ஸ்ரீபெரும்புதூரில் போதைப்பொருள் தடுப்பு சோதனை என்ற பெயரில் வடமாநில வாலிபர்களை மிரட்டி பணம் பறிப்பு: ஆடியோ வெளியானதால் பரபரப்பு
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் போதை பொருள் தடுப்பு சோதனை என்ற பெயரில் வடமாநில இளைஞர்களை மிரட்டி போலீசார் பணம் பறித்த சம்பவம் தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செரப்பணஞ்சேரி பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி படப்பை மற்றும் கூடுவாஞ்சேரி காவல் நிலைய தனிப்பிரிவு போலீசார், படப்பை பகுதியில் வசித்து வரும் பீகாரை சேர்ந்த ஜான்குமார் என்பவர் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அவரது படுக்கையறையில் சிறிய அளவிலான ஸ்மைக் என்ற போதைப்பொருள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதன்பிறகு ஒரகடம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட மதுராபுதுக்கோட்டை பகுதியில் வசிக்கும் சந்து, அகிலாஷ், பிரதீப் ஆகிய 3 வடமாநில வாலிபர்களை வஞ்சுவாஞ்சேரியில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது வடமாநில வாலிபர்களிடம், பணம் தந்தால் உங்களை விட்டுவிடுகிறோம், பணம் தரவில்லை என்றால் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவோம் என போலீசார் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் பயந்துபோன சந்து, தனது பெற்றோரிடம் இருந்து ரூ.20 ஆயிரம் வாங்கி போலீசாரிடம் கொடுத்துள்ளார். மற்ற இருவரிடமும் போலீசார் கூடுதலாக ரூ.30 ஆயிரம் கேட்டுள்ளனர். இதுகுறித்து சந்துவின் நண்பர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பணம் கொடுத்த சந்துவை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்த நபரின் தொலைபேசி எண்ணை கண்டறிந்து, அவர் பணிபுரியும் அலுவலகத்திற்கு சென்று மிரட்டியுள்ளனர். வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் வடமாநில வாலிபர்களை மிரட்டி போலீசார் பணம் பறித்த சம்பவம் குறித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனிப்பிரிவு போலீசாரிடம் கேட்டபோது, ”வடமாநில வாலிபர்களிடம் பணம் பறித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். போதை பொருள் வைத்திருந்த நபர்களிடம் விசாரணை மட்டும் தான் நடத்தி உள்ளனர். பணம் பெற்றது உறுதியானால் உயரதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.


