Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ஏமாற்றமே மிஞ்சியது...!

தவெக அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான முதல் நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டமன்றத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று தாக்கல் செய்தார். கடந்த திமுக ஆட்சியில், மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை உயர்த்தி மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். ஆனால், இதுதொடர்பான அறிவிப்பு எதுவும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. இது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தகுதியான அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு (காஸ்) சிலிண்டர்கள் வழங்கப்படும் என்ற தவெக தேர்தல் வாக்குறுதியும் காற்றில் கலந்த கனவாகிவிட்டது. அனைத்து வகை அரசு பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் திட்டம் அறிவிக்கப்படுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் இருந்தது. இதிலும் பெண்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படி மகளிருக்காக அறிவிக்கப்பட்டிருந்த திட்டங்கள் குறித்த எந்தவொரு தகவலும் தற்போதைய நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

கல்வித்துறைக்கான நிதி சுமார் ரூ.4 ஆயிரம் கோடி குறைந்திருப்பது இளைய சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. ‘வேலையில்லா பட்டதாரிகளுக்கான நிதி உதவி திட்டம்’ குறித்த அறிவிப்பும் இல்லை. இது, இளைஞர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், உள்கட்டமைப்பு என பல முக்கிய அறிவிப்புகள் வெளிவந்தபோதிலும், தேர்தலின்போது முக்கிய உறுதிமொழிகளாக அளிக்கப்பட்ட பல எதிர்பார்ப்புகளுக்கு, ஏமாற்றமே பதிலாக அமைந்தது.

தவெக அரசு பதவியேற்பு விழாவின்போதே, அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன்சுமை குறித்து ஆய்வுசெய்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார். அதன்படி, கடந்த ஜூன் மாதம் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டார். தமிழ்நாடு அரசுக்கு 100 ரூபாய் வரவு எனில், 145 ரூபாய் செலவு ஆகிறது என அந்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அது மட்டுமின்றி, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் 13 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், திருத்தப்பட்ட பட்ஜெட்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2.54 லட்சம் கோடியாக உள்ளதாக நிதியமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார். மேலும் 2026-27-ம் ஆண்டில் மொத்த பட்ஜெட் - ரூ.3,50,027 கோடி என்றும், வருவாய் பற்றாக்குறை - ரூ.55,775 கோடியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நிதிநிலையை சீரமைக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் தேவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.  நிதி ஆதாரம் இல்லையென்றால், நலத்திட்ட உதவிகள் சாத்தியம் இல்லை என்று கூறிய அவர், அரசு நலத்திட்ட பயனாளிகளை மறுஆய்வு செய்து, அடையாளம் காண இருப்பதாகவும் கூறியுள்ளார். மாற்றத்தின் முகமாக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின், முதல் பட்ஜெட் நிஜ மாற்றத்தை தரவில்லை. மாறாக, ஏமாற்றத்தையே தந்துள்ளது.