வெனிசுலாவுடன் மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்; அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது 65 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்
வாஷிங்டன்: வெனிசுலா நாட்டின் 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் வளத்தின் கட்டுப்பாட்டைப் பெறும் வகையில் அந்த நாட்டுடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றான வெனிசுலாவிடம் சுமார் 303 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது.
இருப்பினும், பழமையான உள்கட்டமைப்பு வசதிகளால் உலகளாவிய எண்ணெய் தேவையில் வெறும் 1 சதவீதமே அங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த நாட்டின் கச்சா எண்ணெய் வளம் மீது அமெரிக்காவுக்கு எப்போதுமே ஒரு கண். அந்த நாட்டுக்கு படைகளை அனுப்பி அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து அமெரிக்காவிற்கு கொண்டு சென்றது டிரம்ப் அரசு.
இந்நிலையில், வெனிசுலாவின் எண்ணெய் வளத்தில் கணிசமான பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளிடையே கையெழுத்தாகியுள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்த டிரம்ப், ‘உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் அமெரிக்கா, வெனிசுலா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் ஆகியோரால் பேச்சுவார்த்தைக்குப் பின் சாத்தியமானது’ என்று தெரிவித்துள்ளார்.அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெனிசுலாவில் சுமார் 100 பில்லியன் டாலர் அளவுக்கு தனியார் முதலீடு கிடைக்கும் என்றும், அமெரிக்காவில் பெட்ரோல் விலை குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.



