Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி இல்லை: வேளாண் பட்ஜெட்டில் அனைத்து தரப்பினரும் ஏமாற்றம்

* திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து பேரவையில் பங்கேற்பு

சென்னை: விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி தொடர்பான எந்த அறிவிப்பும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை. இதனால் அனைத்து தரப்பினரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் வேளாண் பட்ெஜட்டில் திமுக அரசின் பல்வேறு திட்டங்கள் பெயர் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்​டப்​பேர​வை​யில் 2026-27ம் நிதி ஆண்டுக்​கான தவெக அரசின் முதலா​வது பட்​ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றபிறகு முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்டில் பெண்கள், இளைஞர்கள், முதியவர்களுக்கான எந்த அறிவிப்புகளும், சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை. இதனால் பெரும் ஏமாற்றமடைந்தனர். தேர்தல் வாக்குறுதிகளும், தொலைநோக்கு திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.

இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டம் 2வது நாளான இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துறை சார்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் அவைக்கு வருகை தந்தனர். சரியாக காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், திருக்குறள் வாசித்து அதற்கு விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேரவையில் 2026-27ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து பேசினார். தவெக அரசு பொறுப்பேற்றவுடன் விவசாயிகளுக்கான கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் விவசாயிகளுக்கான கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை. முதலில் ரூ.50 ஆயிரம் வரை விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

விவசாயிகள் எதிர்ப்பை தொடர்ந்து அந்த தள்ளு படி என்பது 75 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. அதுவும் குறிப்பிட்ட கடன் உள்ளவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். தமிழக அரசு விவசாயிகளுக்கான கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஆற்றில் இறங்கி போராட்டம் மற்றும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினர். மேலும் சென்னையில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட முயன்ற சம்பவங்களும் அரங்கேறியது. இதனால், வேளாண் பட்ஜெட்டில் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக ஏதாவது அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தார்கள். அது போன்ற எந்த அறிவிப்பும் இல்லாததால் விவசாயிகள் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதியன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

ஆனால், இந்தாண்டு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், குறுவை சாகுபடி பொய்த்து போனது. குறுவை சாகுபடிக்காக நகை, சொத்து மற்றும் வீடுகளை அடமானம் வைத்து நெல் விதைகளை வாங்கி விவசாயிகள் நாற்று பயிரிட்டனர். தண்ணீர் திறந்து விடாததால் அவர்களால் நாற்றை பிடுங்கி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஆற்றுப்பாசனத்தை நம்பியிருந்த விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர். பல லட்சம் ரூபாய் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பட்ஜெட்டில் பயிருக்கான இழப்பீடு வழங்கப்படும் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க ரூ.17,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த திமுக ஆட்சியிலும் இதே போல் தான் பயிர் கடன் வழங்க நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால், இந்தாண்டு நிதி உயர்த்தி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களின் பெயர்கள் மட்டும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது: விவசாயிகளை வாழவைப்பது மழை தரும் வானம்தான் என்றாலும், சில நேரங்களில் அவர்களை வருத்துவதும் வானமாகத்தான் உள்ளது. இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள ’சூப்பர் எல் நினோ’ நிகழ்வினால் நாடு முழுவதும், குறிப்பாக, குறுவைப்பருவத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அதிக தாக்கம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அனைத்து மாவட்டங்களுக்கும் தயாரிக்கப்பட்டுள்ள ’மாவட்ட வேளாண்மை இடை ஏற்பாட்டு திட்டம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டு அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நம்முடைய முதல்வர், அடுத்த பிறவியில் தாம் விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்றார். ஆனால் இப்போதே அவர் எல்லா விவசாய குடும்பங்களுக்கும் மகனாகத்தான் இருக்கிறார். அதனால்தான், பயிர் சாகுபடியை தொடர்ந்து மேற்கொள்ள உழவர்களுக்கு வழங்கப்படும் இலவச மும்முனை மின்சார சேவையானது, இவ்வரசால் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, 2026-27ம் ஆண்டில் இலவச மின் இணைப்புகளுக்கான கட்டண தொகையாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு 7,432 கோடியே 58 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்தாண்டு திட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 2,509 கிலோ மீட்டர் நீளமுள்ள ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்கள் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் தூர்வாரப்பட்டுள்ளன. மேட்டூர் அணையில் குறைந்த நீர் இருப்பின் காரணமாக எப்போதும் பாசன நீர் திறக்கப்படும் நாளான ஜூன் 12ம் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு ரூ.134 கோடியே 83 லட்சம் மதிப்பிலான ‘குறுவை தொகுப்புத் திட்டம்’ வழங்கினார். இதனால், இதுவரை 8 லட்சத்து 26 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாகுபடி “வேளாண்மை நடைபெறும் நிலம் 100 சதவீதம் பயிர் காப்பீட்டில் கொண்டுவரப்படும்” என்ற அரசின் தொலைநோக்கு திட்டத்தின்படி, 2026-27ம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தை 37 மாவட்டங்களை உள்ளடக்கிய 14 தொகுப்புகளில் குறுவை, சம்பா மற்றும் குளிர்கால பருவங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களில் செயல்படுத்த, ரூ.648 கோடியே 55 லட்சம் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் 15 லட்சம் விவசாயிகள் பயனடைவதுடன். 36 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பு காப்பீடு செய்யப்படும். மேலும், விருப்பத்தின் பேரில் பதிவு செய்யும் அனைத்து விவசாயிகளையும் இத்திட்டத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கு தேவையான கூடுதல் நிதி ஒதுக்கீடும் செய்யப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்கள் அனைவரும், மக்களுக்கு நன்மை செய்யும் எந்த ஒரு அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை என்பதை வலியுறுத்தி கறுப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். காலை 9.31 மணிக்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் நிதிநிலை அறிக்கையை வாசிக்க தொடங்கினார். அந்த நிதிநிலை அறிக்கையில் உள்ள திட்டங்கள் தொடர்பாக அறிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அதற்கு மாறாக முதல்வர் விஜயை புகழ்ந்து பேசத்தொடங்கிவிட்டார். அப்போது அவரின் பேச்சுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர்.

அப்போது, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், ‘நானே சொல்கிறேன், நீங்கள் உட்காருங்கள்’ என திமுக சட்டமன்ற உறுப்பினர்களை சமாதானப் படுத்தினார். தொடர்ந்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் குறுக்கிட்டு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர், வேளாண்மை நிதிநிலை அறிக்கையை மட்டும் விரிவாக படிக்கவும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.