தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் துவங்கியது. முதல்நாள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்தும், பேரவைக்கூட்டம் முடிந்தும் என இருமுறை தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. மரபை மீறிய இச்செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசுக்கு தவெக அரசு அடிபணிந்து போவதையே இது காட்டுகிறது என கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து நாள்தோறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. பிரசார காலக்கட்டத்தின்போதும், திருச்சி நன்றி அறிவிப்பு கூட்டத்திலும், திமுகவை கடுமையாக விமர்சித்தார் முதல்வர் ஜோசப் விஜய்.
ஆனால், கோவை சிறுமி உள்பட எண்ணற்ற சிறுமிகள், இளம்பெண்கள், மூதாட்டிகள் என பலரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவது தொடர்கதையாக இருந்தும், முதல்வர் ஜோசப் விஜய், இதுதொடர்பாக பொதுஇடங்களில் பேட்டியோ அல்லது உரிய விளக்கமோ தரவில்லை. ‘முதல்வர் பேட்டியளிக்க வேண்டும் என்பது மரபு இல்லை; சட்டங்களில் ஒன்றும் குறிப்பிடவில்லை’ என ஒரு சில அமைச்சர்களே முட்டுக் கொடுத்து வருகின்றனர். மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, குற்றச் சம்பவங்கள் குறித்து தொடர்பாக முதல்வராக இருக்கும் ஒருவர் வாய் திறக்க வேண்டாமா?
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை துவக்க விழா மற்றும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் கார் ஓட்டியதை ரீல்ஸ் எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதா பெருமை? அண்ணனாக, தம்பியாக தமிழ்நாட்டுப் பெண்களை பாதுகாப்பேன் என மேடைகளில் முழங்கி விட்டு, தற்போது மிக அமைதியாக இருப்பதன் காரணம் என்ன சிஎம் சார்? 2, 3 அடியை வில்லனிடம் வாங்கி விட்டு, பிறகு காத்திருந்து திருப்பி அடிக்க இது சினிமா அல்ல... உடனுக்குடன் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்? இதை உணர்த்தும் வகையில்தான் நேற்று முன்தினம் சட்டப்பேரவைக்கு திமுக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள், ‘வாயை திறங்க சிஎம்’ என்ற பேட்ஜ் அணிந்து வந்தனர்.
நேற்றைய பேரவை கூட்டத்தில் கூட திமுக எம்எல்ஏ ஆஸ்டின், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இந்த துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஜோசப் விஜய், இதுதொடர்பாக பதிலளித்திருக்க வேண்டும். ஆனால், துறைக்கு ெதாடர்பே இல்லாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இதற்கு பதிலளித்திருக்கிறார். முதல்வர் பதில் கூறவில்லையே என்றால், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ‘முதலமைச்சருக்கு எப்போது பேச வேண்டும்; எப்படி பதிலளிக்க வேண்டும் என்று தெரியும்’ என முட்டு கொடுக்கிறார். ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியின் குரல், மக்களின் குரல் என்பதை முதல்வர் இதுவரை உணரவில்லையா?
அதேபோல பேரவை நிகழ்வுகளை எங்கள் ஆட்சியில்தான் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறோம் என தம்பட்டம் அடித்த தவெக அரசு, பதவியேற்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளை தடையின்றி ஒளிபரப்பியது. ஆனால், நேற்றைய நேரலை ஒளிபரப்பு திடீரென ஏன் ரத்தானது? இதுவும் தவெகவின் ரீல்ஸ் உருட்டுதானா என எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இனியாவது, நீண்ட மவுனம் கலைத்து, தன்னை நம்பி ஓட்டுப் போட்ட மக்களுக்காக வாய் திறந்து பதில் சொல்வாரா முதல்வர் ஜோசப் விஜய்?
