நெல் ஈரப்பத அளவு தளர்வு குறித்து ஒன்றிய அரசு முடிவு எதுவும் தெரிவிக்காதது வஞ்சிக்கும் செயல்: தமிழக விவசாயிகள் கண்டனம்
சென்னை: நெல் ஈரப்பத அளவு தளர்வு குறித்து ஒன்றிய அரசு முடிவு எதுவும் தெரிவிக்காதது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளனர். வடகிழக்குப் பருவமழை காரணமாக அறுவடை செய்யப்பட்ட நெல் அதிக ஈரப்பதத்துடன் இருப்பதால், கொள்முதலுக்கான ஈரப்பத வரம்பை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்தது.
முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று நெல் ஈரப்பதத்தை அக்.26, 27, 28ல் ஒன்றிய அரசின் தலா மூன்று குழுக்கள் நேரில் ஆய்வு செய்தது. தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் ஒன்றிய அரசு குழு ஆய்வு செய்தது. இந்த நிலையில், நெல் ஈரப்பதம் குறித்து ஒன்றிய அரசு குழு ஆய்வு செய்து 2 வாரமாகியும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளை ஒன்றிய அரசு ஏமாற்றி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
