நாகப்பட்டினம்: டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையாலும், பனிப்பொழிவாலும் நனைந்த நெல்மணிகளை உலர்த்த முடியாமலும், விற்பனை செய்ய முடியாமலும் விவசாயிகள் தவிக்கின்றனர். இதனால் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து 4 பேர் கொண்ட ஒன்றிய குழுவினர் கடந்த 22ம்தேதி டெல்டா மாவட்டம் வந்தனர். கடந்த 2 நாட்களாக தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
3வது நாளாக நேற்று நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே எரவாஞ்சேரி, சீயாத்தமங்கை, பட்டமங்கலம், தேவூர் ஆகிய 4இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர். அப்போது நெல்லின் ஈரப்பதத்தை அதற்கான கருவி மூலம் ஆய்வு செய்ததோடு, நெல்லின் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்தனர். பின்னர் அங்கிருந்த விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து கடலூர் மாவட்டம் சென்ற ஒன்றிய குழுவினர், காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம், ராஜேந்திரசோழகன், குப்பங்குழி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில், கொள்முதலுக்காக கொண்டு வரப்பட்டிருந்த நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்தனர்.


