சேலம்: 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று மாநிலம் முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிய பணியிடங்களை தோற்றுவிக்காமல், ஏற்கனவே உள்ள பணியிடங்களை பணி நிரவல் செய்வதை கண்டித்தும், பணி நிரவல் ஆணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசில் பணிபுரியும் செவிலியர்களுக்கு இருப்பது போல் செவிலியர் என்ற பெயரை செவிலியர் அலுவலர் என மாற்ற வேண்டும், 10 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் செவிலியர்களுக்கு தொகுப்பூதிய முறையை ரத்து செய்துவிட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
கடந்த 3 நாட்களாக கருப்பு பட்டை அணிந்து பணியாற்றி வந்த செவிலியர்கள், இன்று முதல் 3 நாட்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். சேலம் மாவட்டத்தில் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனையில் இன்று காலை 7 மணிக்கு நர்சுகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வளர்மதி, மாவட்ட பொருளாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் சுதா பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு நர்சுகள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன்தாஸ் தலைமை வகித்தார்.
கரூர்
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க கிளை தலைவர் மகாலட்சுமி தலைமை வகித்தார். பின்னர் மருத்துவமனை வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தென்மண்டல பொதுச்செயலாளர் சாந்தி தலைமை வகித்தார். தென்மண்டல துணை தலைவர் மாரியம்மாள், மாவட்ட செயலாளர் ஜாய்ஸ் கரோலின், தலைவர் சகாயராணி, செவிலிய கண்காணிப்பாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
நெல்லை
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் சார்பில் செவிலியர்கள் இன்று காலை கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். மருத்துவமனை பணிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில், இரவு பணி முடிந்த மற்றும் அடுத்த பணி தொடரும் நர்சுகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தங்களது கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் இன்று செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
