இந்தியாவில் உற்பத்தி தளம் அமைத்து, உலக சந்தைக்கான தயாரிப்பை உருவாக்க வேண்டும்: சர்வதேச முதலீட்டாளர்களுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு
வாஷிங்டன்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜி-20 நிதியமைச்சர்கள் கூட்டம் மற்றும், உலக முதலீட்டாளர்களைச் சந்திப்பதற்காக 6 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.காகோவில் உயர்மட்ட வர்த்தக வட்டமேசை மாநாடு நடந்தது. தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:உலக அளவில் விநியோகச் சங்கிலிகள் மறுசீரமைக்கப்பட்டு வரும் இந்தச் சூழலில், அனைத்துலக நிறுவனங்களுக்கு இந்தியா மிகச்சிறந்த முதலீட்டு வாய்ப்பை வழங்கி வருகிறது. இந்தியா என்பது வெறும் மிகப்பெரிய பயனீட்டாளர் சந்தை மட்டுமல்ல, அது அனைத்துலக அளவில் இயங்குவதற்கான வலுவான தளமாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்க தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், பாதுகாப்புத் துறை உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் விரிவான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. முதலீட்டாளர்கள் இந்தியாவை வெறும் சந்தையாக மட்டும் பார்க்காமல், உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம், நுகர்வோர் வாய்ப்புகள்ஆகியவற்றின் மூலம் உலகைக் கட்டமைப்பதற்கான தளமாகப் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



