ஊட்டி: ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கும் நாளை மறுநாள் முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் நூற்றாண்டு பழமைவாய்ந்த மலை ரயிலில் பயணிக்க வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டுகின்றனர். பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பயணித்து மகிழ்கின்றனர்.
இந்நிலையில் சிறப்பு மலை ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. இதன்படி ஊட்டி- குன்னூர் இடையே வாராந்திர சிறப்பு மலை ரயில் சேவை நாளை மறுநாள் (7ம் தேதி) துவங்கி அக்டோபர் 4ம் தேதி வரை அனைத்து வெள்ளி, ஞாயிற்றுகிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், ஊட்டியில் மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு 3.55 மணிக்கு குன்னூர் சென்றடையும். மறுமார்க்கமாக 8ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை அனைத்து சனி மற்றும் திங்கட்கிழமைகளில் குன்னூரில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு 10.45 மணிக்கு ஊட்டி சென்றடையும்.
அதேபோன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டிக்கு வந்தடையும். ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை முதல் வகுப்பில் 40 இருக்கைகளும், 2ம் வகுப்பில் 140 இருக்கைகளுடனும், குன்னூர்- ஊட்டி இடையே முதல் வகுப்பில் 80 இருக்கைகளும், 2ம் வகுப்பில் 140 இருக்கைகளுடன் இயக்கப்படும். நீட்டிக்கப்பட்ட சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


