Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இயற்கை வழி நெல் சாகுபடிக்கு சில பயனுள்ள குறிப்புகள்!

இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சில முக்கியமான பரிந்துரைகளை வழங்குகிறார் வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ்.

* விதைச்சான்று பெற்ற தரமான விதை நெல் வாங்கலாம். பாரம்பரிய நெல் என்றால் ஏற்கனவே அறுவடை செய்ததிலிருந்து 90 நாள் ஆன தரமான விதைநெல் பயன்படுத்தவும்.

* நெல்லை விதைநேர்த்தி செய்த பின்பு மட்டுமே நாற்றங்காலில்இடலாம்.

* நாற்றுக்களை குறைந்த நாள் வயதில் (16 லிருந்து 20 நாள்) நடவு செய்வதால் பக்க கிளைப்புகள் மிக அதிகமான எண்ணிக்கையில் உருவாகும்.

* நாற்றங்கால், தூர் வெடிக்கும் பருவம், பூக்கள் எடுக்கும் பருவம், கதிர் முற்றும் பருவம் போன்ற நேரங்களில் நிலத்தில் ஈரம் குறையாமல் பார்த்துக் கொள்ளவும். எந்த நேரத்திலும் நிலத்தில் வெடிப்பு விழும் அளவுக்கு காய விடக்கூடாது. பூ எடுத்த பின்பு 2 சென்டிமீட்டர் அளவுக்கு மட்டும் பாசன நீரை தேக்கி வைக்கலாம்.

* நடவு நிலத்தில் அடியுரமாக ஏக்கருக்கு 200 கிலோ ஊட்டமேற்றிய தொழு உரம், 200 லிட்டர் ஜீவாமிர்தம், 2 லிட்டர் சூடோமோனாஸ், 2 லிட்டர் அசோஸ்பைரில்லம், 1 லிட்டர் பாஸ்போ பாக்டீரியா, 1 லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா ஆகியவற்றை பாசனநீரில் கலந்துவிட்டு பறம்பு ஓட்டி நிலத்தை சமன்படுத்த வேண்டும்.நாற்றுக்களை 24 நாட்களுக்குள் நடவு போட்ட பின்னர், நிலத்தில் லேசான இறுக்கம் வந்த பின்னர் தண்ணீர் பாய்ச்சுவதால், நாற்றின் வேர்பிடிப்புதிறன் சிறப்பாக இருக்கும்.

நாற்றங்கால் பராமரிப்பு

3ம் நாள் பாசன நீரில் ஜீவாமிர்தம் 100 லி அல்லது 200 லி தண்ணீரில் 3 லி மீன் அமிலம் கலந்து கொடுக்கலாம்.

10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகவ்யா அல்லது ஈஎம் கரைசல் கலந்து தெளிக்கலாம்.

10வது நாள் மீன் அமிலத்தை நாற்றங்காலுக்கு 2 லிட்டர் (ஏக்கருக்கு) தரை வழியாக கொடுக்கலாம். பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகவ்யா தெளித்தும் கொடுக்கலாம்.

16வது நாள் மீன்அமிலத்தை நாற்றங்காலுக்கு 2 லிட்டர் தரைவழியாகவும், 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகவ்யா கலந்தும் தெளிக்கலாம்.

நாற்றுக்களை பிடுங்கும் முந்தைய தினம் நாற்றங்காலில் 100 லிட்டர் தண்ணீருடன் 1 லிட்டர் மீன் அமிலம் கலந்து வேர்களில் படுமாறு ஊற்றி விடலாம்.

17-20ம் ஆம் நாள் நடவை மேற்கொள்ளலாம்.

22வது நாள் பஞ்சகவ்யா அல்லது இ.எம் கரைசல் 10 லிட்டருக்கு 200 மில்லி கலந்து தெளிக்கலாம். மாலையில் இஎம் கரைசல் அல்லது மீன் அமிலம் தரைவழி 3 லிட் + பாஸ்போ பாக்டீரியா 1 லிட் + டிரைக்கோ டேர்மா விரிடி 1 லிட் + 1 லிட் பேசிலோமசிஸ் கலந்து கொடுக்கலாம்.

30 வது நாள் பஞ்சகவ்யா 10 லிட்டருக்கு 100 மில்லி கலந்து தெளிக்கலாம்.

ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர்+ 1 லிட் ஹுமிக் அமிலம் கலந்து தரைவழி கொடுக்கலாம்.

38வது நாள் களையெடுத்து 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி வேப்ப எண்ணெய் அல்லது 100 மில்லி பேசலஸ் துரிஞ்சி என்சிஸ் கலந்து தெளிக்கவும். தரை வழியாக 3 லிட்டர் மீன் அமிலம் கொடுக்கலாம்.

48வது நாள் பஞ்சகவ்யா 10 லிட்டருக்கு 200 மில்லி கலந்து தெளிக்கலாம்.

58வது நாள் கோனோ வீடர் பயன்படுத்தலாம். பின்பு ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் கலந்து தரைவழி கொடுக்கலாம்.

இ.எம் கரைசல் பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கலந்து தெளிக்கலாம்.

68வது நாள் பத்து லிட்டர்தண்ணீருக்கு 500 மில்லி கலந்து மூலிகை பூச்சிவிரட்டி அல்லது அக்னி அஸ்திரம் அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் தெளிக்கலாம்.

75வது நாள் 10 லிட்டருக்கு 100 மில்லி சூடோமோனஸ் தெளிப்பாக தரலாம். மாலையில் மீன் அமிலம் தரைவழி2 லிட்டர் கொடுக்கலாம்.

78வது நாள் 10 லிட்டருக்கு 500 மில்லி தேமோர் கரைசல் அல்லது 200 மில்லி இ.எம் கரைசல்+ 100 மில்லி சூடோமோனஸ் உடன் கலந்து தெளிக்கலாம்.

88வது நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் தேமோர் கரைசல் அல்லது 200 மில்லி ஈஎம் கரைசல் கலந்து தெளிக்கலாம்.

95வது நாள் 10 லிட்டருக்கு 120 மில்லி கற்பூர கரைசல் அல்லது 100 மில்லி மெட்டாரைசியம் கலந்து தெளிக்கலாம்.

மாலையில் மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு 2 லிட். பாசனத்துடன் கொடுக்கலாம்.

102வது நாள் மீன் அமிலம் தரைவழி ஏக்கருக்கு 2 லிட்டர் கொடுக்கலாம். பேசில்லஸ் துரிஞ்சி என்சிஸ் (10 லிட்டருக்கு 100 மில்லி) கலந்து தெளிக்கலாம்.

108வது நாள் மீன் அமிலம் 200 லிட்டரில் 3 லிட்டர் கலந்து பாசனத்தின் வழி கொடுக்கலாம்.

தொடர்புக்கு:

பிரிட்டோராஜ்: 99444 50552.