வட கிழக்கு பருவமழை தீவிரம் தென் மாவட்டங்களில் 2 நாள் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. வட மாவட்டங்களில் திருத்தணி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. சென்னையில் சில இடங்களிலும் நேற்று மழை பெய்தது.
இதற்கிடையே, கோவை, திண்டுக்கல், சேலம், திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. வால்பாறையில் 4 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகவும், சென்னை, தர்மபுரி, ஈரோடு, மதுரை, திருப்பத்தூர், புதுச்சேரியில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகமாகவும் வெப்பநிலை காணப்பட்டது.
இந்நிலையில், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்று சுழற்சி உருவாகியுள்ளது. அத்துடன் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இதேநிலை 25ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.