புதிய கட்சியை பதிவு செய்ய திட்டம்?.. பரபரப்பான அரசியல் சூழலில் ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக டெல்லி சென்றார். நவ., 24 ஆம் தேதி சென்னை வேப்பேரியில் அதிமுக உரிமை மீட்புக் குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதாகக் கூறியிருந்தார். இதனால், முன்பு இருந்ததைப் போன்று அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் இல்லையென்றால் இந்த விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார்.
டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு டிச.15 வரை கெடு விதித்திருந்த நிலையில் திடீர் பயணமாக ஓபிஎஸ் டெல்லி சென்றார். டெல்லியில் கூட்டணி தொடர்பாக பாஜக தலைவர் நட்டாவிடம் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் சரிபார்ப்பு, ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வரை பாஜக தலைவர்கள் யாரும் ஓபிஎஸ்சை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.