சமூக வலைதளங்களில் வெடித்த காரசார விவாதம்: ஆன்லைன் உணவில் புகைத்த ‘துண்டு பீடி’; வாடிக்கையாளருக்கு இழப்பீடு கூப்பன் தருவதாக பதில்
பெங்களூரு: பெங்களூருவில் ஜொமேட்டோ செயலி மூலம் ஆர்டர் செய்த பாவ் பாஜி உணவில் புகைக்கப்பட்ட பீடி கிடந்த விவகாரம் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பிரியம் தஹபில்தர் என்பவர் பிரபல உணவு டெலிவரி செயலியான ஜொமேட்டோ மூலம் பாவ் பாஜி உணவை ஆர்டர் செய்திருந்தார். உணவு பார்சல் வந்து சேர்ந்ததும் அதனைப் பிரித்துப் பார்த்த அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பாவ் பாஜியுடன் சேர்த்து வழங்கப்பட்ட நறுக்கப்பட்ட வெங்காயத்தின் மீது ஏற்கனவே ஒருவரால் முழுமையாகப் புகைத்துப் போடப்பட்ட பீடி கிடந்துள்ளது.
இதனைப் புகைப்படம் எடுத்த அவர், ‘ஜொமேட்டோவில் பாவ் பாஜி ஆர்டர் செய்தேன்; அதற்கு இலவசமாக முழுமையாகப் புகைக்கப்பட்ட துண்டு பீடி கிடைத்துள்ளது; ஆனால் இதுபோன்ற இலவசத்தை எதிர்பார்க்கவில்லை’ எனத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி, உணவகங்களின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்துப் பலத்த கேள்விகளை எழுப்பியது. இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரைத் தொடர்பு கொண்ட ஜொமேட்டோ நிறுவனம், அவரது அடுத்த ஆர்டருக்கு 100 ரூபாய் தள்ளுபடி கூப்பனை வழங்குவதாகத் தெரிவித்தது.
இதுகுறித்து வாடிக்கையாளர் மீண்டும் பதிவிடவே, நெட்டிசன்கள் பலரும் இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கலாய்க்கத் தொடங்கினர். சிலர் ‘உணவுக்குக் கூடுதலாகப் புகை நறுமணம் சேர்க்கப்பட்டுள்ளது’ என்றும், ‘இனி வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுங்கள்’ என்றும் நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகின்றனர்.



