Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திறந்தவெளி அருங்காட்சியக பணிகள் கீழடியில் துவங்கின

திருப்புவனம்: கீழடியில் நான்கரை ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள் கேஆர்.பெரியகருப்பன், தங்கம் தென்னரசு துவக்கி வைத்தனர்.சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014ல் மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நதிக்கரை நாகரீகத்தை தேடி அகழாய்வுப் பணிகள் நடந்தது. அப்போது 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கட்டிடக் கலை, விவசாயம், தொழில் மேலாண்மை, கால்நடை வளர்ப்பு, எழுத்தறிவு உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டன. அடுத்து தமிழக தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

அகழாய்வு நடந்த இடங்கள் திறந்தவெளி அருங்காட்சியகமாக அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு நடந்த இடம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.கீழடியில் இந்திய தொல்லியல் துறை சார்பில் முதல், இரண்டு, மூன்றாம் கட்ட அகழாய்வு நடந்த இடங்களில் இருந்த கட்டுமானங்களும் தமிழக தொல்லியல் துறை சார்பில் 4 மற்றும் 5 கட்ட அகழாய்வு நடந்த இடங்களில் கண்டறியப்பட்ட கட்டுமானங்களும் நான்கரை ஏக்கர் பரப்பளவு நிலங்களில் உள்ளன. அந்த இடங்களில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி நில உரிமையாளர்களுக்கு இழப்பீடும் வழங்கிவிட்டது.

நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் 16 பேருக்கு அருங்காட்சியகத்தில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அரசாணைகளை நேற்று வழங்கி பாராட்டினர். தொடர்ந்து 15 கோடியே 69 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடக்கவுள்ள திறந்தவெளி அருங்காட்சியக கட்டுமானப் பணிகளை மண் வெட்டியால் வெட்டி அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, கலெக்டர் ஆஷா அஜித், எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார், தொல்லியல் ஆணையர் சிவானந்தம் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து பத்தாம் கட்ட அகழாய்வு நடக்கும் இடத்தை பார்வையிட்டனர்.