தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐந்தடுக்கு முறையில் ஆர்கானிக் ஃபார்மிங்... 25 வகையான பயிர்கள்!

விவசாயம் செய்வதற்கு வேளாண் தொழில் தெரிந்தாலே போதும். குறுகிய இடத்திலும் நிறைவான லாபம் பார்க்கலாம். அதற்கு உதாரணமாய் இருப்பவர்தான் கோவை கிணத்துக்கடவுக்கு அருகேயுள்ள மெட்டுவாளி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து. ஆம். தனக்குச் சொந்தமான 60 சென்ட் நிலத்தில் 25 வகையான காய்கறிகள் சாகுபடி செய்து வருகிறார். அதுமட்டுமல்ல, ஐந்தடுக்கு முறையில் பயிர்களை பயிரிட்டு தினமும் ஏதாவதொரு காய்கறியை சாகுபடி செய்து நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறார். மாரிமுத்துவின் விவசாய அனுபவங்கள் பற்றியும், அவரது ஐந்தடுக்கு விவசாய முறையைப் பற்றியும் தெரிந்துகொள்ள ஒரு காலைப் பொழுதில் அவரது விவசாய நிலத்திற்குச் சென்றிருந்தோம்.

Advertisement

“எனக்குச் சொந்தமாக 85 சென்ட் நிலம் இருக்கு. அதில் ஆடு, மாடு, கோழி, புறா வளர்ப்புக்கான இடம்லாம் போக மீதமுள்ள 60 சென்ட்ல காய்கறிகள் பயிரிட்டிருக்கேன். ஆரம்பத்தில் எல்லோரையும்போல ஒற்றைப்பயிர் விவசாயம்தான் செய்தேன். பின், 2017ல் ஆர்கானிக் ஃபார்மிங்க்கு மாறினேன். இயற்கை விவசாயத்துக்கு மாறிய பிறகும் ஒற்றைப் பயிரா காலிப்ளவர்தான் பண்ணிக்கிட்டு இருந்தேன். காலிபிளவரை ஆர்கானிக்ல பண்ணதால அதோட சுவைக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. மக்கள் வேற காய்கறிகளும் இருந்தா குடுங்கன்னு கேட்டாங்க. அதனால பாவக்காய், பீர்க்கன்காய், புடலங்காய்ன்னு கொடிக்காய்கறிகளும் பயிரிட்டேன். அதன் தொடர்ச்சியாக இன்னும் பல காய்கறிகளையும் சாகுபடி செய்தேன் என்றவர் மேலும் தொடர்ந்தார்.

2006ல் நம்மாழ்வார் ஐயாகிட்ட பயிற்சி எடுத்திருந்தேன். 2009ல் சுபாஷ் பாலேக்கரோட 3 நாள் பயிற்சி வகுப்பிலும் கலந்துகிட்டேன். அங்குதான், பல அடுக்கு விவசாயம் பத்தி தெரிஞ்சிக்கிட்டேன். வழக்கமா ஒரு சொட்டுக்கு (சொட்டுநீர் பாசன துளை) ஒரு காலிப்ளவர்தான் நடுவாங்க. ஆனா, நான் ரெண்டு பக்கமும் ரெண்டு நாத்து நட்டேன். ரெண்டு காலிஃப்ளவர் நாத்துக்கு நடுவுல பச்சைமிளகாய் நாத்து வச்சிடுவேன். இது பக்கத்துலயே காராமணி நட்டுவோம். அதேபோல முட்டைகோஸ், ப்ரக்கோலியும் கூட நட்டேன். மிளகாய் 60 நாள்ல காய்க்கத் தொடங்கும். காலிஃப்ளவர் 60 நாள்ல பூத்து அறுவடையே முடிஞ்சிடும். காராமணியை அறுவடை பண்ணிட்டு செடியை ரொட்டாவேட்டர் வச்சி உழுது மண்வளத்துக்கு பயன்படுத்திக்கறேன்.

பயிரோட ஆயுட்காலம், செடியின் இலையோட அகலம், செடி எவ்ளோ உயரமா வளருது, எவ்ளோ வெளிச்சம் தேவை இதெல்லாம்தான் விவசாயத்தில் முக்கியமாக தெரிஞ்சுக்கனும். பஜ்ஜி மிளகாய், குடை மிளகாய், வெண்டை, கத்திரியுமே கூட பயிரிட்டேன். கத்திரிக்கு நடுவுல முள்ளங்கி, பீட்ரூட், கொத்தமல்லிலாம் நடவு பண்ணிடலாம். அது பக்கத்துலயே கொத்தவரை, வெண்டையும் போட்டிருக்கேன். கூடவே, வட்டப்பாத்தி அமைச்சி முறையில் பாகற்காய், பீர்க்கன்காய், புடலங்காய், கோவைக்காய், சுரைக்காய்ன்னு 5 கொடிக்காய்கறிகள பந்தலில் ஏத்தியாச்சு. 10 வகையான நாட்டு சுரைக்காய், அவரைக்காயில் சிறகவரை, மூக்குத்தி அவரை, பூனைக்காலி அவரை, கம்பட்டை அவரை, யானைக்காது அவரைன்னு 10 ரகம் நட்டிருக்கேன். மண் இளக்கமா இருக்கும்போது நாத்து ரகங்களில் கத்திரி நாத்து, தக்காளி நாத்து, மிளகாய் நாத்து எல்லாம் பயிர் பண்ணுவோம். 6 மாசத்துக்கு அப்புறம் மண்ணு இறுகிப் போகும். அப்போ கொத்தவரை, அவரை, வெண்டை மாதிரியான ரகங்களை பயிரிடுவேன். 60 சென்ட் நிலத்துல 25 வகையான பயிர்களை பண்றேன். இந்த முறையில் விவசாயம் செய்தால் 3 ஏக்கர்ல பண்ற விவசாயத்த 60 சென்ட்ல பண்ணலாம்.

என்னோட விவசாயத்திற்கு மாட்டு சாணத்தை ஊட்டமேற்றிய தொழு உரமாக மாற்றி பயன்படுத்தறேன். இந்த உரத்தை, ஒவ்வொரு செடியா குடுக்கணும். முதல் களையெடுப்புக்கு அடுத்த நாள், இரண்டாவது களையெடுப்புக்கு அடுத்த நாள், அறுவடை நேரம் என மூணா பிரிச்சி இந்த ஊட்டமேற்றிய தொழு உரத்தை பயிர்களுக்கு கொடுக்கணும். அதுகூடவே, மீன் அமிலம், கடலை புண்ணாக்கு கரைசலும் கொடுக்கணும். நாத்து நடறதுக்கு முன்னாடி 10 கிலோ வேப்பம்புண்ணாக்கு குடுக்கணும். 14ஆவது நாள் கடலை புண்ணாக்கு கரைசல், 21ஆவது நாள் மீன் அமிலம் குடுக்கணும். 28ஆவது நாள் எருக்கன் கரைசல் குடுக்கணும். பூச்சித்தாக்குதலில் இருந்த பயிரை இயற்கை முறையில் காக்க, அக்னி அஸ்திரமும் கொடுக்கணும். இந்த அனைத்து கரைசல்களையும் நானே தயாரிச்சுதான் பயன்படுத்துறேன்.

இதெல்லாம் போக, காங்கேயம் மாடு 4 வச்சிருக்கேன். அதிலிருந்து கிடைக்கும் பாலை மதிப்புக்கூட்டி பனீராவும் நெய்யாவும் விற்கிறேன். இந்தப் பனீர், வெண்ணெய்ல இருந்தும் மாசத்துக்கு 5000 ரூபாய் கிடைக்கும். இது எங்களுக்கு கூடுதல் வருமானம்தான்.வாட்ச்அப் மூலமா ஒரு குழு ஆரம்பித்து அதில், என்னோட விளைச்சல் பொருட்கள் அனைத்தையும் விற்பனை செய்து வருகிறேன். இந்தக் குழுவில் காய்கறி, உற்பத்திப் பொருட்கள் என அனைத்தும் வெள்ளிக்கிழமை ஆர்டர் குடுப்பாங்க. நான் சனிக்கிழமை காய்கறிகளை பறிச்சி பேக் பண்ணி வச்சி, ஞாயிற்றுக்கிழமை கொண்டுபோய் வித்துடுவோம். இதுபோக, விவசாயக் கல்லூரி மாணவர்கள் எனது தோட்டத்துல பயிற்சிக்கு வர்றாங்க.

வழக்கமான விவசாயம் பண்றவங்களுக்கு வருஷத்துல 120 நாள்தான் காசு புழங்கும். ஆனா 365 நாளும் வருவாய் தரும் விவசாயத்தை எப்படி செய்வதென யோசித்தேன். அதன் விளைவுதான் இப்ப நான் செய்ற ஐந்தடுக்கு விவசாயம். கடந்த நான்கு வருடங்களாக இந்த முறையில் விவசாயம் பார்க்கிறேன். செலவுகள் போக மாசத்துல சராசரியா 30 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது. அந்தவகையில், முழுநேர விவசாயியாக எனது தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறேன் என மகிழ்கிறார் மாரிமுத்து.

தொடர்புக்கு:

மாரிமுத்து: 90807 39280.

இப்படித்தான் செய்யணும் ஊட்டமேற்றிய தொழுஉரம்!

ஒரு வருஷம் பழைய சாணியை நிழல்ல தார்பாய் போட்டு பரப்பி வைக்கணும். அதுமேல மீன் அமிலம், கடலை புண்ணாக்கு கரைசல், ஜீவாமிர்தம் தெளிச்சு நிழல்லயே காயவைக்கணும். அப்பப்ப பெரட்டிவிடணும். நாலஞ்சு நாட்கள் அப்டியே வச்சிருந்தா, இந்த திரவமெல்லாம் சாணியோட கலந்துடும். உருண்டை பிடிச்சா புட்டு மாதிரி சேர்ந்துக்கற வரைக்கும் காயவைக்கணும். இப்படித்தான் செய்யணும் ஊட்டமேற்றிய தொழுஉரம். ஒரு ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் தேவையென்றால், இந்த ஊட்டமேற்றிய தொழு உரம் 2 டன் கொடுத்தா போதும் என்கிறார் விவசாயி மாரிமுத்து.

அக்னி அஸ்திரம்

இயற்கை விவசாயத்துல அக்னி அஸ்திரம்தான் அதிக வீரியமான பூச்சிவிரட்டி. 20 லிட்டர் கோமியத்தை மண்பானையில வச்சிக்கணும். அரை கிலோ பூண்டு, அரை கிலோ பச்சைமிளகாய், அரை கிலோ புகையிலை, 2 கிலோ வேப்பந்தழை போன்றவற்றை மண்பானைக்குள்ள போட்டு சூடுபண்ணணும். இதுக்கு 6ல் இருந்து 8 மணி நேரம் ஆகும். பூண்டு, பச்சை மிளகாயை கொஞ்சம் கொஞ்சமா போடணும். 20 லிட்டர் கோமியத்தை 12 லிட்டரா குறையும்வரை காய்ச்சணும். காய்ச்சிய பிறகு இந்த அக்னி அஸ்திரத்தை ஆற வைக்கணும். நல்லா ஆறியபிறகு, ப்ளாஸ்டிக் ட்ரம்ல ஊத்தி வச்சிக்கிட்டு, 2 நாள் கழிச்சு பயன்படுத்தலாம்.

 

Advertisement