Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை மார்ச் 9 வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை மார்ச் 9 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இந்தியா வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மக்களவை கடந்த வாரம் முழுமையாக முடங்கியது. இந்த வாரத்தில் ஓரிரு நாட்கள் சிறு சிறு பிரச்சினைகளுக்கு மத்தியில் பட்ஜெட் விவாதம் நடத்தி முடிக்கப்பட்டது.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் தினந்தோறும் அவை முடங்கி வருகிறது. பட்ஜெட் மீதான விவாத்தில் நேற்று முன் தினம் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். ராகுலை எம்.பி. பதவியில் இருந்து நீக்கம் செய்வதற்காக நோட்டீசை பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே வழங்கி உள்ளார்

இந்தநிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் கூடியது. மக்களவை கூடியதும் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வின் கடைசி நாளான இன்று ஜனவரியில் இறந்த எம்.பி. பகவான் தாஸ் ரத்தோரை நினைவு கூறும் வகையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனையடுத்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமெரிக்கா இந்தியா வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் 12 மணிக்கு அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி நிறைவடைந்து, இன்று நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டு இரண்டாம் பகுதிக்காக மக்களவை 9-ம் தேதி அன்று மீண்டும் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடி நடந்து வருகிறது. பட்ஜெட் மீதான விவாதங்களில் எம்.பி.க்கள் விவாதங்களை முன் வைத்தனர்.