ஆர்கானிக் பொருட்களை வாங்க பிரத்யேக கஸ்டமர் இருக்காங்க...
நிலக்கடலை, மரவள்ளி, தென்னை போன்ற பயிர்கள்தான் எங்கள் பகுதியின் பிரதானப் பயிர்கள். அப்பா காலத்திலும் இந்தப் பயிர்களைத்தான் சாகுபடி செய்தோம். தொடர்ந்து ஒரே விவசாயத்தை செய்ய வேண்டாம். ஒரு மாறுதலுக்காக மாற்றுப் பயிர்களையும் சாகுபடி செய்வோம் என யோசித்தேன். அப்படி யோசித்ததன் விளைவாகத்தான், எனது தோட்டத்தில் பல வகையான காய்கறிகள் மற்றும் மலர்களை சாகுபடி செய்து தினந்தோறும் அறுவடை எடுக்கிறேன்’’ என மகிழ்வோடு பேசத் தொடங்கினார் புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த புகழ்.`` சிறுவயதில் இருந்தே விவசாயம் பரிச்சயம்தான். கல்லூரி செல்லும்போதும், வேறு தொழில் செய்யும்போதும்கூட விவசாயத்தை கைவிட்டதில்லை. ஆனால், கடந்த பதினேழு ஆண்டுகளாகத்தான் முழுநேர விவசாயியாக, விவசாயத்தைத் வாழ்வாதாரத் தொழி லாகச் செய்து வருகிறேன்’’ என பேச்சைத் தொடர்ந்தார்.
``எனக்குச் சொந்தமாக 2 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தில்தான் தற்போது விவசாயம் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் சிறிதாக, சீசனுக்குத் தகுந்தபடி விவசாயம் செய்தேன். ஆனால், இப்போது அனைத்து வகையான விவசாயமும் வருடம் முழுவதும் செய்து வருகிறேன். ஒவ்வொரு சீசனுக்கும் என்ன மாதிரியான காய்கறிகள் பயிரிட முடியுமோ அவற்றை சாகுபடி செய்கிறேன். அந்த வகையில் வெண்டை, கத்தரி, எலுமிச்சை தொடங்கி பாகல், பீர்க்கன், புடலை என பல காய்கறிகள் அறுவடை செய்து வருகிறேன்.
முதலில் ரசாயன முறை விவசாயம்தான் செய்து வந்தேன். கடந்த 4 வருடங்களாக இயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டேன். இயற்கை விவசாயத்திற்கு மாறினால் நிறைய மானியங்கள் கிடைக்குமென எங்கள் பகுதியில் உள்ள வேளாண் அதிகாரிகள் கூறினார்கள். எனக்கும் சத்து மிகுந்த உணவுப்பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டுமென ஆசை. அதனால், இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பற்றிய பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டேன். அங்கு கிடைத்த அனுபவங்களை வைத்து எனது நிலத்தில் இயற்கை விவசாயத்தைத் தொடங்கினேன்.
முதலில் சிரமமாக இருந்தது. இப்போது, இயற்கை விவசாயம்தான் சிறந்தது என்ற மனநிலை வந்திருக்கிறது. இயற்கை சாகுபடிக்கு மண் பழக்கப்பட்டதால், விளைச்சலுமே நல்ல முறையில் கிடைக்கிறது. எனது தோட்டத்தில் தினமும் மாலை நேரங்களில் அறுவடைப்பணிகள் நடக்கும். மாலையில் அறுவடை செய்யப்படும் காய்கறிகளும் கீரைகளும் அடுத்த நாள் அதிகாலை நான்கு மணிக்கு சந்தையில் இருக்கும். காய்கறிகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு நாள் அறுவடையாகும். பந்தல் காய்கறிகள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறையும் வெண்டை, கத்தரி, கீரை போன்ற பயிர்கள் தினசரியும் அறுவடை செய்யப்படும்.
இப்படி அறுவடை செய்யப்பட்டு விற்பனையாகிற காய்கறிகளில் இருந்து தினமும் சராசரியாக ஆயிரம் ரூபாய் வருமானமாக கிடைக்கும். இந்த விவசாயம் செய்வதற்கு முன்பு இளநீர் ஏற்றுமதி செய்கிற தொழில் செய்தேன். அது சரிவர அமையவில்லை. ஆனால், அந்தத் தொழில் செய்யும்போது எவ்வளவு கிடைக்குமோ, அதை இப்போது விவசாயத்தில் இருந்தே எடுக்கிறேன். அதுமட்டுமல்ல, இயற்கை முறை விவசாயம் செய்வதால் மனதிருப்தியும் கிடைக்கிறது. முன்பெல்லாம் தொழுஉரத்தை பயன்படுத்தவே மாட்டேன். இப்போது, தொழுஉரம்தான் எனது விவசாயத்திற்கு மூலதனம். மீன் அமிலம், பஞ்சகவ்யா, அமிர்தகரைசல், ஜீவாமிர்தம் என அனைத்தையும் தயாரித்து பயன்படுத்துகிறேன். ரசாயன முறையில் விவசாயம் செய்யும்போது செடிகள் விரைவில் அறுவடையை நிறுத்திவிடும். செடியுமே பார்ப்பதற்கு நோய்வந்த செடிபோல வாடிப்போன நிலையில் இருக்கும். ஆனால், இப்போது அப்படியல்ல. அதிக காய்களை அதிக நாட்கள் தருவதோடு காய்களுமே பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.
இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களை வாங்குவதற்கென்றே தனி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அதனால், அறுவடை பொருட்களை விற்பனை செய்வதற்கு சுலபமாக இருக்கிறது. காய் கறிகளைத் தொடர்ந்து பழ மரங்களையும் சாகுபடி செய்து வருகிறேன். ஒருபக்கம் கீரை, ஒரு பக்கம் காய்கறிகள், ஒரு பக்கம் பந்தல் காய்கறிகள், ஒரு பக்கம் மரவள்ளி என 2 ஏக்கரில் எவ்வளவு விவசாயம் செய்ய முடியுமோ, அதனை நல்ல முறையில் செய்து வருகிறேன்’’ என மகிழ்வோடு பேசி முடித்தார் புகழ்.
தொடர்புக்கு: புகழ்: 99440 74925.
ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.1000 வருமானம் பார்க்கும் விவசாயி புகழ், இயற்கை விவசாய இடுபொருட்கள் வாங்க மாதம் 5 ஆயிரம் வரை செலவாகிறது என்கிறார்.
காய்கறிகள் சாகுபடி போக கோழிக்கொண்டை, கேந்தி போன்ற மலர்களையும் சாகுபடி செய்து வருகிறார் விவசாயி புகழ். ஒருபுறம் காய்கறி அறுவடை என்றால், மறுபுறம் மலர்கள் அறுவடையும் நடந்தபடி இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கேந்தி அறுவடையும், வாரம் ஒருமுறை கோழிக்கொண்டை அறுவடையும் செய்து வருகிறார்.