வெற்றி என்பது ஒரே நாளில் பெறப்படுவதில்லை,சாதனை என்பது ஒரே முயற்சியில் நிகழ்த்தப்படுவதில்லை. முன்னேற்றம் என்பது ஒரே தடவை கிடைத்து விடுவதில்லை. இவை படிப்படியாய் பலகட்ட உழைப்புக்குப் பிறகு வந்து சேர்வது.மன கிளர்ச்சியை செயல் படுத்த செயல் தூண்டல் அதாவது தன்னம்பிக்கை அவசியம்.
குதிரை சவாரி வேறு, குதிரை பந்தயம் வேறு, நீங்கள் குதிரையில் உட்கார்ந்து உங்கள் மனம் போன போக்கில் எங்குவேண்டுமானாலும் செல்லலாம். மெதுவாகவோ, வேகமாகவோ சென்று வரலாம்.அது சவாரி. பந்தயம் என்பது குறிப்பிட்டப் பாதையில் குறிப்பிட்ட வேகத்தில் செலுத்தி, மற்ற குதிரைகளை கடந்து வெற்றிக்கோட்டை தொடுவது. சவாரியில் நோக்கமில்லை, பந்தயத்தில் நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கம் தான் வெற்றி. அதை அடைய உங்களுடைய சரியான பாதையில் இன்னொருவர் செலுத்தியாக வேண்டும். அந்த இன்னொருவர் தான் செயல் தூண்டல்.அதாவது தன்னம்பிக்கை.
வாழ்க்கையில் இருந்து நீங்கள் எதைப் பெற வேண்டுமானாலும் அதற்குரிய விலையை கொடுத்து தான் பெற வேண்டி இருக்கும்.அந்த விலை பணமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை,அது வேறு எந்த வடிவிலும் இருக்கலாம். நேரம், உழைப்பு, ஆய்வு, திட்டம்,கண்டறிதல், புரிதல் என்று எப்படியும் இருக்கலாம். அடுத்தது மிக முக்கிய தேவை வெற்றிக்கான கொள்கை. (ஃபார்முலா) நீங்கள் விரும்பியதை நிகழ்த்த,கொள்கை தேவை.இந்த ஃபார்முலா படிப்புக்கும் தேவைப் படும், தொழிலுக்கும் தேவைப்படும்.
நாம் வெற்றி பெற வேண்டுமென்றால் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும். அதற்கு நாம் எவ்வளவு தூரம் வந்திருக்கின்றோம். இன்னும் எவ்வளவு தூரம் நான் போக வேண்டி இருக்கிறது என்பதை எண்ணி பாருங்கள். எல்லாமே முடிகிற காரியங்கள் தான், காலம் எல்லாவற்றுக்கும் விடைகளை வைத்திருக்கிறது. நேரத்தில் அதற்குரிய நேரத்தில் எல்லாமே சாத்தியமாகிவிடும். உங்கள் பாதையில் உள்ள சில பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுவிட்டால் திகைப்பும்,ஐயமும் அகன்றுவிடும்.பிறகு, எல்லாமே எளியனவாய் இருக்கும். பனாமாக் கால்வாய் ஒரு மகத்தான சாதனை. பிரெஞ்சுக்காரர்கள் அதனைப் பத்தொன்பது ஆண்டு கால உழைப்பில் உருவாக்கினார்கள்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி மெக்டொனல், விமான கழக தலைவர் வால்டர் பர்க் என்பவரை அழைத்து, மனிதனை நிலாவுக்கு அழைத்துச் செல்ல முடியுமா?பாருங்கள் என்றார்.
அது முடியாத காரியம் என்று பர்க் சொல்லிவிடவில்லை.சாத்தியமற்ற ஒன்றை நிஜமாக்குவதற்கு என்னென்ன தேவைப்படும் என்பதை அவர் ஆராய்ந்தார். விண்கலத்தை ஈர்ப்புவிசைக்கப்பால் எடுத்துச் செல்லக்கூடிய ராக்கெட் பூஸ்டர் ஒன்றைத் தயாரிக்க வேண்டியிருக்கும் என்பதை அறிந்தார். பர்க் ஒரு பொறியியல் நிபுணர். பெரிய பிரச்னை என்பது அனேக பிரச்னைகளை உள்ளடக்கியது தான் என்பதை புரிந்து கொண்டார்.
சிறு சிறு பிரச்னைகள் என்றாலும் வெவ்வேறு வகையானவை. விண்வெளிக்கு எப்படி பயணம் செய்வது என்னும் பிரச்னையை அவர் 20 சிறிய பிரச்னையாய்ப் பிரித்துக் கொண்டார். அவற்றுள் எந்த பிரச்னையை தாமே கையாள்வது, எந்தெந்த பிரச்னைக்கு உதவிகள் தேவைப்படும் என்பதை தீர்மானித்தார்.பர்க் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு முடிந்தது 1969 ஆம் ஆண்டில் ஒருநாள்... அந்த நாளில் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திர மண்டலத்தில் கால் பதித்தார்.
உழைப்பு சிந்தனைக்குரியது, உங்கள் வேலை பற்றிய நேர்மறை எண்ணம் உங்களிடம் இருந்தால், கனவுகள் நிஜமாகும், சிந்தனையாகட்டும், செய்முறையாகட்டும், பழைய முறைகளை தூக்கி எறியுங்கள், புதிய சிந்தனைகளுடன், புதிய இலக்கை தேர்ந்தெடுங்கள்! அந்த இலக்கு உயர்ந்த இலக்காக இருக்கட்டும், இதற்கு உதாரணமாக இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதனைப் புரிந்து வரும் பலரின் வெற்றி கதைகள் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படித்து, இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக கலக்கி வரும் சி.வான்மதி ஐஏஎஸ் அவர்களின் வெற்றி கதையை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படித்து, யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று, ஐஏஎஸ் அதிகாரியாக வேறு மாநிலத்தில் சாதித்து வருகிறார் கார் டிரைவர் மகள் சி.வான்மதி ஐஏஎஸ்.சாதாரண சூழலில் இருந்து படித்து,சாதனைப் புரிந்த அவரின் வெற்றி இன்றைய இளம் பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் ஒரு உன்னதப் பாடமாகும். ஒரு பெண் கல்வி கற்றால், ஒரு குடும்பமே முன்னேறும் என்பதற்கு ஏற்ப, கல்வியின் மூலம் தன் குடும்பத்தை மட்டுமின்றி, பெண்களுக்கான அடுத்தக்கட்ட விதையும் அவர் படித்த பள்ளியில் விதைத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் திம்மையன்புதூரை சேர்ந்தவர் வான்மதி. இவரின் தந்தை சென்னியப்பன், கார் டிரைவராக உள்ளார்.வான்மதியின் குடும்பம் எளிமையான பின்னணியை கொண்டது. இவரின் பள்ளி பருவத்தில் குடிசை வீட்டில் வசித்து வந்தார். இவர் 12-ம் வகுப்பு வரை சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். பள்ளி காலக் கட்டத்தில் பொருளாதார ரீதியாக பல தியாகங்களையும், ஏக்கங்களையும் கடந்து வந்தார்.
கல்வியின் மீது ஆர்வம் கொண்ட வான்மதி, பள்ளிப் படிப்பை முடித்த உடன், அவரின் உறவினர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்க கூறியுள்ளனர். உயர்கல்வியில் சேர விரும்பிய அவருக்கு அவரின் பெற்றோர் உறுதுணையாக இருந்த காரணத்தினால், தொடர்ந்து பி.எஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ படித்தார்.
நம் அனைவருக்கும் சிறிய வயதில் ஒருவரை பார்த்து, அதே போன்று ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படிதான் வான்மதிக்கும், அவர் 8ஆம் வகுப்பு படிக்கும்போது, பள்ளியில் நடைபெற்ற ஒரு விழாவிற்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் வந்துள்ளார். அவரை பார்த்து தானும் ஒரு கலெக்டர் ஆக வேண்டும் என கனவுடன் இருந்தார். அவர் கல்லூரி படிப்பை முடித்த பின்னர் யுபிஎஸ்சி தேர்விற்கு படிக்க தயாரானார்.
பெண் கல்வியிலும், அதன் மீதும் விடாப்பிடியான நம்பிக்கை வைத்திருந்த வான்மதி, 2011-ம் ஆண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார். முதல்நிலை, முதன்மை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற நேர்காணல் அவருக்கு அவ்வளவு உதவியாக அமையவில்லை. முடிவுகள் வெளியாகி, அவர் பெயர் இடம்பெறவில்லை. ஒரு கட்டத்தை கடப்பதே பெரியது என்றால், நேர்காணல் வரை சென்று வெற்றி பெறாதது எப்படி இருந்திருக்கும். இருப்பினும் விடாது 2ஆம் முறை எழுதினார். ஆனால் இந்த முறை முதல்நிலைத் தேர்வை கூட தேர்ச்சி பெறவில்லை. மீண்டும் 3ஆம் முறை எழுதினார், இதில் முதன்மைத் தேர்வில் தோல்வி அடைந்தார்.
குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வேலைக்கு செல்ல எண்ணிய அவர், வங்கிபணிக்கான தேர்வை எழுதி, அதில் வெற்றி பெற்றார். 2014-ம் ஆண்டு முதல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி மேலாளராக பணியில் சேர்ந்தார். இருப்பினும், அவரின் கலெக்டர் கனவு அவரை ஓட வைத்துக்கொண்டே இருந்தது.
தொடர்ந்து தோல்விகள், நிதி சிக்கல் என ஏராளமான தடங்கல்களுடன் சோர்வடைந்திருந்தாலும், ஜெயித்தே ஆக வேண்டும் என்பதை அவர் ஒருபோதும் மறந்தது இல்லை. முழு நேர வேலைக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி படித்தார். மீண்டும் யுபிஎஸ்சி தேர்வை எழுதினார். நேர்காணல் வரை சென்றார். 2015-ம் ஆண்டு முடிவுகள் வெளியாகின. அகில இந்திய அளவில் 152 இடம் பெற்று வெற்றிப் பெற்றார். இதுகுறித்து பேசிய அவர், “பெண்களுக்கு கல்வி தான் மூலதனம். கல்வியை முழுமையாக கற்று, தன்னுடைய ஆழ்மனதில் லட்சியத்தை ஏற்படுத்தினால், கட்டாயம் வெற்றி பெறலாம்” என கூறியுள்ளார். மேலும் அவரின் வெற்றியை தொடர்ந்து, அவர் படித்த அரசு பள்ளியில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தன்னைப் போலவே அந்த பள்ளியில் படிக்கக் கூடிய மாணவர்களும் உயர்ந்த இலக்கை தீர்மானித்து சாதிக்க வேண்டும் என்று உரையாற்றினார் வான்மதி.
வான்மதிக்கு ஐஏஎஸ் பதவி ஒதுக்கப்பட்டது. பயிற்சி முடித்து மகாராஷ்டிராவில் பதவி ஏற்றுகொண்டார். மகாராஷ்டிரா மாநிலத்தில் பல துறைகளில் பொறுப்பாற்றிய அவர், மாவட்ட கலெக்டராக சிறப்புடன் செயலாற்றி வருகிறார். அவரின் பயணம், எப்படியாவது சாதித்தே ஆக வேண்டும் என ஓடிக்கொண்டு இருக்கிற பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

