முடிச்சுட்டு அங்கே இருக்கும் ஒரு அயன் கடை வாசலில் தான் எப்பவும் உட்காருவேன். அப்போதான் ஒரு ஐஸ்கிரீம் டப்பா இருந்த ஒரு பை அங்கே இருந்தது தெரிந்தது. சரி வந்து பார்த்துப்போம் அப்படின்னு விட்டுட்டு போயிட்டேன். திரும்ப வந்து பார்த்திட்டு, யாரோ ஏதோ சாப்பாடு வந்து நமக்கு வச்சிருக்காங்க அப்படின்னு நினைச்சேன். டப்பாவைத் திறந்து பார்த்தால் அவ்வளவும் நகை. என்ன செய்யறது அப்படின்னு தெரியாம முதலில் என் கணவரை தான் கூப்பிட்டேன். அவரும் பார்த்தவுடன் போலீசுக்கு சொல்லிடலாம் அப்படின்னு சொன்னார். உடனே என்னுடைய கம்பெனிக்கு கூப்பிட்டு அங்கே இருந்த சூப்பர்வைசர் பிரகதீஷ் சார் கிட்ட சொன்னேன். அவர் மேலே இருந்தவர்கள் எல்லாரையும் வரவழைச்சு அடுத்தடுத்து காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்துட்டோம். நாங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு போவதற்கு முன்பே நகையை தொலைச்சவங்க புகார் கொடுத்திருந்தாங்க” சொல்லும்பொழுது கண்கள் கலங்க நெகிழ்கிறார் பத்மா. அவரைத் தொடர்ந்தார் பத்மாவின் கணவர் சுப்ரமணி.
“கையைப் பிடித்து அழுதுகிட்டு நன்றி சொன்னாங்க. அவங்களுக்கு வேறு வார்த்தை எதுவும் வரலை. இந்த நகை கிடைக்கலைன்னா நானும் என் மனைவியும் வாழ்றதே கஷ்டம் அப்படின்னு சொன்னாங்க. அந்த அளவுக்கு இந்த நகை அவங்களுக்கு முக்கியம். அவங்களுக்கு வேறு எதுவும் சொல்ல தெரியலை. நகையைக் கொடுக்கும்போதே கமிஷனர் ஐயா சொன்னார் உங்களுக்கு நிச்சயம் கௌரவம் கிடைக்கும் அப்படின்னு. ஆனால் இந்த அளவுக்கு எங்களுக்கு அன்பு கிடைக்கும் அப்படின்னு நாங்க நினைச்சுக்கூட பார்க்கலை” கணவர் சுப்ரமணியை நிறுத்தி பத்மா தொடர்ந்தார். “தினமும் அதை தி.நகர் தெருவுக்குள்தான் கூட்டி பெருக்கி சுத்தம் செய்கிறேன். ஆனால் இப்போ யார் என்னைக் கடந்து போனாலும் எனக்கு குறைந்தபட்சம் கை கொடுத்திட்டு போறாங்க. சின்னச் சின்ன பிள்ளைங்க எல்லாரும் என்னை கட்டிப்பிடிச்சு ஒரு சிலர் முத்தம் கொடுத்துட்டு போறாங்க. அப்படி நாங்க என்ன செய்துட்டோம் அப்படின்னு தெரியலை. ஒருவேளை உங்க கையில கிடைத்திருந்தா கூட நீங்களும் அதையேதான் செய்வீங்க. சாதாரணமா கீழே கிடந்து எடுத்த ஒரு பொருளை உரியவங்கக் கிட்ட கொடுத்ததுக்கு ஏன் இவ்வளவு அன்பு காட்டுறாங்கன்னு புரியல. ஒரு ரெண்டு வருடங்களுக்கு முன்பு என் கணவரும் கூட இதையேதான் செய்திருக்கார்” ஆச்சரியம் அதிகரிக்க சுப்ரமணியைப் பார்த்தோம்.
“இரண்டு வருடங்களுக்கு முன்னாடி கொரோனா காலத்தில், பெரிய ரோடுகளுக்கு செல்லாமல் சின்னச் சின்ன சந்துகளுக்கு உள்ள வண்டி ஓட்டுவேன். பொழப்பு ஓடணுமே சாப்பிடணுமே, அப்படி ஒரு நாள் ஆட்டோ ஓட்டிட்டு இருக்கும் போது ஒரு கருப்புப் பை அதில் ரூ. 1.75 லட்ச ரூபாய் கிடந்தது. கையில் எடுத்ததும் எனக்கு முதலில் கை நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. அவ்வளவு பணம் நான் பார்த்ததே கிடையாது. அதைக் கொண்டு போய் அப்படியே கமிஷனர் ஐயா கிட்ட கொடுத்தேன். அவர் என்னை பாராட்டி சன்மானம் கொடுத்தார்”, ‘‘சன்மானத்தை என்ன செய்தார்ன்னு கேளுங்க’’ பத்மா அக்கா சிரித்துக்கொண்டே நம்மிடம் சொன்னார். “சன்மானமாக எனக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் கமிஷனர் ஐயா கொடுத்தார். அதை கொரோனா நிதிக்காக ஒரு டிரஸ்ட்டுக்கு கொடுத்துட்டேன். ஆட்டோ ஓடுது தினமும் வயித்துக்கு சாப்பாடு கிடைக்குது. இதோ என் மனைவிதான் கொண்டு வருவாங்க. ஆனால் அது கூட இல்லாதவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. அவங்களுக்கு உதவட்டும் அப்படின்னு அவங்களுக்கு கொடுத்துட்டேன்” பத்மா அக்கா தொடர்ந்தார்.
“என் பொண்ணு ரமணி, படிப்பு முடிச்சு கட்டிக் கொடுத்திட்டோம். பையன் ரகு, கல்லூரிப் படிப்பு முடிச்சிட்டார். ஒரு கம்பெனியில் வேலை செய்கிறார். இப்போ அவருக்கு பொண்ணு பார்த்துகிட்டு இருக்கோம். பையன், பொண்ணு கூட நகை ஏன் கொடுத்தீங்கன்னு கேட்கலையான்னு’’ நிறையப் பேர் கேட்கறாங்க. ஒருவேளை நாங்க அதை எடுத்திட்டுப் போயிருந்தா என் பையனும், பொண்ணும் சேர்ந்தே திட்டி எங்களை கொடுக்க வைச்சிடுவாங்க. எதுக்குங்க அடுத்தவங்க காசு’’. பிறந்தது பெங்களூரு, என்னுடைய அத்தை பையன்தான் இவரு, திருமணத்துக்கு அப்புறம் சென்னையில் வந்து செட்டில் ஆகிட்டேன். கடந்த 25 வருஷமா இந்த தூய்மை பணியாளராகத்தான் வேலை செய்கிறேன். ரூ. 20000 சம்பளம். எனக்குப் பிடிப்பு இல்லை, படிப்பில்லாம வேலை கொடுத்து ரூ. 20000 சம்பளம் கொடுக்கற வேலை இதுதான் இருக்கு. சந்தோஷமா இருக்கோம். இதோ தினமும் என்னை கொண்டு வந்து வேலையில் விட்டுட்டு ஆட்டோவிலேயே கூட்டிட்டுப் போயிடுவார் என் கணவர். ஜோடியா கிடைக்கற சாப்பாட்டை பகிர்ந்து சாப்பிடுவோம்\” சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அருகாமையில் இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு பெண் பத்மா அக்காவை பார்த்தவுடன் முகம் நிறைய சிரிப்புடன் கட்டி அணைத்து ‘‘அக்கா நீங்க சூப்பர்'' அப்படின்னு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு ஒரு முத்தமும் கொடுத்தார். பத்மா அக்காவும் வெட்கப்பட்டு சிரிக்க நாமும் அவரைக் கட்டிப்பிடித்து வாழ்த்துகள் சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டோம்.
- ஷாலினி நியூட்டன்.
