நிர்வாண நிலையில் சடலம் மீட்பு திருமணத்துக்கு மிரட்டியதால் பியூட்டிசியன் கொலை அம்பலம்: கள்ளக்காதலன் கைது
கோபி: வாழை தோட்டத்தில் நிர்வாண நிலையில் புதைக்கப்பட்ட இளம்பெண், பியூட்டிசியன் என்பதும், அவர் திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கள்ளக்காதலனான தோட்ட உரிமையாளர் கொலை செய்ததும் அம்பலமானது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே கெட்டிசெவியூரை சேர்ந்தவர் மோகன்குமார் (27). பி.காம் படித்துள்ள இவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் ஒரு இளம்பெண் நிர்வாண நிலையில் 3 அடி குழியில் புதைக்கப்பட்டு கிடந்தது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர், அந்தியூர் அருகே பிரம்மதேசத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி சோனியா (35) என்றும், ஈரோடு அருகே உள்ள திண்டலில் உள்ள பியூட்டி பார்லரில் பியூட்டிசியனாக வேலை செய்ததும், சோனியாவின் கணவர் ராஜேந்திரன், 2 ஆண்டுக்கு முன் இறந்தநிலையில் பிளஸ் 2 படிக்கும் மகள், 10வது படிக்கும் மகன் மற்றும் தாய் ராஜாமணியுடன் ஆப்பக்கூடலில் வசித்ததும் தெரிய வந்தது.
சோனியாவின் செல்போன் சிக்னலை சோதித்தபோது அவர் தோட்ட உரிமையாளர் மோகன்குமாருடன் பலமுறை பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் 2 ஆண்டுகளுக்கு முன் புதுக்கரைபுதூரில் தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் மோகன்குமார் வேலை செய்தபோது, அதே நிறுவனத்தில் சோனியாவும் வேலை செய்துள்ளார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. மோகன்குமாருக்கு குழந்தை இல்லாததால் 2 மாதங்களுக்கு முன் மனைவி பிரிந்து சென்று விட்டார்.
இதனால் தன்னை திருமணம் செய்யும்படி சோனியா வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு விவசாய தோட்டத்திற்கு சோனியாவை வரவழைத்துள்ளார். அப்போது அவர் தன்னை திருமணம் செய்யாவிட்டால் ஊரில் உள்ளவர்களிடம் சொல்லிவிடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோகன்குமார், கல்லால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்து ஏற்கனவே வெட்டி வைத்த குழியில் தள்ளி புதைத்துள்ளார்.
சோனியாவின் செல்போன், ஆடைகளை வேட்டைகாரன் கோயிலில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் வீசியுள்ளார். போலீசார் உடலை மீட்டு விசாரித்தபோது கொஞ்சமும் பதட்டம் இல்லாமல் இயல்பாகவே பதில் கூறி உள்ளார். கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை அங்கேயே விட்டு சென்றதும், கொலை செய்த போது சிந்திய ரத்த துளிகளும் அவரை காட்டி கொடுத்து விட்டது. அதைத்தொடர்ந்து மோகன்குமாரை போலீசார் கைது செய்தனர்.