Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உடல் உறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவ செலவுக்காக 3 ஆண்டுக்கு உதவி தொகை வழங்க நடவடிக்கை: மாநில அளவிலான குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உடல் உறுப்பு தானம் வழங்கியவருக்கு அறுவை சிகிச்சைக்குப் பின்பு மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநில அளவிலான குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு பேருக்கு சிறுநீரக தானம் வழங்க நெருங்கிய உறவினர்கள் அல்லாதோர் முன்வந்தனர். இதனால், சிறுநீரக தானத்துக்கு ஒப்புதல் வழங்கக் கோரி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழுவுக்கு அந்த மருத்துவமனை விண்ணப்பிக்கவில்லை.

இதையடுத்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்க கோரி தானம் பெறுபவர்களும், வழங்குபவர்களும் சேர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனித உடல் உறுப்புகள் விற்பனையை தடுக்கும் நோக்கில், உடல் உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. நெருங்கிய உறவினர்கள் அல்லாதவர்கள் உறுப்பு தானம் செய்ய இந்த சட்டத்தில் எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

அதேசமயம், மாநில அளவிலான அனுமதியளிக்கும் குழுவின் ஒப்புதலைப் பெறவேண்டும். உடல் உறுப்பு தானத்துக்கு ஒப்புதல் கோரும் விண்ணப்பங்களை மருத்துவமனைகள் தான் அனுப்ப வேண்டும் என்று மாநில அளவிலான குழு வற்புறுத்தக் கூடாது. தானம் பெறுபவரும், வழங்குபவரும் இணைந்து மாநில அளவிலான குழுவுக்கு விண்ணப்பிக்கவேண்டும். உடல் உறுப்பு தானம் வழங்குவதில் வர்த்தக ரீதியிலான பரிவர்த்தனை இல்லை என்றால், தானத்துக்கு ஒப்புதல் வழங்க கோரிய விண்ணப்பத்தை மாநில அளவிலான குழு நிராகரிக்க கூடாது.

அன்பின் அடிப்படையில் தானம் வழங்குவது தொடர்பான விதிகளை மாநில அரசு வகுக்க வேண்டும். உடல் உறுப்பு தானத்துக்கு ஒப்புதல் கோரும் விண்ணப்பங்களை பரிசீலித்து, ஒப்புதல் வழங்குவதுடன் மாநில அளவிலான குழுவின் பணிகள் முடிவடைந்து விடவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிக்க, உறுப்பு தானம் வழங்கியவருக்கு மருத்துவ காப்பீடு செய்வதுடன், மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கத் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.