Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பல நாடுகளிடம் டிரோன் தொழில்நுட்பம் இருந்தும் சரியான நேர தேர்வு காரணமாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றி: ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பேட்டி

சென்னை: பல நாடுகளிடம் டிரோன் தொழில்நுட்பம் இருந்தும், சரியான நேர தேர்வு காரணமாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றதாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் தெரிவித்தனர். முன்னாள் ராணுவ வீரர் லெப்டினன்ட் கர்னல் கணேசன்: பகல்காம் தாக்குதல் நடைபெற்றவுடன் இந்தியவின் எதிர்தாக்குதல் எப்படி இருக்கும் என பல எதிர்பார்ப்புகள் இருந்தது, தொடர்ந்து இந்திய அரசு மற்றும் ராணுவம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது, மேலும் நேற்றைய தினம் போர் ஒத்திகை நடத்தப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பின் மற்ற நாடுகள், ஏன் இந்தியா மக்கள் கூட இந்த ஒத்திகை முடியும் வரை எந்த நடவடிக்கையும் இருக்காது என எதிர்பார்த்த நிலையில் திடீரென ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக செயல்படுத்தி முடித்து இருக்கிறது. இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட காமிகாசி டிரோன் என்பதே ஒரு ஏவுகணை போல தான். இந்த டிரோன் தொழில்நுட்பம் பல நாடுகளிடம் உள்ளது. ஆனாலும் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம், மேலும் தாக்குதல் நடத்த தேர்வு செய்யப்பட்ட நேரம் தான் சரியாக தாக்குதல் நடத்த உதவியுள்ளது.

எதிரி நாட்டின் செயற்கைகோள், ரேடார்கள் ஆகியவை கண்காணிக்காத நேரத்தில் சரியாக கணித்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். எதிரி நாட்டினர் கண்டுபிடிக்காதவாறு இந்த தாக்குதலை நடத்தியது மிகப்பெரிய சாதனை. 1971ம் ஆண்டு போரில் இது சாத்தியமற்றதாகவே இருந்தது, ஆனால் தற்போது எதிரி நாட்டினர் தாக்குதலை கணிக்கும் முன்பே தாக்குதல் நடத்தியுள்ளது. தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரசு கட்டுப்படுத்தவில்லை என குற்றச்சாட்டு உள்ளது, ஆனால் பாகிஸ்தானின் அரசாங்கமே வலுவான நிலையில் இல்லை, அவர்கள் நாட்டிற்குள்ளேயே கிளர்ச்சியாளர்களின் பிரச்னை உள்ளதால் அவர்களால் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார் நாட்டிற்குள்ளேயே இருந்தும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் சுப்பிரமணி: இந்த தாக்குதல் என்பது ஒரு எச்சரிக்கை தான், இதற்கு மேலும் பிரச்னைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும், அதிகப்படியான இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதை உணர்த்தவே இந்த தாக்குதல், பாகிஸ்தான் அரசு தங்களுக்கும் தீவிரவாத தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை என தொடர்ந்து கூறி வருகிறது அது பொய், தீவிரவாதிகளுக்கு அடைக்கலமும், அவர்கள் செயல்படுவதற்கான உதவிகளையும் பாகிஸ்தான் அரசு வழங்குகிறது. தீவிரவாதிகளின் ஒத்துழைப்பு இருந்தால் தான் ஆட்சி செய்ய முடியும் என்ற நிலை இருக்கிறது. பஹல்காம் தாக்குதலுக்கே பாகிஸ்தான் பொறுப்பெற்று இந்திய அரசிடம் மன்னிப்பு கோரி இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் அதை செய்யாமல் இருக்கின்றனர். மேலும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் விதமான இது போன்ற செயல்கள் இனி நடைபெறாமல் பார்த்து கொள்வதாக பாகிஸ்தான் உறுதி அளித்து இந்திய அரசிடம் அடிபனிந்து செல்ல வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தால், போர் நிச்சயம் ஏற்படும். இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது என்பது, பாகிஸ்தானின் நடவடிக்கைகளில் தான் உள்ளது. இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.