Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆர்கானிக் முறையில் ஆண்டு முழுவதும் கரும்பு சாகுபடி... வெல்லம் தயாரிப்பதால் பன்மடங்கு லாபம்!

புதுச்சேரி மாநிலத்தின் சில எல்லைப் பகுதிகள் தமிழகத்தின் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களோடு ஒட்டியபடி இருக்கும். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தின் ஒரு எல்லையோடு புதுச்சேரியின் ஒரு எல்லை இணையும் பகுதிதான் புராணசிங்கு பாளையம் என்கிற பி.எஸ். பாளையம். இந்த ஊரில் ஒரு சிறப்பு இருக்கிறது. இந்த ஊரில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட விவசாயிகள் ரசாயனத்தைக் கைவிட்டு முழுக்க முழுக்க இயற்கை வழியில் விவசாயத்தை மேற்கொள்வதுதான் அந்த சிறப்பு. இத்தகைய சிறப்புமிக்க ஊரில் இயற்கை முறையில் கரும்பு விளைவிக்கும் ரவிச்சந்திரன் என்ற விவசாயி, தாம் விளைவிக்கும் கரும்பை மதிப்புக்கூட்டி வெல்லமாகவும், நாட்டுச் சர்க்கரையாகவும் மாற்றிவிடுகிறார். இதையறிந்து ஒரு காலைப்பொழுதில் பி.எஸ்.பாளையத்திற்கு சென்று ரவிச்சந்திரனைச் சந்தித்துப்பேசினோம்.

``தாத்தாவுக்குப் பிறகு அப்பாதான் ஐம்பத்தி ஐந்து ஏக்கர் விவசாய நிலத்தையும் கவனித்து வந்தார். கரும்பு, நிலக்கடலை, சோளம், கேழ்வரகு என பலவித பயிர்கள் வருடம் முழுவதும் அமோகமாக விளையும். அப்பாவுக்குத் துணையாகத்தான் நானும் விவசாயத்திற்கு வந்தேன். பின்பு நானும் முழுநேர விவசாயியாக மாறினேன்’’ எனத் தனது பேச்சைத் தொடங்கிய ரவிச்சந்திரன், தொடர்ந்து பேசினார்.``எனக்கு 71 வயதாகிறது. அந்த காலத்திலேயே பி.எஸ்.சி படித்தேன். சகோதரர்கள் நான்கு பேர். நான்கு பேரில் நானே மூத்தவன் என்பதால் அப்பாவுக்குத் துணையாக விவசாயத்திற்குள் வந்தேன். அப்படித்தான் எனக்கு விவசாயம் அறிமுகம் ஆனது. கரும்பை சாகுபடி செய்து சர்க்கரை ஆலைக்கு அனுப்புவது, சிறுதானியங்கள் சாகுபடி செய்து விற்பனை செய்வது என சாகுபடி முதல் விற்பனை வரை விவசாயத்தின் அனைத்து நுணுக்கங்களையும் சிறுவயதிலே கற்றுக்கொண்டேன். நான் விவசாயத்திற்கு வந்ததும் எனது தம்பிகள் வெவ்வேறு துறையில் பணிக்குச் சென்றார்கள். 55 ஏக்கரிலும் சாகுபடி நடந்தது. அப்போது ரசாயன முறையில்தான் விவசாயம் செய்து வந்தோம். சுமார் 30 வருடம் ஒரே நிலத்தில் ரசாயன முறையில் விவசாயம் செய்யவே, மண்ணில் உள்ள சத்துக்கள் குறைந்து விளைச்சலும் குறைவானது. மண் இறுகி காற்றுகூட மண்ணுக்குள் செல்ல முடியாதபடி மண் சத்தற்று இருந்தது. அதனால், விவசாய முறையை மாற்றலாம், அதே சமயம் மரப்பயிர்களை பயிரிடலாமென்று கரும்பு மற்றும் தானியச் சாகுபடியை நிறுத்திவிட்டு மரப்பயிர் சாகுபடியைத் தொடங்கினேன்.

நெல்லி, சவுக்கு போன்ற பல மரப் பயிர்களை நட்டோம். அந்த சமயத்தில் எனது கடைசி தம்பியும் எனக்குத் துணையாக விவசாயத்திற்குள் வந்தார். அவருக்கு இயற்கை விவசாயத்தில் நல்ல ஆர்வம். நம்மாழ்வார் போன்ற பல இயற்கை விவசாய ஆர்வலர்களிடம் இயற்கை முறை சாகுபடி பற்றி தெரிந்துகொண்டு, முழுமையான இயற்கை விவசாயத்தை செய்யத் தொடங்கினோம். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமிலம் என அனைத்து வகையான கரைசல்களையும் மரப்பயிர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தோம். எட்டு வருடங்கள் மரப்பயிர்கள் வளர்த்தோம். அதை, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை என்பதால், மீண்டும் பலபயிர் சாகுபடிக்கு செல்லலாமென முடிவெடுத்து விவசாயத்தை இரண்டாக பிரித்து நான் ஒரு பக்கமும் எனது தம்பி ஒரு பக்கமும் என விவசாயத்தை செய்யத் தொடங்கினோம்.

அந்த வகையில் நான் இப்போது 13 ஏக்கரில் முழுமையான இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். அதில் 10 ஏக்கரில் கரும்பு, 3 ஏக்கரில் நிலக்கடலை, எள், சோளம், காய்கறிகள், மஞ்சள், வாழை என பலவித பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். வாரம் இரண்டு முறை காய்கறிகளை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புகிறேன். 10 ஏக்கரில் விளையும் கரும்புகளை வெல்லமாகவும் சர்க்கரையாகவும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்கிறேன். அந்த வகையில் வருடம் முழுவதும் கரும்பு சாகுபடி நடந்தபடி இருக்கும். அதாவது, ஒவ்வொரு 45 நாட்களுக்கும் ஒருமுறை ஒன்றரை ஏக்கர் கரும்பை அறுவடை செய்து, வெல்லமாக மாற்றிய பிறகு அடுத்த ஒன்றரை ஏக்கர் கரும்பை அறுவடை செய்வேன். இப்படி அறுவடை செய்வதால் வெவ்வேறு பருவத்திலான கரும்பு எனது நிலத்தில் வளரும். அதேசமயம், எனக்கும் வருடம் முழுவதும் தொழில் நடந்தபடி இருக்கும். அதுபோக, மற்ற விவசாயிகளிடமிருந்தும் கரும்பை வாங்கி, அதையும் நான் மதிப்புக்கூட்டி விற்பனை செய்கிறேன்.

கரும்பு சாகுபடியைப் பொருத்தவரை ஒரு கரும்புக்கும் அடுத்த கரும்புக்குமான இடைவெளி இரண்டு அடியாகவும், ஒரு வரிசைக்கும் அடுத்த வரிசைக்குமான இடைவெளி 8 அடியாகவும் வைத்திருக்கிறேன். 8 அடி இடைவெளி அதிகம்தான். ஆனால், சூரியஒளி நிலத்திற்கு நேரடியாகவும், அதிகமாகவும் செல்ல வேண்டும் என்பதற்காக இந்த இடைவெளியை விட்டிருக்கிறேன். மேலும் இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அதாவது இரண்டு வரிசைக்கும் இடையில் சணப்பை போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை வளர்த்து மடக்கி உழவு செய்கிறோம். இயற்கையான தழைச்சத்தை நிலத்திற்கு வழங்க இந்த ஏற்பாட்டை செய்கிறேன். இதற்காகவும் இந்த இடைவெளியைக் கடைபிடிக்கிறேன். சராசரியாக ஒரு ஏக்கருக்கு 30 டன் வரை கரும்பு கிடைக்கிறது. இயற்கை விவசாயமென்பதால் இவ்வளவுதான் கிடைக்கும். அந்த வகையில் 10 ஏக்கருக்கு வருடத்திற்கு 300 டன் சாகுபடி செய்கிறேன். அதேபோல, ஒரு டன் கரும்பில் இருந்து 100 கிலோ வெல்லம் தயாரிக்கலாம். ஒரு டன் கரும்பை வெளியே விற்பனை செய்தால், 3 ஆயிரம் கிடைக்கும். அதே ஒரு டன் கரும்பை வெல்லமாக்கினால், 100 கிலோ வெல்லம் கிடைக்கும். ஒரு கிலோ வெல்லத்தை சில்லரையாக 100க்கும், மொத்தமாக 90க்கும் விற்பனை செய்கிறேன்.

அதாவது ஒரு டன் கரும்பை 110 கிலோ வெல்லமாக மாற்றி சராசரியாக ரூ.9000க்கு விற்பனை செய்கிறேன். இதில், ஒரு டன் கரும்பு ரூ.3000, வெல்லம் தயாரிக்க ரூ.3000, இதர செலவாக ரூ.1000 ஆனால் கூட, மீதமுள்ள ரூ.2000 லாபம். அதாவது, ஒரு டன் கரும்பை மதிப்புக்கூட்டி விற்பதால் கூடுதலாக ரூ.2000 கிடைக்கிறது. இப்படி, ஒரு வருடத்தில் 300 டன் கரும்பில் இருந்து ரூ.6 லட்சம் நிச்சயமாக கிடைக்கும். அதேபோல வெல்லத்தை சில்லரை வியாபாரத்திற்கு கொடுக்கும்போது கூடுதலான லாபமும் கிடைக்கும். இதுபோக வாழை, காய்கறிகள் என வேறு சில சாகுபடிகளும் நடந்தபடி இருக்கும். சொந்தமாக இயற்கை அங்காடி வைத்திருப்பதால், இயற்கையில் விளைந்த பொருட்களை விற்பனை செய்ய எளிதாகவும் இருக்கிறது’’ என மகிழ்வோடு பேசி முடித்தார் ரவிச்சந்திரன்.

தொடர்புக்கு:

ரவிச்சந்திரன்: 94432 36983.

* 13 ஏக்கரில் விவசாயம் பார்க்கும் ராமச்சந்திரன் 10க்கும் அதிகமான மாடுகளையும் வளர்த்து வருகிறார். அதிலிருந்து கிடைக்கும் கழிவுகளை இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார். தினமும் கிடைக்கும் 25 லிட்டர் பாலை விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் பார்த்து வருகிறார்.

* 10 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்து வரும் ரவிச்சந்திரன், மறுதாம்பு முறையிலும் மகசூல் பார்க்கிறார். அதாவது ஒருமுறை நடவு செய்த கரும்பிலிருந்து, பல வருடங்களுக்கு மகசூல் எடுக்கிறார். கரும்பு சாகுபடி செய்துவிட்டு, அதன் தோகைகளை அதே நிலத்திலேயே போட்டு விடுகிறார். அந்த தோகைகள் நன்றாக மக்கி, நிலத்தில் நுண்ணுயிர்களை பெருக்கமடையச் செய்கின்றன. இதன்மூலம் கரும்புக்குத் தேவையான அனைத்து சத்துகளும் எளிதில் கிடைத்துவிடுகின்றன.