ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்துள்ள சிவப்பு நிற சால்வியா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரியில் செப்டம்பர், அக்டோபரில் இரண்டாம் சீசன் கடைபிடிக்கப்படுகிறது. இச்சீசனின் போது வெளிநாடு, பிற மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள். இதையொட்டி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 17 ஆயிரம் மலர் தொட்டிகளில் பராமரிக்கப்பட்ட மேரிகோல்டு, சால்வியா, பேன்சி, அம்ரந்தஸ், டெய்சி, டேலியா, பிக்கோனியா, சைக்ளோமன் போன்ற செடிகளில் மலர்கள் பல வண்ணங்களில் பூத்து காணப்பட்டது. இந்த மலர் அலங்காரங்களை கடந்த இரு மாதங்களாக ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.
தற்போது பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகளும் காய்ந்து போய்விட்டது. மேலும், தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளும் வாடிவிட்டன. இதனால் இந்த மலர் அலங்காரங்கள் அகற்றப்பட்டன. ஆனால், பூங்கா முழுவதிலும் தற்போது சிவப்பு நிறத்தில் பூத்துள்ள சால்வியா மலர்கள் மட்டும் வாடாமல் உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். குறிப்பாக, பூங்காவிற்குள் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் சிவப்பு நிறத்தில் பூத்துள்ள இந்த சால்வியா மலர்கள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். முதல் சீசனுக்கான பணிகள் ஓரிரு நாட்களில் துவக்கப்படும் நிலையில், பூங்காவில் உள்ள அனைத்து செடிகளிலும் இனி வரும் ஏப்ரல் மாதமே பூக்களை காண வாய்ப்புள்ளது. சால்வியா மலர்கள் கவாத்து செய்யப்படும் வரை இந்த மலர்களை கண்டு ரசித்து செல்லலாம்.
