Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நீலகிரியில் தொடர் மழையால் காட்டேரி நீர் வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்

குன்னூர் : நீலகிரியில் தொடர் மழையால் காட்டேரி நீர் வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர், மறுபுறம் மலைகளின் பள்ளத்தாக்குகளில் மேக மூட்டங்கள் தவழ்ந்து செல்வது பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி பெய்து வருவது வழக்கம். இச்சமயங்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சி, காட்டேரி நீர்வீழ்ச்சி மற்றும் மாயார் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட உயரமான அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசிப்பது வழக்கம்.

கடந்த சில மாதங்களாக மழை பெய்யாத நிலையில், இந்த நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் அளவு குறைந்து, நீர் வீழ்ச்சியில் வறட்சி ஏற்பட்டது. இதனிடையே இந்தாண்டு ஜூன் மாதம் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே மே மாதத்திலேயே துவங்கியதையடுத்து, கடந்த ஒரு வார காலமாக நீலகிரியில் ரெட் அலார்ட்டுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

குறிப்பாக, கேத்தி பாலாடா, காட்டேரி டேம் போன்ற பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்றுடன் அதிகன மழையும் பெய்கிறது. இதனால், காட்டேரி அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது. இதனால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர், காட்டேரி நீர் வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இது தொலைவில் இருந்து பார்க்கும்போது ரம்மியமாக காட்சியளிக்கிறது.

இதனை குன்னூரில் இருந்து கேத்தி பாலாடா, காட்டேரி டேம் வழியாக ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது. இன்னும் ஒரு சில தினங்கள் தொடர்ந்து மழை பெய்தால், அருவியில் தண்ணீர் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல தொடர் மழை எதிரொலியால் குன்னூர் அருகேயுள்ள டால்பின் நோஸ் மற்றும் லாம்ஸ்ராக் போன்ற சுற்றுலா தலங்களுக்கு, சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதிகளில் அவ்வப்போது மழையுடன், மிதமான வெயில் மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. இதனால் லாம்ஸ்ராக் காட்சி முனைகளை ஒட்டியுள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் மேகக்கூட்டங்கள் தேயிலை தோட்டங்கள் மற்றும் மலை முகடுகளில் தவழ்ந்து சென்றது. இக்காட்சியை காண சுற்றுலா பயணிகள் தவறினாலும் அப்பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்கள் ரசித்து செல்கின்றனர்.