Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் நேற்று (26ம் தேதி) தொடங்கியது. மனுதாக்கல் செய்ய மார்ச் 5ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9ம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

அதன்படி, தமிழகத்தில் தம்பிதுரை, ஜி.கே.வாசன், என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி.செல்வராசு ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போதுள்ள எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் திமுக 4 எம்.பி.க்களையும், அதிமுக 2 எம்.பி.,க்களையும் தேர்வு செய்ய முடியும். தமிழகத்தை பொறுத்தவரை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் சென்னை, தலைமை செயலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதன்படி, சட்டப்பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளர் சாந்தியை தேர்தல் நடத்தும் அலுவலராகவும், செயலாளர் தேன்மொழியை உதவி தேர்தல் நடத்தும் அலுவலராகும் இந்திய தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது. அவர்களிடம் மனு வாங்கி விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி நேற்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 5ம் தேதி கடைசி நாளாகும். 28 மற்றும் 1ம் தேதி விடுமுறை ஆகும். முதல் நாளான நேற்று சுயேச்சை வேட்பாளராக சேலம், மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இவர் கடந்த 1988ம் ஆண்டு முதல் அனைத்து சட்டமன்றம், நாடாளுமன்றம், மக்களவை தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறார். இவர் தற்போது மனு தாக்கல் செய்திருப்பது 252வது வேட்புமனு ஆகும். மாநிலங்களவை தேர்தலில் போட்டி இருந்தால், வாக்குப்பதிவு மார்ச் 16ம் தேதி நடைபெறும். அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மாநிலங்களவை சீட் விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுக்கலாம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.