இயற்கை விவசாயத்தின் மகத்துவம் இப்போது பலருக்கும் தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த உண்மையை உணர்ந்துகொண்ட பல விவசாயிகள் இயற்கை விவசாய முறையைத் தொடர ஆரம்பித்து, அதில் இன்று வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் தஞ்சை மாவட்டம் அருமலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தங்கராசு. இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு வரும் இவர், அவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து நல்ல லாபமும் பார்த்து வருகிறார். தற்போது சம்பா பருவத்தில் கருப்புக்கவுனி ரகத்தைப் பயிரிட்டு அறுவடை பணிகளைத் தொடங்கியிருக்கும் தங்கராசுவை சந்தித்து பேசினோம். `கடந்த 20 வருடமாக என்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். குறுவை, சம்பா சாகுபடியின்போது ஒரே ரகங்களை பயன்படுத்தாமல் நமது பாரம் பரிய ரகங்களான கருப்புக்கவுனி, வெள்ளைக்கவுனி, சீரகச்சம்பா, மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், ரத்தசாலி என்று மாற்றி மாற்றி சாகுபடி செய்யும்போது மண்ணின் வளம் மேலும் அதிகரிக்கும். ஒரே ரகத்தை பயன்படுத்தி சாகுபடி செய்தால் விளைச்சலும் குறையும். நம்மாழ்வார் வழியில் இயற்கை விவசாயத்திற்கு தேவையான அனைத்து இடுபொருட்களையும் நானே தயார் செய்துகொள்கிறேன். மீன் அமிலம், பஞ்சகவ்யா போன்றவற்றை பயன்படுத்தி சாகுபடியை மேற்கொள்கிறேன்.
சம்பா பருவத்திற்கு கருப்புக்கவுனி மற்றும் சீரகச் சம்பா சாகுபடி செய்தேன். இரண்டு முறைகளில் வயலை தயார் செய்யலாம். புழுதி ஓட்டி இரண்டு முறை வயலை உழுது வரிசையாக கையால் விதையை ஊன்றினால் கருப்புக்கவுனி அழுத்தமாக வேர்பிடித்து அதிக தூர்கள் கட்டும். புழுதி ஓட்டுதல் முறையில் விதை ஊன்ற கட்டுக் கட்டுவோம். இதற்கு ஆட்கள் தேவை குறைவு. களைகள் மண்டாது. மற்றொரு முறையில் இரண்டு முறை உழுது கோனோவீடர் மூலம் விதைத்து சாகுபடி செய்யலாம். இரண்டு விதமும் பயிர்கள் வளர்ச்சிக்கு நன்கு உதவும். விதைத்த 10ம் நாளில் மீன் அமிலத்தை தண்ணீருடன் கலந்து பயிர்களின் வேரில் நன்கு படுமாறு அடிக்க வேண்டும். இது பயிர்களுக்கு நல்ல ஊக்கியாக இருக்கும்.
20 முதல் 22ம் நாளில் பஞ்சகவ்யா அடிப்போம். இது களைகள் மண்டாமல் இருக்க உதவும். களைகள் அதிகளவு இருக்காது, கோனோவீடர் அல்லது கயிறு கட்டி விதைக்கும்போது பயிர்கள் மத்தியில் நன்கு இடைவெளி இருக்கும். அதனால் களைகள் அதிகம் பரவாது. 4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 30ம் நாளில் களை இருந்தால் எடுப்போம். இயற்கை முறையில் விவசாயம் என்பதால் பூச்சி தாக்குதல் குறைவுதான். இருந்தாலும் காலநிலை மாற்றம் ஏற்பட்டால் பூச்சி தாக்குதல் தென்படும். இதற்கு பூச்சி விரட்டி மருந்தை நாங்களே தயார் செய்து பயன்படுத்துவோம். இதற்கு யூகலிப்டஸ் இலை, வேப்பிலை, எருக்கம் இலை, வேலிப் பருத்தி, வசம்பு பொடி ஆகியவற்றை நன்கு கொதிக்க வைத்து தயார் செய்வோம். இந்தக் கலவையை 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் என்ற கணக்கில் கலந்து பயிர்களில் தெளித்தால் பூச்சிகள் அண்டவே அண்டாது. இந்தப் பொருட்கள் அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள இயற்கையே அள்ளித் தருகிறது. இதனால் உரம், பூச்சிக்கொல்லி ரசாயனம் போன்றவற்றை வாங்கத் தேவையில்லை. செலவும் குறைகிறது. இயற்கை பொருட்கள் என்பதால் மண்ணின் வளமும் பெருகுகிறது. பின்னர் கதிர் வரும் நிலையில் தேமேர் கரைசலைத் தெளிப்போம். தேமேர் கரைசல் என்பது தேங்காய், புளித்த தயிர் கலவைதான். இது அற்புதமான பயிர் ஊக்கி. தேங்காயைத் துருவி, புளித்த தயிரில் ஒருநாள் முழுவதும் ஊற வைத்து நன்கு வடி கட்டிக்கொள்ள வேண்டும்.
இந்தக் கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் அளவில் கரைத்து தெளிப்போம். இதனால் பயிர் அதிக தூர் பிடித்து நன்கு வளரும். கருப்புக்கவுனி நெல்லுக்கு ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன. கருப்புக்கவுனி சாகுபடிக்கு பொதுவாக 150 முதல் 170 நாட்கள் வரை ஆகும். இயற்கை முறையில் சாகுபடி செய்யும்போது 140 நாட்களில் அறுவடை செய்து விடுவோம். நீர் மேலாண்மை மற்றும் சரியான இயற்கை உரமிடுதல் ஆகியவை முக்கியம். குறிப்பாக நாற்று நட்ட 45-50 நாட்கள் (கிளைத்தல்), 75-85 நாட்கள் (பூக்கும் பருவம்), 95-105 நாட்கள் (கதிர் உருவாதல்), மற்றும் 115-125 நாட்கள் (கதிர் வளர்ச்சி/பிரிதல்) ஆகிய நிலைகளில் கவனம் செலுத்த வேண்டும். 140-145ம் நாட்களில் காவிரித்தாய் சிலையை வைத்து பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடத்தி கை அறுவடைதான் செய்து வருகிறோம். பின்னர் கையால் அடித்து மூட்டைகளில் சேகரித்து வைத்துக்கொள்வேன்.
எந்த சாகுபடியிலும் நான் நெல்லாக விற்பனை செய்வதில்லை. அதை மதிப்புக்கூட்டி அவல், சத்து மாவு, அரிசியாகத்தான் விற்பனை செய்கிறேன். விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருவதால் நிறைவான வருமானம் கிடைக்கிறது. பாரம்பரிய நெல்லில் அவல் தயார் செய்து, கிலோவுக்கு ரூ.130 வீதம் விற்பனை செய்கிறேன். வீரிய ரக நெல்லை விட பாரம்பரிய ரக நெல்லில் செய்யப்படும் அவலில் சத்து அதிகம் என்பதால், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒரு ஏக்கரில் கிடைக்கும் அரிசியில் மதிப்புக்கூட்டி அவலாக மாற்றி விற்பனை செய்யும்போது ரூ.35 ஆயிரத்துக்கும் அதிகமாக வருவாய் கிடைக்கிறது. செலவுகள் போக ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. 2 ஏக்கருக்கும் சேர்த்து உழுதல், விவசாய ஆட்கள் கூலி, களைபறித்தல் என 50 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு ஆகும். ஆனால் நெல்லாக விற்றால் லாபம் குறைவுதான். அதனால் கருப்புக்கவுனி, சீரக சம்பா உள்ளிட்ட ரகங்களை அரிசியாக்கி பாக்கெட் போட்டு விற்பனை செய்வதால், அதன்மூலமும் தனியாக வருவாய் கிடைக்கிறது. இயற்கை விவசாயத்தில் எதுவும் வீண்போகாது. விளைச்சல் குறைவாக இருந்தாலும், கிடைப்பதை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் இருமடங்கு லாபம் கிடைக்கும்’’ என உறுதிபடக்கூறுகிறார்.
தொடர்புக்கு:
தங்கராசு: 85318 54156.


