மதுரை: நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து சீடர்களை வெளியேற்றக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நித்தியானந்த தியான பீடத்தின் அறங்காவலர் சந்திரசேகரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனிநபருக்கு சொந்தமான இடத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கி உள்ள சீடர்களை வெளியேற்ற வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இதன் அடிப்படையில் ராஜபாளையம் போலீசார், ஆசிரமரத்தில் உள்ள சீடர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே யாரையும் வெளியேற்றக்கூடாது. மேலும் முறையாக விசாரிக்காமல் வருவாய் அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை ஏற்கனவே உயர்நீதிமன்றம், நித்தியானந்தா தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவில் இல்லை. எனவே நித்யானந்தா தொடர்பான வழக்கை எப்படி விசாரிக்க முடியும்? என கேள்வி எழுப்பி இருந்தது.
பின்னர் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள அவரது பக்தர்களை வெளியேற்ற இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த மனு மீதான விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி விக்டோரியா கவுரி நேற்று பிறப்பித்தார். அப்போது சம்பந்தப்பட்ட ஆசிரமத்தில் இருந்து நித்தியானந்தாவின் சீடர்களை வெளியேற்றுவது தொடர்பான மாவட்ட வருவாய் அதிகாரி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார்.
