Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல், காய்கறி, கிழங்கு, கீரை... இந்த நிலத்தில் நாட்டு ரகங்களுக்கு மட்டுமே அனுமதி!

தற்போது ஆர்கானிக் காய்கறிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது நல்ல விசயம்தான். ஆனால் அந்தக் காய்கள் உண்மையாகவே ரசாயனம் கலக்காமல்தான் விளைவிக்கப்படுகிறதா? என பலருக்கு சந்தேகம் எழுகிறது. ஆனால் தங்கள் அனுபவத்தில் பெற்ற படிப்பினைகளை வைத்து சிலர் ரசாயனத்தை சிறிய அளவில் கூட கலக்காமல் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு கை கொடுத்து ஊக்குவிப்பதுதான் நமது முதல் கடமை என பேச ஆரம்பிக்கிறார் மணிகண்டன். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள வெள்ளம்பி கிராமத்தில் 8 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து இயற்கை முறையில் நாட்டு ரகங்களைச் சேர்ந்த நெல், காய்கறி, கிழங்கு, கீரைகளை விளைவித்து வரும் இவர், அவற்றை நேரடியாக மக்களிடமே விற்பனையும் செய்து விடுகிறார். இதைக் கேள்விப்பட்டு மணிகண்டனைச் சந்தித்துப் பேசினோம்.

``வாலாஜா பக்கத்தில் உள்ள கொண்டகுப்பம்தான் எனக்கு சொந்த ஊர். அங்கு தண்ணீர் வசதி குறைவு என்பதால் இந்தப் பகுதியில் 8 ஏக்கர் நிலத்தை லீசுக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறேன். இயற்கை விவசாயம் என்பது எனக்கு பல வருட கனவு. இன்றைக்கு அது நிறைவேறி இருக்கிறது. எதுவும் சுலபமாக நடந்து விடாது. என்னுடைய கனவும் அப்படித்தான். இதற்காக பல்வேறு இயற்கை விவசாயக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டேன். அங்கு வரும் பாரம்பரிய விவசாயிகளிடம் நாட்டு ரக காய்கறிகள் பற்றி கேட்டறிந்தேன். அப்போதுதான் வெளிச்சந்தையில் காய்கறிகளை வாங்கக்கூடாது, இயற்கையாக நாமே நாட்டுக் காய்கறிகளை விதைத்து அதையே உபயோகப்படுத்துவோம், அதனை சந்தைப்படுத்தி விற்பனையும் செய்வோம் என முடிவு செய்தேன்.

அதன்படி ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பல ஊர்களில் நடைபெறும் விதைக் கண்காட்சியில் கலந்து கொண்டு விதைகளை வாங்கி வந்து நிலத்தில் தூவினேன். தொழுஉரம் மட்டுமே பயன்படுத்தி இயற்கை முறையிலான விவசாயத்தில் ஈடுபட்டேன். மாட்டுச்சாணம், மக்கிய தொழு உரம், ஆட்டுப்புழுக்கை, கோழி உரம் ஆகியவை பயன் படுத்துகிறேன். நிலத்தில் பயிர்களை நடவு செய்வதற்கு முன்பு ஏற்கனவே சாகுபடி செய்யப்பட்ட பயிரினை மடக்கி உழுதேன். அதன் பின்னர் இயற்கை உரமிட்டு தண்ணீர்விட்டு இரண்டிலிருந்து மூன்று நாட்கள் நிலத்தைக் காயவிட்டு விதைகளைத் தூவுவேன். அதிகபட்சமாக நெல்லுக்கு மட்டும் ஏக்கர் கணக்கில் நிலத்தை ஒதுக்குவேன். மற்றபடி தக்காளி, வெண்டை, மிளகாய், சுரைக்காய் போன்ற காய்கறிகளுக்கு 10 அல்லது 15 சென்ட் மட்டுமே நிலம் ஒதுக்குவேன். நாட்டு ரக தக்காளியைப் பொருத்த வரையில் விதைகள் தூவிய 10 நாட்களில் துளிர்த்து வந்துவிடும். விதைகளுக்கு மனித மூளையை விட சக்தி அதிகம். எப்போது துளிர்க்க வேண்டும். எப்போது வளர வேண்டும். எப்போது பூவிட்டு காய் கொடுக்க வேண்டும் என்ற அத்தனை அறிவும் உள்ளது. இதை நம்மாழ்வார் அடிக்கடி கூறுவார். அதனால் நாம்தான் நம்முடைய வயலுக்கு விஞ்ஞானி என்ற எண்ணமும் இருக்க வேண்டும். எந்தப் பட்டத்தில் எதை நடவு செய்ய வேண்டும் என்பதை விட நம்முடைய நிலத்தில் எப்போது எதை நடவு செய்தால் அதிக மகசூல் பார்க்க முடியும் என்பதையும் நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

தக்காளியை இப்படி காலம் பார்த்துதான் நான் நடவு செய்தேன். மண் வளத்தை சிறப்பாக மாற்றியதால் இந்த முறை நல்ல மகசூல் கிடைத்தது. இதில் ஏற்பட்ட விளைச்சல் மூலம் பல வகையான நாட்டு விதைகள் கிடைத்தன. இந்த நாட்டுரக தக்காளி விதைகளை என்னைத் தேடி வரும் விவசாயிகளுக்கு கொடுப்பேன். அவர்களிடம் வேறு ரக நாட்டு காய்கறிகள் இருந்தால் அதையும் பெற்று நடவு செய்வேன். இந்த விதைகளைப் பயன்படுத்தி அடுத்தடுத்து பல காய்கறி செடிகளை சாகுபடி செய்தேன். விவசாயிகளைப் பொருத்தவரையில் ஒரு நிலத்தில் ஒரே வகையான அல்லது இரண்டு, மூன்று வகை செடிகளை விதைப்பார்கள். ஆனால் நான் என்னுடைய தோட்டத்தில் தொப்பி கத்திரி, வெங்கனேரி முள்ளுக்கத்திரி, சொனை வெண்டை, சிவப்பு வெண்டை, சிவப்பு உருளை வெண்டை என பல வகை காய்கறிகளைப் பயிரிட்டு இருக்கிறேன். சுரைக்காயில் 30 வகை, மிளகாயில் 10 வகைகள் வைத்திருக்கிறேன். இவை அனைத்தும் நாம் மறந்துபோன நமது நாட்டுக் காய்கறிகள். இவை மட்டுமல்லாமல் சிவப்பு தண்டுக்கீரை, ஊதா வரி பெரிய கத்திரி, கஸ்தூரி வெண்டை, சிவப்பு வெண்டை, மதனப்பள்ளி தக்காளி, காசி தக்காளி, செர்ரி தக்காளி, மூக்குத்தி அவரை, சிவப்பு மக்காச்சோளம், வெள்ளை மக்காச்சோளம், பல நிறங்களில் காய்க்கும் மக்காச்சோளம், மரவள்ளிக் கிழங்கு, வல்லாரை மற்றும் பல்வேறு மாநிலங்களில் விளையும் நாட்டு வகை காய்கறிகள் என பலவற்றை பயிர் செய்கிறேன்.

நாட்டு ரக காய்கறிகளைத் தோட்டத்தில் விளைவித்து நேரடியாக நாங்களே வீட்டில் விற்பனை செய்து வருகிறோம். அதிகமான விளைச்சல் வந்தால் அதனை நம் சந்தை, பாரம்பரிய விதைத் திருவிழாக்கள், கண்காட்சிகளில் வைத்தும் விற்பனை செய்கிறோம். எந்த உரமும் போடாமல், பூச்சிக்கொல்லி மருந்தும் தெளிக்காமல் அதிக மகசூல் பெறுகிறேன். பசுமையான காய்கறிகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியமானவை என பலரும் ஆங்காங்கே சொல்வதைக் கேட்டு தினமும் ஏராளமானோர் என்னுடைய தோட்டத்துக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கிறார்கள். இதுபோக வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் நடைபெறும் விதைத் திருவிழாக்கள், காய்கறி கண்காட்சியில் காய்கறிகளை அன்றைய நிலவர விலைக்கு விற்பனை செய்கிறேன். இயற்கையில் விளைந்த அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்ததால் கடந்த மாதத்தில் மட்டும் எனக்கு ரூ.80 ஆயிரம் வருமானம் கிடைத்தது. பெரியளவில் செலவு இல்லை என்பதால் அத்தனையும் லாபம்தான்’’ என்கிறார்.

தொடர்புக்கு:

மணிகண்டன்: 90252 70120.

மணிகண்டன் தனது விவசாய முறையை சுழற்சி முறை விவசாயமாக செய்து வருகிறார். அதாவது ஒரு போகம் நெல் நட்டால், அடுத்த போகம் நிலக்கடலை போடுவது, அதற்கடுத்து வேறு ஏதாவது பயிர் செய்வது என மாற்றி மாற்றி பயிரிடுவார். நிலக்கடலையில் நைட்ரஜன், ஆக்ஸிஜன் அதிகம் இருப்பதால் இவை அடுத்து நடவு செய்ய இருக்கும் நெல்லுக்கு நல்ல அடியுரமாக இருக்கும். இதனால் நெல் சாகுபடிக்கு முன்பாக நிலக்கடலை பயிரிடுகிறார்.