Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

முதுமையின் காரணமாக தாயை வீல் சேருடன் ஓடும் ரயில் முன் தள்ளி கொடூர கொலை; மகன் கைது: திருவாலங்காடு அருகே பரபரப்பு

சென்னை: முதுமையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த பெற்ற தாயை பாரமாக நினைத்த மகன் வீல் சேரில் அழைத்துச் சென்று ஓடும் ரயில் முன் தள்ளி கொடூர கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த மணவூர் அருகே காபுல் கண்டிகை சேர்ந்தவர் பத்மாவதி (75). அவருக்கு மூன்று மகன்கள். அவரது கணவர் சேஷாத்திரி ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் மூதாட்டிக்கு குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ.45 ஆயிரம் கிடைப்பதாக கூறப்படுகிறது.

ஓய்வூதிய பணத்தை வைத்துக் கொண்டு மூதாட்டி அவரது இளைய மகன் பார்த்தசாரதி(43) கவனிப்பில் வசித்து வந்துள்ளார். பார்த்தசாரதியை அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் விட்டு சென்று விட்ட நிலையில் முதுமையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தாயை பார்த்தசாரதி கவனித்துக் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மணவூர் ரயில் நிலையத்திற்கு அருகே தண்டவாளத்தில் நேற்று இரவு மூதாட்டி அடிபட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

தகவலின் பேரில் அரக்கோணம் ரயில்வே போலீசார் இறந்த மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டி தண்டவாளம் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த இடத்தில் வீல் சேர் நொறுங்கி கிடப்பதை பார்த்து சந்தேகம் அடைந்த ரயில்வே போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில் ரயில் நிலைய நடைமேடையில் தாயை வீல் சேரில் அமர வைத்துக் கொண்டு அழைத்துச் சென்ற போது சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை செல்லும் அதிவிரைவு ரயில் முன் வீல் சேருடன் தள்ளி கொலை செய்தது தெரிய வந்தது. பெற்ற தாயை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்த பார்த்தசாரதியை நேற்று காலை ரயில்வே போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். முதுமையில் நோய் பாதிப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த அம்மாவை பார்த்துக் கொள்ள முடியாததால் ரயில் முன் தள்ளிவிட்டதாக குற்றத்தை பார்த்தசாரதி ஒப்புக் கொண்டார்.