Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நாளை சட்டசபை கூடும் நேரத்தில் எதிர்க்கட்சி தலைவரை கைது செய்தது கோழைத்தனம்: திமுக கண்டனம்

தஞ்சாவூரில் நேற்று திமுகவின் ஆர்ப்பாட்டத்துக்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து முதல்வர் விஜய்யால் ஜீரணிக்க முடியவில்லை; தாங்கிக் கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டினுடைய நலனை கருதியும், விவசாய பெருமக்களுடைய நலனை கருதியும் ஆக்கபூர்வமான குற்றச்சாட்டுக்களை உதயநிதி ஸ்டாலின் முன்வைத்தார்.

அவருடைய பேச்சில் எந்தவிதமான உள்நோக்கமும் குற்றமும் அவதூறும் இல்லை என்பது அத்தனை பேருக்குமே தெரியும். ஆனால் திட்டமிட்டு நாளை சட்டசபை கூடும் நிலையில், அவரை சட்டசபைக்கு வரவிடாமல் தடுக்க நினைக்கின்றனர்.

சட்டசபையிலும் முதல்வர் விஜய் ஆடிய நாடகத்தை வெளிப்படுத்தி விடுவார் என்ற அச்சத்தின் காரணமாக, சட்டசபை நாளை நடைபெறும் நிலையில் அதற்கு ஒருநாள் முன்னதாக உதயநிதியை கைது செய்வது என்பது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை.

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு போடுங்கள். அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அதற்காக கைது என்பது பழிவாங்கும் செயல். கடந்த காலத்தில் இப்படி செய்தவருடைய நிலை என்ன என்பதை இன்றைய ஆட்சியாளர் புரிந்து கொள்ள வேண்டும். முதன்முறையாக ஒரு தவறான முன் உதாரணத்தை இன்றைக்கு இந்த அரசு செய்கிறது. நீதிமன்றம் தான் இதில் தலையிட்டு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது பேசாத ஒன்றைப் பேசியதாகப் பொய் வழக்குப் போட்டு, காவல்துறையை ஏவிக் கைது செய்துள்ளது ஆணவ அடக்குமுறை. பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பயந்து செய்த – இந்த பாசிச கைது நடவடிக்கை மூலம் எதிர்க்கட்சித் தலைவரை அச்சுறுத்த முடியாது என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளர்.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை எதிர்கொள்ளத் துணிச்சலற்ற கோழை தவெக அரசு காவல்துறையை ஏவி அவரைக் கைது செய்துள்ளதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்று தஞ்சையில் விவசாயிகளுக்காகக் கழகம் எழுப்பிய கோரிக்கைகள் குறித்து வாய்திறக்காத அரசு, அந்தப் போராட்டத்தின் எழுச்சியைப் பார்த்து தொடை நடுங்கி, ஜனநாயகத்தின் முக்கியத் தூணான எதிர்க்கட்சித் தலைவரையே அடிப்படையற்ற பொய் வழக்கில் கைது செய்துள்ளது அராஜகத்தின் உச்சகட்டம்! மிக மோசமான ஜனநாயகப் படுகொலை!!

கொடுங்கோல் ஆட்சியின் அலங்கோலத்தினை அரங்கேற்ற இந்த அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். பாசிசத்தின் உச்சகட்டமாக எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களைப் பொய் வழக்கில் கைது செய்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் விஜய் இப்போது நடத்தி வருவது திமுக கூட்டணியிடம் இருந்து கடன் வாங்கிய கட்சிகளுடன் ஆதரவிலான ஆட்சி என்பதை ஏனோ “அதிகார போதையில்” மறந்து, மகுடி வாசித்துக் கொண்டிருக்கிறார். மாண்புமிகு முதலமைச்சர் விஜய் இப்படியெல்லாம் திமுகவையும் மிரட்ட முடியாது. எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களையும் அச்சுறுத்த முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இதையும் சந்திப்போம், எதையும் சந்திப்போம்! சட்டப்பேரவையில் பதில் சொல்லாவிட்டாலும் மக்களுக்கு இந்த அரசு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்!” என தெரிவித்துள்ளார்.