Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் வீடுகளில் விழுந்த பெரிய விரிசல்கள்: அனைத்து சுற்றுலா தலங்களும் மீண்டும் மூடல்

ஊட்டி: நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்கிறது.

இதனால் பல இடங்களிலும் மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. மின் விநியோகத்திலும், குடிநீர் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்வதால், விபத்துகள் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா, அவலாஞ்சி, சூட்டிங் மட்டம், லாம்ஸ் ராக், டால்பின் நோஸ், பைக்காரா நீர்வீழ்ச்சி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன.

நேற்று முன்தினம் ஊட்டியில் மழை சற்று குறைந்து காணப்பட்ட நிலையில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியன திறக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்றும், இன்றும் நீலகிரி மாவட்டத்தில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து, ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் நேற்று மூடப்பட்டு இருந்தன. நேற்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் மரம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. ஊட்டியில் இருந்து மசனகுடி செல்லும் சாலையில் 30-வது கொண்டை ஊசி வளைவில் நேற்று ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி அருகே உள்ள குருத்துக்குளி பசவக்கல் கிராமத்தில் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் ஆகாச பாலம்-தவளமலை இடையே சுமார் 30 அடி உயரத்தில் இருந்து பாறைகள் மற்றும் மண் சரிந்து கொண்டிருப்பதால், எந்நேரமும் இச்சாலையில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. இதனால், இவ்வழித்தடத்தில் கனரக வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. அரசு பஸ்கள் மட்டும் தற்போது வழித்தடத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி மற்றும் அப்பர் பவானி ஆகிய நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 19 செ.மீ, அப்பர்பவானியில் 12.5 செ.மீ. மழை பதிவானது.