சென்னை: தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியிருக்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்தது. ஆனால் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட டெல்டா பல மாவட்டங்களில் வறண்ட வானிலையை நிலவி வருகிறது.
இந்த நிலையில், இன்று முதல் தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதில் சென்னையை பொறுத்தவரை இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வரும் 16ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நவம்பர் 17ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதில் நவம்பர் 18ஆம் தேதி தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களிலும் 19ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் தென்மேற்கு வங்கக்கடலில் அனேக பகுதிகளில் இன்றும் வரும் 17ஆம் தேதி வரை தமிழக கடலோர பகுதிகள் மன்னார் வளைகுடா, குமரி கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
