Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அரசியல் பேச வேண்டாம்’ என பேனர் வைத்து பொதுமக்கள், தொண்டர்களுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திப்பு

திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக 2025 ஜனவரி முதல் ஒன்றரை ஆண்டு காலமாக தனித்தனியாக செயல்பட்டு வந்தனர். அதனை தொடர்ந்து கடந்த ஜூன் 24ம் தேதி ராமதாஸ்-சரஸ்வதி திருமண நாளை முன்னிட்டு அவர்களை, அன்புமணி குடும்பத்துடன் சென்று சந்தித்தார். அப்போது இருவரும் கண்ணீர் விட்டு அழுத நிலையில் இருவருக்கும் சமாதானம் ஏற்பட்டது. தொடர்ந்து கடந்த ஜூன் 27ம்தேதி ராமதாசின் 88வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அன்று நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ராமதாஸ், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதை தொடர்ந்து மருத்துவ சிகிச்சை முடிந்து உடல்நலம் பெற்ற நிலையில் தற்போது முழுநேர ஓய்வில் இருக்கிறார். தன்னை சந்திக்க வரும் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள், ‘அரசியல் பேச வேண்டாம்... என்றும் குறிப்பாக பாமக குறித்து பேச வேண்டாம்’... என ராமதாஸ் அன்பு கட்டளை போட்டிருந்ததால் யாரும் வரவில்லை. இதனால் தைலாபுரம் தோட்டமே வெறிச்சோடியது.

இந்நிலையில் நேற்று முதல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அரசியலை கடந்து ராமதாஸ் நேரில் சந்திக்கலாம் என கூறப்பட்டது. இதையடுத்து நேற்று பிற்பகலில் ராமதாசை சந்தித்து நலம் விசாரிக்க பாமகவினர் சிலர் வந்தனர். ஆனால் அவர்களால் ராமதாசை சந்திக்க முடியவில்லை். ஏமாற்றத்துடன் திரும்பினர். ராமதாசிடம் பேச விரும்புகிறவர்கள் காலை 10 முதல் 12 மணிக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தோட்டத்து பணியாளர்களிடம் கூறியதையடுத்து இன்று அவரை பொதுமக்கள், பாமகவினர் சந்தித்து பேசுகின்றனர். ராமதாஸ் அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ளதால் பார்வையாளர்கள் யாரும் அரசியல் பேச வேண்டாமெனவும் தைலாபுரம் தோட்ட நுழைவு வாயிலில் பேனர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.