வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாளில் தென்னிந்திய பகுதிகளில் இருந்து விலகுகிறது
29ம் தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 15ம் தேதி தொடங்கியது. வழக்கமாக டிசம்பர் இறுதியில் வடகிழக்கு பருவமழை நிறைவடையும். தற்போது ஜனவரி இறுதியை எட்டியுள்ள நிலையில் இன்னும் வடகிழக்கு பருவமழை விலகாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களில் தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.