Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வட இந்தியர்களை பிளவுபடுத்தி திமுகவுக்கு எதிர்ப்பான தோற்றத்தை உருவாக்க நினைக்கும் முயற்சி எடுபடாது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: வட இந்தியர்களை பிளவுபடுத்தி, திமுகவுக்கு எதிர்ப்பான ஒரு தோற்றத்தை உருவாக்க நினைக்கும் பிரதமரின் முயற்சி தமிழகத்தில் எடுபடாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், அருகிலுள்ள கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டி வசதியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். இந்த வசதி முதற்கட்டமாக, பழனி, திருவரங்கம், திருவண்ணாமலை, சுவாமிமலை, சுசீந்திரம் உள்ளிட்ட 10 கோயில்களில் தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: பிரித்தாளுகின்ற தந்திரத்தை கையில் எடுத்து, இனத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்துகின்ற அரசு உலகத்திலேயே இருக்கிறது என்றால் அதற்கு முதல் பரிசு ஒன்றிய அரசுக்கு தரலாம். வட இந்தியர்களை நாங்கள் சகோதரத்துவத்துடன் தான் நடத்துகின்றோம். முதல்வர் நமக்கு நாமே பயணத்தை மேற்கொண்ட போது கூட, வட இந்தியர்களின் கோரிக்கைகளை கேட்டறிவதற்கான நிகழ்ச்சியை சவுகார்பேட்டையில் நடத்தினார். ஆகவே வட இந்தியர்களை நாங்கள் வேற்று கண்ணோடு பார்க்கவில்லை.

அவர்களும் மனிதர்கள், எங்களை சார்ந்தவர்கள். எங்கள் ஊனோடும், உணர்வோடும், வாழ்க்கை நடைமுறைகளோடும் ஒட்டி பிணைந்திருக்கிறார்கள். ஆகவே அவர்களை பிளவுபடுத்தி, திமுகவுக்கு எதிர்ப்பான ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிற பிரதமர் முயற்சி தமிழகத்தில் எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மயிலை த.வேலு எம்எல்ஏ, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் ரவிச்சந்திரன், சி.கல்யாணி, சிறப்பு பணி அலுவலர் ச.லட்சுமணன், இணை ஆணையர்கள் கி.ரேணுகாதேவி, பெ.க.கவெனிதா, கோயில் அறங்காவலர்கள் சி.டி.ஆறுமுகம், ப.திருநாவுக்கரசு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.