தர்மபுரியில் இருந்து முப்பத்தி ஐந்து கி.மீ தொலைவில் இருக்கிறது மெணசி கிராமம். பாப்பிரெட்டிபட்டி வட்டத்திற்கு உட்பட்ட இந்தக் கிராமத்தின் பெரும்பான்மையான தொழில் விவசாயம்தான். சுமார் 1500 குடும்பம் இருக்கும் இவ்வூரில், நெல், கரும்பு தொடங்கி மரவள்ளி, வேர்க்கடலை, உளுந்து என பலதரப்பட்ட விவசாயம் வருடம் முழுவதும் நடந்தபடி இருக்கும். அந்த ஊரில்தான் பாரம்பரியமாக விவசாயம் செய்து வருகிறார் ச.தமிழ்வேந்தன். 35 வருடங்களாக விவசாயப் பணி, அதில் கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் என இயங்கி வரும் தமிழ்வேந்தனைச் சந்தித்தோம். ``எங்கள் கிராமத்தில் என்னையும் சேர்த்து மூன்று பேர் இயற்கை விவசாயம் செய்கிறோம். ரசாயன உரமோ, இயற்கை முறை விவசாயமோ... எந்த விவசாயம் செய்தாலும், எல்லா விளைச்சல் பொருளுக்கும் ஒரே விலைதான். ஆனால், இயற்கை முறையில்தான் விவசாயம் செய்ய வேண்டும். ரசாயன உரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று உறுதியாக இருக்கிறேன்’’ என பேசத் தொடங்கினார் தமிழ் வேந்தன்.
``பாட்டன், பூட்டன் காலத்திலெல்லாம் ரசாயன உரமே கிடையாது. எல்லாருக்கும் தெரிந்தது ஒரே விவசாயம்தான். அதுவும் இயற்கை விவசாயம்தான். விளைச்சல் அதிகம் வேண்டும் என்பதற்காக செயற்கை உரங்களைப் பயன்படுத்தியதுதான் பல்வேறு நோய்களுக்கு காரணம். எனக்குமே அந்த உண்மை தாமதமாகத்தான் தெரிய வந்தது. அப்படி நான் இயற்கை விவசாயத்திற்கு வந்ததற்கு முழுமுதற் காரணம், நம்மாழ்வார்தான். அவரது பேச்சுக்களில் ஒரு உண்மை இருந்தது. அதிகமாக விளைச்சல் எடுக்க வேண்டுமென்றுதான் நினைத்தோமே தவிர மண்ணைப் பற்றியோ, நோய்களைப் பற்றியோ யோசிக்கவில்லை. அதனால்தான், என்னால் முடிந்தளவு நல்ல விவசாயத்தையே செய்வோமென நினைத்து கடந்த பத்து வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்.
எனக்குச் சொந்தமாக நான்கு ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அதில், இரண்டு ஏக்கரில் மரவள்ளியும், மீதமுள்ள இரண்டு ஏக்கரில் பலவகையான பயிர்களும் சாகுபடி செய்து வருகிறேன். அனைத்து பயிர்களையும் இயற்கை முறையில் சாகுபடி செய்கிறேன். என்னளவில் இயற்கை விவசாயமென்றால் செயற்கை உரங்களை தவிர்த்தல்தான். செயற்கை உரங்களுக்குப் பதிலாக, இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து விவசாயம் செய்வதே சிறந்தது.எந்த சாகுபடியை தொடங்குவதற்கு முன்பும், சாகுபடிக்குத் தேர்ந்தெடுத்த நிலத்தை மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே உழவைத் தொடங்க வேண்டும். அந்த உழவின்போதே, தொழு உரங்களை நிலத்தில் கொட்டி மீண்டும் உழ வேண்டும். பின், அந்நிலத்தில் பசுந்தாவரங்கள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றை விதைத்து வளர்க்க வேண்டும். அவை, வளர்ந்தபிறகு அவற்றையும் நிலத்தில் மடக்கி உழ வேண்டும். அப்படி உழும்போதுதான், நிலத்திற்குத் தேவையான சத்துகள் கிடைக்கும். நான் இந்த முறையில்தான் அனைத்து சாகுபடியையும் தொடங்குகிறேன்.
இப்படி அடியுரம் கொடுக்கப்பட்ட நிலத்தில் மரவள்ளிக் குச்சிகளை நடத் தொடங்குவேன். நான் சாகுபடி செய்திருக்கும் மரவள்ளி வெள்ளை தாய்லாந்து ரகத்தைச் சேர்ந்தது. மரவள்ளியைப் பொருத்தவரை அனைத்து ரகமும் ஒரு வருட பயிர்தான். ஆனால், இந்த வெள்ளை தாய்லாந்து ரக மரவள்ளி பத்து மாதத்திலேயே சாகுபடிக்குத் தயாராகிவிடும். அதாவது, மற்ற ரகங்கள் ஒரு வருடத்தில் கொடுக்கும் விளைச்சலை இந்த ரகம் பத்து மாதத்திலேயே கொடுக்கத் தொடங்கிவிடும். இந்த ரகத்தை நான் முதன்முதலில் சாகுபடி செய்யும்போது, எட்டு மாதத்திலேயே அறுவடை செய்து விட்டேன். இப்போதும் இதே ரகத்தையே சாகுபடி செய்திருக்கிறேன். நடவுக்குச்சிகளை இரண்டரை அடி இடைவெளியில் நடவு செய்திருக்கிறேன். வரிசைக்கு வரிசை 3 அடி இடைவெளி விட்டிருக்கிறேன். இந்த முறையில் நடவு செய்யப்பட்ட மரவள்ளிக்கு, முதல் 15 நாட்கள் தொடர்ந்து 10 நிமிடம் மட்டும் நீர் பாய்ச்சுவேன். அடுத்த, ஒரு மாத காலத்திற்கு வாரம் ஒருமுறை நீர் பாய்ச்சுவேன். பின், சரியான சமயத்தில் களை எடுப்பது அவசியம். அதேபோல், மரவள்ளிக்கு வளர்ச்சி ஊக்கியாக பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம் போன்றவற்றை பாசன நீரில் கலந்து விடுவேன். பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு பல வகையான புண்ணாக்குகளை கோமியத்தோடு கரைத்து, பயிர்களுக்கு கொடுக்கிறேன். அதேபோல் மீன் அமிலத்தையும் பயிர்களுக்கு கொடுத்து வருகிறேன். இப்படித்தான் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறேன். இந்த முறையில் சாகுபடி செய்வதால், மகசூல் குறைவாகத்தான் கிடைக்கிறது.
அதாவது ஏக்கருக்கு 10ல் இருந்து 15 டன் மரவள்ளி அறுவடை செய்யலாம். அந்த வகையில், வருடம் ஒருமுறை இரண்டு ஏக்கரிலிருந்து சராசரியாக 30 டன் கிழங்குகளை மகசூலாக எடுக்கிறேன். ஒரு டன் மரவள்ளிக்கிழங்கை எங்கள் பகுதியில் ரூ.7000க்கு வாங்கிச் செல்கிறார்கள். அந்த வகையில் மரவள்ளியில் இருந்து வருடத்திற்கு 2 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. அதேபோல், உழவு, களை பறிப்பு, தொழு உரம், கரைசல்கள் தயாரிப்பு, அறுவடை என ஒரு ஏக்கர் மரவள்ளியை சாகுபடி செய்து அறுவடை எடுப்பது வரை ரூ.50 ஆயிரம் செலவு ஆகும். அப்படிப் பார்த்தால், வருடத்திற்கு இரண்டு ஏக்கர் மரவள்ளி சாகுபடியில் இருந்து எனக்கு ஒரு லட்சம் லாபமாக கிடைக்கிறது. ரசாயன முறையில் சாகுபடி செய்த மரவள்ளி, இயற்கை முறையில் சாகுபடி செய்த மரவள்ளி என அனைத்தையும் ஒரே விலைக்குத்தான் வாங்கிச் செல்கிறார்கள். நான் இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் மண்வளம் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. இது மற்ற பயிர்கள் செழித்து வளர ஏதுவாக இருக்கும். ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட மரவள்ளி கிழங்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் அபரிமிதமான லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதை எதிர்காலத்தில் செய்யலாம் என திட்டமிடுகிறோம். குறைந்தபட்சம் நம் நாட்டில் உள்ள சில பகுதிகளுக்கு அனுப்பி வைக்கலாம்’’ என பேசி முடித்த தமிழ்வேந்தனின் முகத்தில் நம்பிக்கை மிளிர்கிறது.
தொடர்புக்கு: தமிழ் வேந்தன்: 97869 51683.
பயிர் சாகுபடி போக 3 பசு மாடுகள் வளர்த்து வருகிறார் தமிழ்வேந்தன். தற்போது, இரண்டு மாடுகள் கன்று போடும் பருவத்தில் உள்ளன. ஒரு மாட்டில் இருந்து பால் கறந்து விற்பனை செய்கிறார். தினமும் 8 லிட்டர் வரை பால் கிடைக்கும் நிலையில், மூன்று மாடுகளும் கறவைக்கு வரும்போது, நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் பால் வரை கிடைக்கும் என்கிறார். அதுபோக, மாடுகளில் இருந்து கிடைக்கும் கழிவுகளை தனது இயற்கை விவசாயத்திற்குப் பயன்படுத்தி வருகிறார்.

