Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வங்கி லாக்கரில் மெகா மோசடி; ரூ.7.4 கோடி அசல் ரூபாய் நோட்டுகளுக்கு பதில் கள்ள நோட்டுகளை வைத்த அதிகாரிகள்: ரிசர்வ் வங்கிக்கு அனுப்பியதில் ரூ.4.36 லட்சம் குறைந்ததை விசாரித்தபோது சிக்கினர்

சஹாரன்பூர்: உத்தரப் பிரதேசத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் லாக்கரில் இருந்த சுமார் ரூ.7.40 கோடி மதிப்பிலான உண்மையான ரூபாய் நோட்டுகளை எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக கள்ள நோட்டுகள் வைக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசடி தொடர்பாக வங்கியின் மூத்த அதிகாரி உள்பட 3 பேர் மீது போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கரன்சி செஸ்ட் எனப்படும் பணப்பெட்டகம் உள்ளது. இந்த மெகா சைஸ் லாக்கரில் அந்த மாவட்டம் முழுவதும் உள்ள வங்கிக் கிளைகளுக்கு இங்கிருந்துதான் ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்படும்.

அதே போல், வங்கி கிளைகளில் இருந்து வசூலாகும் ரூபாய் நோட்டுக்களும் இங்கு பாதுகாப்பாக வைக்கப்படும். பண இருப்பு அதிகரிக்கும்போது, அது ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி, சஹாரன்பூர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கரன்சி செஸ்டில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு பணம் அனுப்பப்பட்டது. அந்தப் பணத்தைச் சரிபார்த்தபோது ரூ.4.36 லட்சம் குறைவாக இருப்பது தெரியவந்தது. ஆரம்பத்தில் இது சாதாரண கணக்கு தவறாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், இந்தக் குறைவு குறித்து விரிவான தணிக்கை நடத்தப்பட்டபோது, அதிகாரிகளுக்கே அதிர்ச்சி காத்திருந்தது.

குவிந்திருந்த கள்ள நோட்டுகள்: வங்கியின் பண இருப்பு முழுமையாகச் சோதனை செய்யப்பட்டபோது, கரன்சி செஸ்டுக்குள் கணிசமான அளவில் கள்ள ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது ரூ.4.36 லட்சம் குறைவு என்பது உண்மையில் நடந்திருக்கக்கூடிய மிகப் பெரிய மோசடியின் ஒரு சிறிய பகுதி மட்டுமே என்பது தெரியவந்தது. முதல்கட்டத் தணிக்கையின் கணக்குப்படி, சுமார் ரூ.7.40 கோடி மதிப்பிலான உண்மையான கரன்சி நோட்டுக்கள் எடுக்கப்பட்டு, அதற்குப் பதிலாக கள்ள நோட்டுகள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

3 அதிகாரிகள் மீது சந்தேகம்: இந்த வழக்கில் சஹாரன்பூர் சதார் காவல் நிலையத்தில், வங்கியின் நோடல் அதிகாரி அருண் குமார் சவுபே அளித்த புகாரின் அடிப்படையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் வங்கியின் மூத்த வட்டார மேலாளர் ரவிக்குமார், கரன்சி செஸ்ட் மேலாளர்கள் சுஷில் சர்மா, அமித் குமார் ஆகிய மூன்று அதிகாரிகள் முக்கிய சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக சஹாரன்பூர் டிஐஜி அபிஷேக் தெரிவித்துள்ளார். மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிசிடிவி முதல் கணக்கு பதிவுகள் வரை ஆய்வு

மோசடி நடைபெற்ற விதத்தை கண்டுபிடிக்க போலீஸார் பல்வேறு ஆவணங்களையும் ஆதாரங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். வங்கியின் பரிவர்த்தனைப் பதிவுகள், பணக் கணக்கு மற்றும் தணிக்கைப் பதிவேடுகள், கரன்சி செஸ்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. உண்மையான பணம் எந்த நேரத்தில் வெளியே எடுக்கப்பட்டது, கள்ள நோட்டுகள் எப்போது உள்ளே வைக்கப்பட்டன, அந்த நேரத்தில் யார் யாருக்கு கரன்சி செஸ்டை அணுகும் வாய்ப்பு இருந்தது என்பதைக் கண்டறிவதே விசாரணையின் நோக்கமாக உள்ளது.

எவ்வளவு கள்ள நோட்டு? இன்னும் கணக்கு முடியவில்லை

இந்த மோசடியில் உண்மையில் எவ்வளவு கள்ள நோட்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை. அவற்றை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, மோசடி செய்யப்பட்ட மொத்தத் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.