Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்: மகன், மருமகன் மூலம் டெல்லி ஆடும் டபுள் கேம்; நடிகர் கட்சிக்கும், ‘சாமி’ கட்சிக்கும் குறி; விவிஐபிக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்; கூட்டணிக்கு போடப்பட்ட முக்கிய டீல்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்கள் ஓட்டு போட்டுதான் அவர்களுக்கான ஆட்சியை தேர்வு செய்து வருகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஜனநாயகத்தை படுகொலை செய்யும் வகையில், மக்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்பவர்கள் பல மாநிலங்களில் பொறுப்பேற்பதில்லை. மத்தியில் ஆளும் கட்சி, நோட்டுகளையும், சீட்டுகளையும் ஆசை காட்டி மாநில கட்சிகளை சிதைத்து, எம்எல்ஏக்களை இழுத்தும், அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி ஆகிய த்ரீ ரோசஸை வைத்து கொண்டு மிரட்டியும் ஒரு ஆட்சியை அமைக்கின்றனர்.

குறிப்பாக, டெல்லி சர்கார் எந்தெந்த மாநிலங்களில் கால் பதிக்க முடியவில்லையோ அந்தந்த மாநிலங்களில் இந்த குறுக்கு வழியை பயன்படுத்தி மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பது போன்று காட்டிக் கொள்கின்றனர். ‘வளர்த்த கடா மார்பில் பாயும் என்பார்கள்’. இதுதான் டெல்லி செய்யும் வேலை. ஒரு மாநில கட்சியில் செல்வாக்கு உள்ள ஒருவரை வளைத்து, அவருக்கு ஒரு அசைன்மென்ட் கொடுத்து அந்த கட்சியை உடைத்து அவர்கள் முதுகில் ஏறி, சவாரி செய்கின்றனர். சில ஆண்டுகளில் ஏறி வந்த ஏணியை தள்ளிவிட்டு மொத்தத்தையும் ஆட்டைய போடுகின்றனர். இதுதான் ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கின்றது.

இதற்கு சிறந்த உதாரணம் மகாராஷ்டிரா. இங்கு டெல்லி நடத்திய உள்ளே வெளியே விளையாட்டால், ‘ஷிண்டே பார்முலா’ நாடு முழுவதும் பிரபலமானது. தற்போது, டெல்லி ஒரு மாநிலத்தில் கால் பதிக்க நினைத்தால், அந்த மாநிலத்தில் அடுத்த ஷிண்டே யார் என்று நாடே விமர்சிக்கும் அளவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தி கொடுத்து உள்ளனர். தற்போது ஒரே கல்லில் 2 மாங்காய் என்பதுபோல், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் மற்றும் மருமகனை வைத்து புதுவை, தமிழகத்தில் சித்து விளையாட்டை தொடங்கி உள்ளது டெல்லி.

தமிழகத்தில் எவ்வளவு குறுக்கு வழியை தேடியும் மக்கள் அவர்களின் முகத்திரையை கிழித்து உள்ளனர். இருப்பினும், அதிமுக என்ற கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்து வரும் டெல்லி, அவர்களுக்கு வாழ்வா? சாவா என்ற நிலையை தமிழகத்தில் கொண்டு வந்து உள்ளது. கிட்டத்தட்ட 53 ஆண்டுகள் வரலாறு கொண்டே கட்சியையே அட்ரஸ் இல்லாமல் ஆக்கும் நிலையை டெல்லி கொண்டு வந்து உள்ளது. ஆனாலும், தமிழகத்தில் அவர்கள் நினைத்ததை சாதிக்க முடியவில்லை. இதனால், புதிதாக அரசியலுக்கு வந்துள்ள ஒரு நடிகருக்கு டெல்லி தூண்டில் போட்டுள்ளது.

அந்த தூண்டிலில் சிக்கி உள்ள அந்த நடிகரின் கட்சி சுதந்திரமாக நீந்தவும் முடியாமல், தப்பிக்கவும் முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது. இவர்களை வளைத்ததும், கரூரில் 41 பேர் பலியான கேஸை கையில் எடுத்து உள்ள த்ரீ ரோசஸில் ஒரு ரோஸ்தான் (சிபிஐ). டெல்லி தூண்டிலின் பின்னால், நடிகர் கட்சியில் உள்ள லாட்டரி அதிபரின் மருமகன் போட்ட பிளான்தான் என்று கூறப்படுகிறது. கரூர் கேஸில் இருந்து அனைவரையும் பாதுகாக்கவே டெல்லியிடம் நடிகர் கட்சி சரணடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்காக லாட்டரி அதிபரின் மகன் டெல்லி சென்று சில விவிஐபிக்களை சந்தித்து டீல் பேசிவிட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெல்லி வழிகாட்டுதலின்படி, லாட்டரி அதிபர் மகன் செயல்பட்டு வருகிறார். ஏன் என்றால், லாட்டரி அதிபர் குடும்பம் மீது 3 ரோசஸ்களின் (அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை) வழக்கு இருக்கிறது. இதை வைத்து லாட்டரி அதிபர் மகனையும், மருமகனையும் டெல்லி வளைத்து உள்ளது. இதன் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடிகர் கட்சியுடன் கூட்டணி போட்டு, தேர்தலுக்கு பின் தற்போது சவாரி செய்து வரும் அதிமுக மற்றும் என்ஆர் காங்கிரஸை கழற்றிவிட திட்டமிட்டுள்ளது.

இதற்கு பரிசாக தமிழகம், புதுச்சேரியில் லாட்டரி தொழிலுக்கு மீண்டும் அனுமதி மற்றும் கோவாவை போன்று புதுச்சேரியில் கேசினோ, டிஸ்கோ கிளப் நடத்த அனுமதி தர வேண்டும் என்று லாட்டரி அதிபர் மகனும், மருமகனும் டெல்லிக்கு மெசெஜ் அனுப்பி உள்ளனர். தமிழகம் மற்றும் புதுவையில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், லாட்டரி தொழிலுக்கு மீண்டும் அனுமதி கொடுத்தால் விரிவுப்படுத்தி ‘ப’ வைட்டமின் அதிகமாக தேர்தல் நேரத்தில் கொடுக்க முடியும் என்று தெரிவித்து உள்ளனர்.

மேலும், லாட்டரி அதிபர் குடும்பம் ஆன்லைன் கேமிங் நிறுவனத்தையும் நடத்தி வருகிறது. இதன்மூலம் ஆன்லைன் சூதாட்டத்தை அவர்கள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கும் பாதுகாப்பு கேட்டு அந்த குடும்பத்தினர் கோரிக்கை வைத்து உள்ளனர். இதற்கு டெல்லி தரப்பு, தேர்தல் வேலையை முதலில் பாருங்கள்... எல்லாம் நல்லதே நடக்கும் என்று பச்சை சிக்னல் காட்டி உள்ளனர். இதையடுத்து, மகன் மற்றும் மருமகன் என இருவரும் டெல்லிக்கு ஆதரவாக தேர்தல் வேலையை தொடங்கி உள்ளனர்.

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுவையின் புது வரவாக மார்ட்டின் மகன் தடம் பதித்துள்ளார். பாஜ உறுப்பினராக உள்ள மார்ட்டின் மகன் ஜேசிஎம் என்ற இயக்கத்தை தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். முதலில் 10 தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஜெசிஎம் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த இயக்கத்தை கட்சியாக மாற்றியபின் நடிகர் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று டெல்லி திட்டமிட்டுள்ளது.

பின்னர், நடிகர் கட்சி, மார்ட்டினின் மகன் கட்சி, டெல்லி ஆகியோர் இணைந்து தேர்தலை சந்திக்க ஒரு பிளான் போட்டுள்ளனர். இதற்காக தான் மார்ட்டினின் மருமகனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மார்ட்டினின் மகன் ‘ப’ வைட்டமினை வாரி இறைப்பதாக கூறப்படுகிறது. இவரை தங்கள் பக்கம் இழுத்து கூட்டணி வைத்து, தேர்தலில் செலவு செய்ய வைத்து வென்றால் ஆட்சி அமைத்துவிடலாம் என்று டெல்லி கணக்கு போடுகிறது. இதற்காக புதுவையில் உள்ள டெல்லி விவிஐபிக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இவர்தான் டெல்லி தலைமைக்கு பல ஆண்டுகளாக குஜராத்தில் அரணாக இருந்த வியூகம் வகுத்து கொடுத்தாராம். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் புதுச்சேரியில் போஸ்டிங் கொடுக்கப்பட்டது. தற்போது டெல்லி கொடுத்த ரகசிய அசைன்மென்ட்டை கனகச்சித்தமாக செய்து வருகிறார். இந்த அசைன்மென்டில் ஆளும் கூட்டணி அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது. அவர்களும் தூண்டில் போட்டு நல்ல செய்திக்காக காத்திருக்கின்றனர். குறிப்பாக ஆளும் கூட்டணி அரசின் மக்கள் பிரதிநிதிகளுக்கு பல கிப்ட் பாக்ஸ்கள் வீடு தேடி செல்கிறதாம்.

இதற்கான வேலையில் ஆளும் கூட்டணி அரசில் இலாகா இல்லாத அமைச்சராக இருக்கும் ஒருவர் மார்ட்டின் மகனின் தளபதியாக வேலை செய்து வருகிறார். இதனால், தேர்தல் நெருங்கும் புதுவையின் அதிகாரத்தில் உள்ள ‘சாமி’க்கு ஷாக் கொடுக்கும் நியூஸ் வரும் என்கிறார்கள். ஒரு பக்கம் புதுச்சேரியில் மார்ட்டினின் மகனை வைத்து தேர்தல் சடுகுடு தொடங்கி உள்ள டெல்லி, தமிழகத்தில் நடிகர் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முழுவீச்சில் இறங்கி உள்ளது. இதற்கான டிரம்ப் கார்டுதான் ‘மருமகன்’. ஒரு பக்கம் வழக்கு, இன்னொரு பக்கம் லாட்டரி தொழில் ஆசை காட்டி தாங்கள் நினைத்த காரியத்தை சாதிக்க காய் நகர்த்தப்பட்டு வருகிறது. எப்படியாவது தமிழகத்தில் நடிகர் கட்சியுடன் கூட்டணி வைத்து, தங்களது வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும் என்று டெல்லி திட்டம் போட்டு வருகிறது.

இதற்காக புதுவையில் எப்படி டெல்லி விவிஐபியிடம் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளதோ, அதேபோல தமிழகத்திலும் சென்னை நகரில் உள்ள விவிஐபியிடம் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் நடிகர் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். முதலில் கெத்து காட்டிய நடிகர் கட்சி, தற்போது சிபிஐ கேஸால் டெல்லி சொல்வதை கேட்கும் நிலைக்கு வந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் டெல்லி பற்றி நடிகர் வாயே திறக்கவில்லை. டெல்லியின் இந்த குறியில் நடிகரின் கட்சியும், சாமியின் கட்சியும் சிக்குமா? தப்பிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்...

* யார் இந்த லாட்டரி மார்ட்டின்? கூலித்தொழிலாளி டூ சர்வதேச தொழிலதிபர்

மியான்மர் நாட்டின் ரங்கூன் நகரில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மார்ட்டின், 1988ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்து, லாட்டரி தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். பின்னர், தனது லாட்டரி தொழிலை அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளாவுக்கும் விரிவுப்படுத்தினார். பின்னர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பூட்டான், நேபாளத்தில் தனது தொழிலை உலகளவில் வளர்க்க தொடங்கினார். அங்கு லாட்டரி சீட்டுகளின் ஒரே விநியோகஸ்தராக இருந்ததால், அதற்கான காப்புரிமையை பெற்றார்.

இதனால் ‘தி லாட்டரி கிங்’ என்று அழைக்கப்பட்டார். 1988ம் ஆண்டு கோவை காந்திபுரத்தில் மார்ட்டின் லாட்டரி ஏஜென்சீஸ் லிமிடெட் நிறுவனத்தை துவக்கினார். தற்போது, கர்நாடகா, கேரளா, சிக்கிம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அனுமதி பெற்று லாட்டரி தொழில் நடத்தி வருகிறார். பாஜ கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு நிதிகளை வாரி வழங்கியவர். இவருடைய பியூச்சர் கேமிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம், உலகளாவிய அளவில் ஆன்லைன் கேமிங், கேசினோ, விளையாட்டு சூதாட்டம் உள்ளிட்ட துறைகளிலும் தடம் பதித்துள்ளது.

மேலும், தொலைக்காட்சி, ரியல் எஸ்டேட், கல்லூரி, மருத்துவமனை, வணிக வளாங்கள், வேளாண்மை, ஜவுளி மற்றும் நூல், கட்டிட பொருட்கள் என பல தொழில்களில் கால் பதித்து உள்ளார். இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். அகில இந்திய லாட்டரி வர்த்தகம் மற்றும் கூட்டணி தொழில் கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். மார்ட்டின் மனைவி பெயர் லீமா ரோஸ் மார்ட்டின், கோவை காந்திபுரத்தில் பெண்கள் ஆடையகம் நடத்தி வருகிறார். இவர், ஐ.ஜே.கே கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

* மிஸ்டு கால் மூலம் பாஜவில் சேர்ந்த மார்ட்டின் மகன்

பல கோடி ரூபாய் மதிப்புள்ள லாட்டரி ஊழலில், கடந்த ஆண்டு மார்ட்டின் 8 மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு சிபிஐ குற்றப்பத்திரிகைகளை எதிர்கொண்டிருந்த நேரத்தில், ​​அவரது மனைவி மக்களவைத் தேர்தலுக்கு முன்பு கோயம்புத்தூரில் நடந்த தேர்தல் பேரணியில், நரேந்திரமோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரைத் தொடர்ந்து, வழக்கிலிருந்து தப்பிக்க மார்ட்டின் மகன் கட்சியில் சேர்ந்ததாக கூறப்பட்டது. அதே நேரத்தில் புதுச்சேரியில் அமைச்சர் ஜான்குமார் உதவியுடன் பாஜவில் இணைந்து தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டார். இதற்கு வசதியாக பாஜவின் மிஸ்டு கால் வழியாக பாஜ உறுப்பினராக சேர்ந்தார்.

பின்னர், அவரது சார்பில் 2500 உறுப்பினர்கள் பாஜவில் அடுத்தடுத்து இணைக்கப்பட்டனர். பாஜ தலைமையுடன் பேசி வருகிறோம்.

வாய்ப்பளித்தால் பாஜ சார்பில் தேர்தலில் போட்டியிடுவேன் என கூறி வந்தார். இதனால் மார்ட்டினின் மகனை பாஜ திரைமறைவில் இயக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதை புதுச்சேரி பாஜ மாநில தலைவர் ராமலிங்கம் மறுத்தார். மார்ட்டின் மகனுடன் பாஜவுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என பதிலளித்தார். பாஜவினர் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் எச்சரித்தார். இருப்பினும் எதிர்க்கட்சிகள் மார்ட்டின் மகனின் மக்கள் மன்றம் பாஜவின் பி டீம்தான் என விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக மார்ட்டின் மகன் கூறுகையில், ‘நாங்கள் யாருடைய பி டீமும் இல்லை. நாங்கள் யாரையும்ஆதரிக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் மிஸ்டு கால் மூலம் பாஜவில் சேர்ந்தேன். தற்போது அக்கட்சியிலிருந்து விலகி விட்டதாக எழுத்துப்பூர்வமாக கடிதமும் கொடுத்துள்ளேன்,’ என்றார்.

* ரூ.5400 கோடி மோசடி 32 வழக்குகள் பதிவு

கேரளாவில் லாட்டரி மோசடி தொடர்பாக லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது 32 வழக்குகள் உள்ளன. அவற்றில் சிலவற்றில் சிபிஐ ஏற்கனவே குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. கேரளாவில் சிக்கிம் லாட்டரியில் இருந்து 2005 முதல் ரூ.4,500 கோடி மோசடி செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மார்ட்டின் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராக மார்ட்டினின் மகன் உள்ளார். சட்டவிரோத லாட்டரி தொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், வரி ஏய்ப்பு மற்றும் நிதி முறைகேடு புகார்கள் தொடர்பாக, 2015ம் ஆண்டு, வருமான வரித்துறையினர், மார்ட்டின் நிறுவன வளாகங்களில் சோதனை நடத்தினர்.

2016ம் ஆண்டில், அமலாக்கத்துறை மார்ட்டினின் லாட்டரி வணிகங்கள் தொடர்பான பண மோசடி விசாரணைகள் தொடர்பாக அவரது சொத்துகளில் சோதனை நடத்தினர். 2018ம் ஆண்டில், சட்டவிரோத லாட்டரி நடவடிக்கைகள் மற்றும் கூறப்படும் நிதி குற்றங்கள் தொடர்பான விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக, பல மாநிலங்களில் உள்ள மார்ட்டினின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. 2023ம் ஆண்டு மே மாதம், சிக்கிம் அரசாங்கத்திற்கு ரூ.900 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்படும் வழக்கு தொடர்பாக பணம் மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் ரூ.457 கோடியை அமலாக்கத் துறை முடக்கியது.