*இரு சக்கர வாகனங்களில் சென்று விழிப்புணர்வு
ஜெயங்கொண்டம் : திருமானூர் வட்டாரத்தின் கிராமங்களில் விவசாய பயிர் காப்பீட்டு நிறுவனம் - அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட் மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளை பயிர் காப்பீடு செய்ய வலியுறுத்தி, இரு சக்கர வாகனங்களில் சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. விவசாயிகள் தங்கள் பயிரை காப்பீடு செய்தால் வெள்ளம் மற்றும் பிற பாதிப்புகளால் பயிர் சேதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நேற்று இப்பிரசாரத்தை விவசாய பயிர் காப்பீட்டு நிறுவன அலுவலர் பெருமாள் மற்றும் பிற அலுவலர்கள் கீழப்பழூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து தொடங்கினர்.
இதனை திருமானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பரமசிவம் கொடியசைத்து தொடங்கி வைத்து, பயிர் காப்பீடு பற்றி, அங்கிருந்த விவசாயிகளுக்கு விளக்கினார். வேளாண்மை அலுவலர் சதீஷ் மற்றும் காப்பீட்டு நிறுவன அலுவலர் பெருமாள் பயிர் காப்பீடு செய்யும் வழிமுறைகள் பற்றி எடுத்துக் கூறினர். இந்த பிரசாரத்தின் போது பின்வரும் விபரங்கள் தெரிவிக்கப்பட்டன.
சிறப்பு பருவ மக்காச்சோளம் மற்றும் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி நவம்பர் 15ம் தேதி சிறப்பு பருவ மக்காச்சோளம் பயிருக்கு பிரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ.379.50 மற்றும் இழப்பீட்டுத் தொகை ரூ.38500/-ஆகும்.
சம்பா நெல் பயிர் காப்பீட்டுக்கான பிரிமியத் தொகை ஏக்கருக்கு ரூ.577.50 மற்றும் இழப்பீட்டுத் தொகை ரூ.38500/-ஆகும். அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மற்றும் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகளில் பயிர் காப்பீட்டு கட்டணம் செலுத்தி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்.
பயிர் காப்பீடு செய்வதற்கு முன் மொழிவுப்படிவம், விண்ணப்ப படிவம், பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்கள் தேவைப்படும். பொது சேவை மையத்தில் காப்பீடு செய்வதற்கு முன்மொழிவு மற்றும் விண்ணப்ப படிவங்கள் தேவையில்லை. இந்த விபரங்கள் விழிப்புணர்வு பிரசாரத்தின் போது தெரிவிக்கப்பட்டன.
