Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு எந்த கெடுவும் ஈரானுக்கு விதிக்கப்படவில்லை: டிரம்ப் பேட்டி

வாஷிங்டன்: அமெரிக்காவுடனான மோதலை முடிவுக்கு கொண்டுவர ஈரான் பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு எந்தவொரு குறிப்பிட்ட காலக்கெடுவும் இல்லை, எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘நாங்கள் இந்த போரில் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறோம். அவர்களுக்கு (ஈரான்) கடுமையான பணவீக்கம் உள்ளது, அவர்களுடைய பொருளாதாரம் சீர்குலைந்து வருகிறது, அவர்கள் மக்களை மிக மோசமாக நடத்துகிறார்கள்.

போராடும் மக்களையும் கொன்று குவிக்கிறார்கள். ஈரானுடனான பேச்சுவார்த்தையில் எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை, நான் அவசரப்படவும் இல்லை; அவர்களுக்கு எந்தவொரு குறிப்பிட்ட காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை. அவர்கள் எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. ராணுவ தாக்குதல்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் என இரண்டுமே பலன் அளிப்பதாக நான் நினைக்கிறேன்’ என்றார்.

இதற்கிடையே, போர் பதற்றத்தை தணிக்கவும் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்கவும் ஈரான் அதிகாரிகளை சந்திக்க கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி இன்று தெஹ்ரான் பயணம் மேற்கொள்ள இருப்பதாக கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மஜித் அல் அன்சாரி தெரிவித்துள்ளார். ராஜதந்திர பேச்சுவார்த்தையே கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்கும் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் சிறந்த வழியாகும் என்ற கத்தாரின் உறுதியான நிலைப்பாட்டின் அடிப்படையில் இந்த பயணம் அமைகிறது என்று அல் அன்சாரி கூறியுள்ளார்.