Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒரு தொகுதிக்காக ஒரே கூட்டணியில் உள்ள மூன்று பேர் மல்லுக்கட்டுவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பொதுமக்கள் மட்டுமின்றி போலீஸ்காரர்களிடமே வசூல் வேட்டை நடத்தி வரும் ஏட்டையாவின் நடவடிக்கைகள் ரகசிய கண்காணிப்பில் இருக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மான்செஸ்டர் மாநகர் போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் வடக்கு துணை கமிஷனர் முகாம் அலுவலகத்தில் முருகப்பெருமானின் பெயரை கொண்ட ஏட்டையா ஒருவர் பணிபுரிஞ்சுட்டு வர்றாராம்... இவர், தனது அலுவலகத்திற்கு பொதுமக்கள் கொண்டு வரும் புகார் மனுக்களை துணை கமிஷனரின் பார்வைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக தானே விசாரணை நடத்தி தீர்ப்பு எழுதி விடுகிறாராம்.. மனு கொடுத்தவர்களிடமும், எதிர் தரப்பினரிடமும் முதலில் விசாரணை நடத்துவாராம்.. விசாரணை நடத்தும் போதே பேரம் பேச ஆரம்பித்து விடுவாராம்.. அதில் யார் அதிக கரன்சி கொடுக்க முன்வருகிறார்களோ அவர்களுக்கு சாதகமாக முடிவு எடுத்து தீர்ப்பை வாசித்து விடுவாராம்.. புகார் உண்மை தன்மை, நியாயம், தர்மத்தை எல்லாம் பார்ப்பது இல்லையாம்.. கரன்சி குவிப்பது மட்டுமே குறியாக இருக்கிறாராம்.. பொதுமக்களிடம் கரன்சி கறப்பதோடு மட்டுமல்லாது சக போலீசாரிடமே ஏட்டையா ஆட்டைய போட்டது தான் இப்ப மாநகர் போலீசில் ஹாட் டாபிக்காக இருக்காம்.. மாநகரில் பணிபுரிந்து வரும் போலீசாருக்கு விரும்பிய இடத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கொடுப்பதாக கூறி போலீஸ்காரர்களிடமே வசூல் வேட்டையை நடத்தி இருக்கிறாராம்.. ஒவ்வொரு போலீசாரிடமும் இடத்திற்கு ஏற்ப ரேட் பிக்ஸ் செய்து பணத்தை வாங்கி இருக்கிறாராம்.. ஏட்டையாவின் பேச்சை நம்பி 10க்கும் மேற்பட்ட போலீசார் பணத்தை கொடுத்து ஏமாந்திருக்கிறார்களாம்.. அதோடு ஏட்டையா இரவு நேரங்களில் தனது நண்பர்களுடன் நட்சத்திர மதுபான பார்களுக்கு சென்று மூச்சு முட்ட ஓசியில் குடித்துவிட்டு டாடா காட்டி விடுகிறாராம்.. அடுத்தடுத்து புகார்கள் கிளம்பி உள்ளதால் ஏட்டையாவின் நடவடிக்கைகள் இப்போது ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒரு தொகுதிக்காக ஒரே கூட்டணியில் உள்ள மூன்று பேர் மல்லுக்கட்ட ஆரம்பிச்சிட்டாங்களாமே தெரியுமா..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா.

‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்டத்தைச் சேர்ந்த மலராத கட்சியின் மாஜி மாவட்ட தலைவர் வரும் தேர்தலில் எப்படியாவது தலைநகரத்து தொகுதியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறாராம்.. சரியான கூட்டணி அமையாததால் கடந்த தேர்தலில் களம் காண்பதை பற்றி சிந்திக்காமல் ஒதுங்கியே இருந்தவர், இந்த முறை இலைக்கட்சியுடன் கூட்டணி ஏற்பட்டுவிட்டதால் குஷியாயிட்டாராம்.. எப்படியாவது தலைநகர தொகுதியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் காய் நகர்த்தி வருகிறாராம்.. ஏற்கனவே, இத்தொகுதியை கேட்டு, சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள முருகப்பெருமான் பெயர் கொண்டவரும், மீசைக்கார மாஜி அமைச்சரும் தலைமையிடம் முட்டி மோதி வர்றாங்க.. தொகுதி எனக்குத்தான் என்று கூறிக் கொண்டு தலைமையின் அனுமதிக்காக தவமாய் தவமிருக்கின்றனர். இது தெரிந்தும் தெரியாதவர் போல, மலராத கட்சியின் மாஜி மாவட்ட தலைவர் சத்தமில்லாமல் தொகுதியை கைப்பற்றுவதை மட்டுமே இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறாராம்.. ஒரு தொகுதிக்காக ஒரே கூட்டணியில் உள்ள 2 கட்சிகளை சேர்ந்த 3 பேர் மல்லுக்கட்டுவதால் தலைநகர தொகுதி, தேர்தல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வரும் தேர்தலில் நெற்களஞ்சிய மாவட்டத்தின் குறிப்பிட்ட தொகுதி கிடைக்காவிட்டால் உள்ளடி வேலைக்கு தயாராகி வர்றாராமே இலைக்கட்சி நிர்வாகி ஒருத்தர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘நெற்களஞ்சியம் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிட வேண்டும் என இலை கட்சியின் நிர்வாகி ஒருவர் ரொம்ப தீவிரமாக இருக்கிறாராம்.. ஒருவேளை அந்த தொகுதி கிடைக்காமல் கூட்டணிக்கு சென்று விட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கையை இப்போதே அந்த நிர்வாகி தொடங்கி விட்டாராம்.. நமக்கு தான் சீட் கிடைக்க வேண்டும், அவ்வாறு நடக்கா விட்டால், நமது வேலையை தேர்தலில் காண்பிக்க வேண்டும் என தனது ஆதரவாளர்களிடம் சொல்லி வருகிறாராம்.. தற்போது, இந்த தகவலையும் வெளியே கசிய விட்டுள்ளாராம்.. இதன் மூலம் கூட்டணியில் உள்ளவர்கள் சீட் கேட்க மாட்டார்கள் என அந்த முக்கிய நிர்வாகி நினைக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒரே இடத்தில் ஆண்டுக்கணக்கில் அமர்ந்து பர்ச்சேஸில் பல லட்சம் சுருட்டும் கில்லாடி ஊழியர்பற்றி தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பர்ச்சேஸ் பிரிவு என தனியாக ஒரு அலுவலகம் இயங்குகிறது.. மாநகராட்சி அலுவலகத்துக்கு தேவையான ஸ்டேஷனரி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் இந்த பர்ச்சேஸ் பிரிவு மூலம் மொத்தமாக கொள்முதல் செய்றாங்க.. இங்கிருந்து, மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு பொருட்கள் பிரித்து அனுப்பப்படுகிறது. இந்த பிரிவுக்கு உதவி கமிஷனர் ஒருவர் தலைமை வகிக்கிறார். இவரது கட்டுப்பாட்டில், நான்கு எழுத்து பெயர் கொண்ட ஒரு ஊழியர், சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பணியாற்றி வர்றாராம்.. இவரது கேடரில் பணியாற்றும் பலர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இவர் மட்டும் அப்படியே ஒட்டிக்கொண்டு இருக்கிறாராம்.. காரணம், கரன்சிதான் என்கிறார்கள்.

பர்ச்சேஸ் செய்யும் பொருட்களுக்கு எப்படி பில் போடுவது, அதில் உள்கமிஷன் எப்படி அடிப்பது, தப்பை... தப்பு இல்லாமல் செய்வது எப்படி? என்பதில் இவர் படு கில்லாடியாம்.. பல நேரங்களில், இவருக்கு மேல்நிலையில் உள்ள உதவி கமிஷனருக்கு தெரியாமலேயே பல லட்சங்களை சுருட்டி விடுகிறாராம்.. சில பெண் ஊழியர்களின் பலவீனங்களை பயன்படுத்திக்கொண்டு, லாவகமாக அவர்களை வளைத்து போடுவதிலும் இவர் பலே கில்லாடியாம்.. ஒரே இடத்தில் அமர்ந்து, சுருட்டும் இவர் மீது ஏன் நடடிக்கை எடுக்கக்கூடாது என்பது சில நியாயமான ஊழியர்களின் கூக்குரலாக ஒலிக்கிறது..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.