Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாய்ப்புகள் காத்திருப்பதில்லை!

வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்கள் எல்லோரும் இளமை பருவத்திலிருந்தே தங்களது வாழ்க்கையை வெற்றி வாழ்க்கையாக மாற்ற உதவும் திறன்களைத் திட்டமிட்டு வளர்த்துக்கொண்டார்கள்.

சுவாமி விவேகானந்தர், ஐந்தாவது வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டதும், பல்வேறு திறனை வளர்த்துக் கொண்டார். ஆசிரியர் நடத்திய பாடங்களை ஒருமுறை கேட்டாலும் அதனை மனதில் நிறுத்தி,எப்போது வேண்டுமானாலும் அதை திரும்பச் சொல்லும் அளவுக்கு சிறப்பான ஆற்றலை பெற்றிருந்தார்.

பாடத்தை தவிர மற்ற பாடங்களையும் படித்து மகிழ்ந்தார். சிலம்பு,வாள் வீச்சு, மல்யுத்தம் போன்ற பயிற்சிகளோடு, தியானத்தையும் கற்றுக்கொண்டார். ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொண்டார். இளமையிலேயே தனது திறனை வளர்த்துக்கொண்ட சுவாமி விவேகானந்தர்.

அமெரிக்காவில் சிகாகோவில் நடைபெற்ற கூட்டத்தில் “அமெரிக்க சகோதர, சகோதரிகளே” என்று அழைத்து தனது பேச்சாற்றலால் வெளிநாட்டவர்களை வியக்க வைத்தார்.இளமையிலேயே தனது திறனை வளர்த்துக் கொண்ட சுவாமி விவேகானந்தரின் வெற்றி அனைவரையும் அவர் பக்கம் திரும்பவைத்தது.

ஒருவர் அறிவில் சிறந்து விளங்கலாம்.நல்ல மனப்பாங்கு கொண்டவராகவும் இருக்கலாம்.சிறந்த திறன் படைத்தவராகத் திகழலாம். இருப்பினும் அவரது பழக்கவழக்கங்கள் சிறந்ததாக அமையா விட்டால் அவர் வெற்றி கேள்விக்குறியாகிவிடும். எனவேதான் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவர்களின் பழக்கவழக்கங்கள் மிகச் சிறந்ததாக அமைய வேண்டும் என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள். இளம் வயதில் ஒருவர் தனது பழக்கவழக்கங்களை சிறந்ததாக அமைத்துக் கொள்ள வேண்டும். இளைஞர்களின் பழக்க வழக்கங்கள் சரியாக அமைகிறதா என்பதை பெற்றோர்களும் மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும். தவறு செய்யும்போது திருத்தவும், நல்லவை செய்யும் போது பாராட்டவும், பெற்றோர்கள் தயங்காமல் முன்வர வேண்டும். அப்போதுதான் இளைய உள்ளங்களின் பழக்க வழக்கங்கள் திசைமாறிச் செல்லாமல் நல்ல பாதையை நோக்கி நகரும்.

எனவே வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பும் இளைஞர்கள் அறிவு (Knowledge), அணுகுமுறை (Attitude), திறன்(skill), பழக்கம் (Habit) ஆகிய நான்கையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி வளர்த்துக் கொண்டால் வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும்,அத்தகைய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு அவற்றை நெஞ்சில் நிறுத்தி வாழ கற்றுக்கொண்டால் வெற்றிக்கனியை மிக விரைவாக தட்டிப் பறிக்கலாம்.

கிரேக்க நாட்டில் நீண்ட நாளைக்கு முன்னால் ஒரு சிலை இருந்தது,இப்போது இல்லை. ஆனால், அதன் பீடத்தில் செதுக்கப்பட்ட கருத்து வாசகம் மட்டும் அப்படியே உள்ளது. அது ஒரு பயணியுடனான உரையாடல் வடிவில் அமைந்தது.

ஓ, சிலையே,உன் பெயர் என்ன? என்னை வாய்ப்பு என்று அழைப்பர்.

‘உன்னை யார் செய்தது? லிஸப்பஸ் என்கிற சிற்பி’.

‘நீ ஏன் பாதத்தின் முன் பகுதியை உந்தி நிற்கிறாய்?

‘நான் கணத்துக்கு மேல் தாமதிப்பதில்லை என்பதை வெளிகாட்ட’,

‘உன் பாதங்களில் இறக்கைகள் காணப்படுகின்றனவே’

‘நான் எத்தனை விரைவாக சென்று விடுவேன் என்பதை வெளிப்படுத்தவே’

‘உனது நெற்றிப் பகுதியில் தலைமுடி நீளமாக இருக்கிறதே?என்னை எதிர்ப்படுகிறவர்களை பற்றிக் கொள்ளத்தான்’

‘பின்னந்தலையில் ஏன் வழுக்கை ஏற்பட்டிருக்கிறது?

‘ஒரு முறை நான் தாண்டிச் சென்று விட்டால் என்னை யாரும் பிடிக்க முடியாது என்பதற்காகவே’

வாய்ப்பு காத்திருப்பதில்லை,ஒரு முறை அதைப் படிக்க தவறினால் மீண்டும் அதை படிக்க முடியாது. வாய்ப்பு ஒவ்வொரு நாளும் உங்கள் வாயிற் கதவைத் தட்டி செல்கின்றது.

ஒவ்வொரு கணமும் நீங்கள் விழிப்போடு இருந்து உங்களுக்கு விருப்பமான துறையில் அறிவையும், திறனையும் பயன்படுத்தி முயன்று அடைய முயலுங்கள். உங்க பண்பு நலன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். அவையே உங்கள் வெற்றியை தீர்மானிப்பவை. இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.

முயற்சி திருவினையாக்கும் என்ற தமிழ் மறைக்கு உலகளாவிய அரங்கில் இலக்கணமாகத் திகழ்ந்துள்ளார் இந்தியப் பெண் வைஷ்ணவி ராமலிங்கம். உலகின் மிக உயரிய, வரலாற்றுப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள புகழ்பெற்ற ‘கிளாரெண்டன்’ (Clarendon Scholarship) கல்வித்தொகையை வென்று அவர் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

சர்வதேச அளவில் மிகக் கடுமையான போட்டி நிலவும் இத்தகைய கல்வித்தொகையை, அதுவும் சட்டத்துறையில் முழு நிதியுதவியுடன் பெற்று சாதனை படைத்திருப்பது சாதாரண விஷயமல்ல. இந்த மாபெரும் வெற்றியின் மூலம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முனைவர் பட்டம் பயிலவிருக்கும் முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லையும் வைஷ்ணவி ராமலிங்கம் எட்டியுள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க மற்றும் உலகளாவிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிதியுதவித் திட்டங்களில் ஒன்றுதான் இந்த ‘கிளாரெண்டன் கல்வித்தொகை’ ஆகும். இது பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளில் சிறந்து விளங்கும் உலகளாவிய மாணவர்களுக்கு, அவர்களின் அசாதாரண கல்வித் திறமை மற்றும் எதிர்கால ஆராய்ச்சித் திறனை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது.

வைஷ்ணவி ராமலிங்கம் பெற்றுள்ள இந்த முழுமையான நிதியுதவித் திட்டத்தின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 2 கோடி ரூபாயாகும்.இந்தத் தொகையானது அவரது முழுமையான கல்விக் கட்டணம், பல்கலைக்கழகக் கட்டணங்கள் மற்றும் அங்கு தங்கிப் படிப்பதற்கான வாழ்வாதாரச் செலவுகள் என அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.இதன் மூலம், எவ்விதப் பொருளாதாரச் சுமையுமின்றி, உலகின் மிகச்சிறந்த பேராசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ் சட்டத்துறையில் தனது உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் பொன்னான வாய்ப்பு வைஷ்ணவிக்குக் கிடைத்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வந்தாலும், சட்டத்துறையில் முழு நிதியுதவியுடன் முனைவர் பட்டம் பயில்வதற்குத் தேர்வாகியுள்ள முதல் இந்தியப் பெண் வைஷ்ணவி ராமலிங்கம் என்பது இந்தியப் பெண் சமூகத்திற்கு ஒரு மிகப்பெரிய உத்வேகமாகும்.

சர்வதேசச் சட்டக் கோட்பாடுகள், மனித உரிமைகள் அல்லது சமகாலச் சட்டச் சவால்கள் குறித்த தீவிர ஆராய்ச்சியில் அவர் ஈடுபடவுள்ளார். வளர்ந்து வரும் இந்திய சமுதாயத்தில், சட்டத்துறையில் உலகளாவிய தளங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கும் சூழலில், வைஷ்ணவியின் இந்த சாதனை எதிர்காலத்தில் பல இளம் பெண்களைச் சட்டத்துறையில் சாதிக்கவும் மற்றும் ஆராய்ச்சித் துறையாகத் தேர்ந்தெடுக்கத் தூண்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

தோல்விகள் உங்களை பலவீனப்படுத்த அனுமதிக்காதீர்கள்; அவை உங்களை அடுத்த கட்டத்திற்குச் செதுக்கும் கருவிகள் என்பதை வைஷ்ணவி தனது வாழ்க்கையின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார். எத்தகைய சூழலிலும் வாய்ப்பை தேடித் தேடி கண்டுபிடித்தது அதை அடைய, தனது முயற்சியைக் கைவிடாமல், அசாத்தியமான தன்னம்பிக்கையோடும், தளராத வீரியத்தோடும் போராடியதன் விளைவாகவே, இன்று உலகின் மிக உயரிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கதவுகள் அவருக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்று உள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயில வேண்டும் என்ற கனவோடு லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால், பொருளாதாரச் சூழல் மற்றும் கடுமையான விசா, கல்வித்தொகை நடைமுறைகள் காரணமாகப் பலர் தங்களது கனவுகளைப் பாதியிலேயே கைவிடுகின்றனர்.அத்தகைய மாணவர்களுக்கு வைஷ்ணவி ராமலிங்கத்தின் இந்த வெற்றிப் பயணம் ஒரு சிறந்த வழிகாட்டியாகும்.

வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி,முறையான திட்டமிடல், உலகத்தரத்திலான ஆராய்ச்சி சிந்தனை மற்றும் தொடர் முயற்சிகள் இருந்தால், உலகின் எந்தவொரு உயரிய பல்கலைக்கழகத்திலும் தடையின்றி நுழைய முடியும் என்பதை இந்தச் செய்தி உணர்த்துகிறது.

“கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’’ என்பது முதுமொழி.நல்ல முறையில் கற்று அறிவைப் பெற்றவர்கள் செல்லுகிற இடம் எல்லாம் உரிய மரியாதை பெறுவார்கள். வாழ்க்கையில் ஒரு முறை ஒருவர் கற்ற கல்வியானது அவருக்கு ஏழு பிறப்பிற்கும் துணையாக நிற்கும் என்பது திருவள்ளுவரின் கருத்தாகும்.

இதனால் தான் கல்வி கற்க வேண்டிய பருவமாக இளமைப் பருவத்தை குறிப்பிடுகின்றார்கள்.இளமையில் ஒருவர் கற்க வேண்டிய நூல்களைக் கற்று, கல்வியில் சிறந்து விளங்கினால், அவரது வாழ்க்கை வெற்றி வாழ்க்கையாக மாறும் என்பதற்கு இந்த பெண்மணியின் வாழ்க்கை ஒரு மிகச் சிறந்த உன்னதப் பாடமாகும்.

வைஷ்ணவி ராமலிங்கம்