Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஊடுபயிர்

விவசாயம் சார்ந்து அந்தந்த பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை பதிவு செய்ய ஊடுபயிர் என்ற இந்தப் புதிய பகுதி வெளியாகிறது. வேளாண் பெருமக்கள் தங்கள் பகுதியில் நடந்த விவசாயம் சார்ந்த தகவல்களை இந்தப் பகுதியில் பதிவு செய்யலாம். கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் ஏழுமலை, முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து விருத்தாசலம் வேளாண் அறிவியியல் நிலைய விஞ்ஞானி முனைவர். காயத்திரி இயற்கை வேளாண்மை (இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள் தயாரிப்பு முறை) குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துக் கூறினார். அப்போது, மாற்றியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டத்தில் நடப்பு வருடம் குறுவை நெல் சாகுபடி சேர்க்கப்பட்டுள்ளது என்ற விவரமும், நெல் காப்பீடு செய்ய 31.07.2024 வரை கடைசி தேதி என்றும் தெரிவிக்கப்பட்டது.

வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையின் மூலம் திட்ட செயலாக்கம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. விவசாயிகள் இக்கூட்டத்தில் தெரிவித்த கோரிக்கைகளை சாத்தியக்கூறின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு தீர்வு காணப்படும் எனவும், விவசாயிகள் வாய்க்கால் தூர்வாருதல் மற்றும் தடுப்பணை அமைப்பது தொடர்பாக தெரிவித்த கோரிக்கைகளுக்கு உரிய துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு நிதி ஆதாரத்தின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கால்காணி இயற்கை உழவர்கள் கூட்டமைப்பினர் முக்கூடல் சங்கமம் என்ற நிகழ்வின் மூலம் இயற்கை உழவர்கள், தன்னார்வலர்கள், நேரடி நுகர்வோர்களை மாநில அளவில் மாவட்டம் தோறும் ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளனர். அதன் முதல் கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்களது முக்கூடல் நிகழ்வினை நடத்தினர். இதில் இயற்கை உழவர்களும், தன்னார்வலர்களும், நேரடி நுகர்வோர்களும் கலந்துகொண்டனர். கால்காணி கூட்டமைப்பின் செயல்பாடு, எதிர்கால திட்டங்கள் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய கால்காணி (தற்சார்பு வாழ்வியலின் நுழைவு வாயில்) என்ற நூலின் முதல் பிரதியை சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற இயற்கை ஆர்வலர் இறையழகன் வெளியிட்டார். கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் வாழ்வியல் ஆனந்த், மகிழ்வனம் மணிகண்டன், செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இயல் உணவு சரவணன், தமிழினியன், சதிஷ், சரவணன், கிருஷ்ணவேணி, ரகோத்தமன், வெங்கடேஷ், பரத், ராஜேஷ், கதிரவன், சிவா, கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.