Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சாகுபடிக்கு உதவாது

மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தும் கர்நாடகா அரசு, தண்ணீர் திறக்க மாட்டோம் என அடம் பிடித்து வருகிறது. இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 90.47 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 35 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனிடையே, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு இன்று காலை தண்ணீரை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்.

மேட்டூர் அணையில் இருந்து வழக்கமான நாளான ஜூன் 12ம் தேதிக்கு பதிலாக, இந்தாண்டு செப்டம்பர் 1 முதல் 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. குறைந்த கால அளவிலான தண்ணீர் திறப்பு குறித்து விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பா சாகுபடிக்கு குறைந்தது 120 முதல் 135 நாட்கள் வரை தொடர்ந்து தண்ணீர் தேவைப்படும். ஆனால், தற்போதைய 45 நாள் தமிழக அரசின் அறிவிப்பு சம்பா சாகுபடிக்கு முழுமையாக உதவாது. டெல்டாவின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவே சுமார் 10 நாட்கள் வரை ஆகும். இதனால், தற்போதைய குறுகிய கால தண்ணீர் வீணாகாமல் இருக்க, செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் திறந்தால் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை பயிர்களை காப்பாற்ற ஏதுவாக இருக்கும்.

தமிழக அரசே குறைந்த நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறப்பதாக அறிவிப்பது, எதிர்காலத்தில் காவிரி நீர் பங்கீட்டு வழக்குகளில் கர்நாடக அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள வழிவகுக்கும் என விவசாயிகள், எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையில் நீர் இருப்பும், வரத்தும் குறைவாக உள்ளது. அணையை திறந்துவிட்டு, பெயரளவுக்கு குறைவாக தண்ணீர் விடுவதால், சாகுபடிக்கு பயன் தராது. எனவே, நீர்மட்டம் 100 அடியை எட்டிய பிறகு தண்ணீர் திறக்க வேண்டும். அதுவரை திறக்கக்கூடாது என விவசாய சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தும் பயன் இல்லை. தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில் சிஆர் 1009 விதை நெல் ரகம் சிறந்தது. ஆனால், அந்த ரகம் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

குறுவைக்கு காவிரி நீர் வராததால் வருவாய் கிராம அளவில் 75 சதவீதம் சாகுபடி செய்யாமல் காப்பீடுக்கான பிரீமியம் செலுத்திய விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரடி விதைப்பு செய்வதற்கு உழவு மானியம் கொடுத்தால், விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். மேலும், சம்பா தொகுப்பு திட்டத்தையும் அறிவிக்க வேண்டும். அப்போது தான் விவசாயிகள் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். தற்போது அரிசி உள்பட தானியங்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு எகிறி கிடக்கிறது. வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும். எனவே விவசாயிகளை அரசு ஊக்கவிக்கும் திட்டங்களை அறிவித்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது.