Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மயக்க ஊசி செலுத்தி பெற்றோரை கொன்ற நர்ஸ் கைது

திருமலை: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய், தந்தையை மயக்க ஊசி செலுத்தி கொன்று நாடகமாடிய நர்ஸ் கைது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டம் யச்சாரம் கிராமத்தை சேர்ந்தவர் தசரத்(60). இவரது மனைவி லட்சுமி(55). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இரண்டாவது மகள் சுரேகா(26), தனியார் மருத்துவமனை நர்ஸ். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்துள்ளனர். ஆனால் காதலுக்கு சுரேகாவின் பெற்ேறார் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாப்பிள்ளை பார்ப்பதில் தீவிரம் காட்டினர். இதனால் சுரேகா ஆத்திரமடைந்தார்.

இந்நிலையில் கடந்த 24ம்தேதி வீட்டில் தனியாக இருந்த தாயிடம், `உனக்கு அடிக்கடி முதுகுவலி என்கிறாயே? இதனை சரிசெய்ய புதிய மருந்து வந்துள்ளது. இதனை ஊசியில் செலுத்திக்கொண்டால் சரியாகிவிடும்’ எனக்கூறி தான் கொண்டு வந்து அதிகளவு மயக்கம் உள்ள மருந்தை ஊசி மூலம் செலுத்தியுள்ளார். சிறிதுநேரத்தில் அவர் மயக்கமடைந்தார். அப்போது வெளியே சென்றிருந்த அவரது தந்தை வீடு திரும்பினார். அவரிடமும், `உனக்கு கால்வலி குணமாக மருந்து வாங்கி வந்துள்ளேன் என்று கூறி அவருக்கும் ஊசி ெசலுத்தியுள்ளார். அதிக வீரியம் கொண்ட மயக்க மருந்தை அதிகளவு செலுத்தியதால், சில மணி நேரத்தில் பெற்றோர் இருவரும் அடுத்தடுத்து இறந்துள்ளனர்.

அவர்கள் இறந்ததை உறுதிசெய்து கொண்ட சுரேகா, தனது அண்ணனுக்கு போன் செய்து பெற்றோருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக நாடகமாடினார். ஆனால் சந்தேகமடைந்த அவரது அண்ணன், பந்த்வாரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் 2 சிரஞ்சுகள் இருந்தது. அவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சுரேகாவிடம் நடத்திய விசாரணையில் தனது காதல் திருமணத்திற்கு தடையாக இருந்ததால் பெற்றோரை அதிக மயக்க மருந்து கொண்ட ஊசி செலுத்தியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் சுரேகாவை நேற்று இரவு கைது செய்தனர்