Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எங்கள் தங்கம்

‘‘வீட்டுக்கு மகாலட்சுமிதான் மருமகளா வரணுமா என்ன? காளி கூட வரலாம்‘‘ இந்த ஒற்றை வரிதான் படத்தின் கதைக்கரு.

காதலித்து வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொள்ளும் திகாந்த் மன்சாலே தன் மனைவி சமந்தாவுடன் தன் சொந்த ஊருக்குத் திரும்புகிறார். சமந்தா ஆதரவற்ற பெண்ணாக ஒரு பெரிய குடும்பத்துக்கு மருமகளாக வருகிறார். வேண்டா வெறுப்பாக திகாந்த் வீட்டிலும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் மூத்த மருமகளாக தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும், காம்படிஷனும் சமந்தாவுக்கு சோதனையாக மாறுகிறது.

இதற்கிடையில் ஒரு மர்ம கும்பல் சமந்தாவை கொலை செய்ய தேடி வருகிறார்கள். அவர்களுக்கு என்ன தேவை, சமந்தாவின் பின்னணி என்ன என நீளும் கதையில், அவர்களையும் சமாளித்து, மருமகளாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவும் வேண்டிய அவசியம் சமந்தாவுக்கும் ஏராளமான சவால்களை வைக்கிறது.

திருமணத்துக்குப் பெண் தேவை என்கிற விளம்பரத்தில், அழகா இருக்கணும், நல்ல படித்த பெண்ணாக இருக்கணும், சமைக்கத் தெரியணும் என்கிற பல தகுதிகள் கேட்கறாங்க. இதிலே ஒரு தகுதிகூட இல்லாத என்னை மாதிரி பொண்ணுங்க என்ன செய்வாங்க.

எனக்கு சமைக்கவோ அல்லது சின்ன மருமகள் மாதிரி வீட்டிலே இருக்க எல்லாருக்கும் என்ன தேவைன்னு கேட்டு செய்யவோ தெரியாது. ஆனால் இந்தக் குடும்பத்துக்கு ஒரு பிரச்னைன்னா என் உயிரைக் கொடுத்தாவது நான் காப்பாத்துவேன் அந்தத் தகுதி எனக்கு இருக்கு” என சமந்தா சொல்லும் காட்சி அருமை.

‘‘வீட்டுக்கு மகாலட்சுமிதான் வரணும்ன்னு இல்லை, காளிகூட வரலாம் என புல்லட்களை நிரப்பி துப்பாக்கியைக் கொடுக்கும் மாமனார், அதை வாங்கி காலில் லோட் செய்து சுழற்றிச் சுடும் சமந்தா காட்சிகள் மாஸ் ரகம்.

நந்தினி ரெட்டி இயக்கத்தில் ராஜ் நிதிமோரு கதையில் , வீட்டுக்கு வரும் மருமகள் என்றால் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, இதெல்லாம் இருக்க வேண்டும் என்கிற பழமையை உடைத்து தைரியம், தன்னம்பிக்கை, உத்வேகம், வீரம் எல்லாம் தான் இன்றைய காலத்துக்குத் தேவை என்கிற புது குடும்ப வகுப்பெடுத்திருக்கிறது. இந்த ‘‘எங்கள் தங்கம்‘‘ (தெலுங்கில் மா இன்டி பங்காரம்”) திரைப்படம்.

- மகளிர் மலர் குழு