இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் (National Institute of Design) இடம் பெற்றிருக்கும் நான்காண்டு கால அளவிலான இளநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பு (B.Des), பட்டதாரி நிலையிலான வடிவமைப்பு பட்டயப்படிப்பு (GDPD) மற்றும் இரண்டரை ஆண்டு கால அளவிலான முதுநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பு (M.Des) ஆகியவைகளுக்கான இடங்களில் 2025-2026ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான வடிவமைப்புத் திறனாய்வுத் தேர்வு (Design Aptitude Test) அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
தேசிய வடிவமைப்பு பயிற்சி நிறுவனங்கள்: இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய வடிவமைப்பு பயிற்சி நிறுவனம் (National Institute of Design) குஜராத் மாநிலத்தில் அகமதா பாத் மற்றும் காந்திநகர் ஆகிய இரு இடங்களிலும், கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும், ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலும், அரியானா மாநிலம் குருசேத்திராவிலும் தனது கல்வி நிறுவனங்களை அமைத்திருக்கிறது.
இந்நிறுவனத்தின் அகமதாபாத் நகர் வளாகத்தில் இளநிலை வடிவமைப்பு (Bachelor of Design), முதுநிலை வடிவமைப்பு (Master of Design) ஆகிய இரு நிலைகளிலான பட்டப்படிப்புகளும், காந்திநகர் மற்றும் பெங்களூர் வளாகங்களில் முதுநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்புகளும், விஜயவாடா மற்றும் குருசேத்திரா வளாகங்களில் பட்டதாரி நிலையிலான வடிவமைப்புப் பட்டயப் படிப்பும் (Graduate Diploma Programme in Design) நடத்தப்பெற்றுவருகின்றன.
இளநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பு: அகமதாபாத் வளாகத்தில் நான்கு ஆண்டு கால அளவிலான இளநிலை வடிவமைப்பு பட்டப்படிப்PU மூன்று புலங் களில் கற்பிக்கப்படுகின்றன. தொழிற்சாலை வடிவமைப்புப் புலத்தின் (Faculty of Industrial Design) கீழ் பீங்கான் மற்றும் கண்ணாடி வடிவமைப்பு (Ceramic & Glass Design), அறைகலன் வடிவமைப்பு (Furniture Design), உற்பத்தி வடிவமைப்பு (Product Design), தகவல் தொடர்பு வடிவமைப்புப் புலத்தின் (Faculty of Communication Design) கீழ் அசைவூட்டத் திரைப்படம் வடிவமைப்பு (Animation Film Design), கண்காட்சி வடிவமைப்பு (Exhibition Design), திரைப்படம் மற்றும் காணொளி தகவல் தொடர்பு (Film & Video Communication), வரைகலை வடிவமைப்பு (Graphic Design), நெசவு, ஆடை மற்றும் வாழ்முறைத் துணைப்பொருட்கள் வடிவமைப்புப் புலத்தின் (Faculty of Textile, Apparel & Lifestyle Accessory Design) கீழ் நெசவு வடிவமைப்பு (Textile Design) பட்டப்படிப்பு கற்பிக்கப்படுகின்றது.
பட்டதாரி நிலையிலான வடிவமைப்புப் பட்டயப்படிப்பு: விஜயவாடா மற்றும் குருசேத்திரா வளாகங்களில் நான்கு ஆண்டு கால அளவிலான பட்டதாரி நிலையிலான வடிவமைப்பு பட்டயப்படிப்புகள் நடத்தப்பெற்று வருகின்றன. தொழிற்சாலை வடிவமைப்பு (Industrial Design), தகவல் தொடர்பு வடிவமைப்பு (Communication Design), நெசவு மற்றும் ஆடை வடிவமைப்பு (Textile & Apparel Design) எனும் மூன்று பிரிவுகளில் பட்டயப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
முதுநிலை வடிவமைப்பு பட்டப்படிப்பு: இரண்டரை ஆண்டுகால அளவிலான முதுநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பில் அகமதாபாத் வளாகத்தில் அசைவூட்டத் திரைப்படம் வடிவமைப்பு (Animation Film Design), பீங்கான் மற்றும் கண்ணாடி வடிவமைப்பு (Ceramic & Glass Design), அறைகலன் வடிவமைப்பு (Furniture Design), திரைப்படம் மற்றும் காணொளி தகவல் தொடர்பு (Film & Video Communication), வரைகலை வடிவமைப்பு (Graphic Design), உற்பத்தி வடிவமைப்பு (Product Design), நெசவு வடிவமைப்பு (Textile Design) போன்றவை கற்பிக்கப்படுகின்றன.
காந்திநகர் வளாகத்தில் ஆடை வடிவமைப்பு (Apparel Design), வாழ்முறைத் துணைப்பொருட்கள் வடிவமைப்பு (Lifestyle Accessory Design), புதிய ஊடகம் வடிவமைப்பு (New Media Design), ஒளிப்படக்கலை வடிவமைப்பு (Photography Design), உத்திம வடிவமைப்பு மேலாண்மை (Strategic Design Management), பொம்மை மற்றும் விளையாட்டு வடிவமைப்பு (Toy & Game Design), போக்குவரத்து மற்றும் தானுந்து வடிவமைப்பு (Transportation & Automobile Design) முதுநிலைப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
பெங்களூரு வளாகத்தில் சில்லரை வணிக அனுபவத்திற்கான வடிவமைப்பு (Design for Retail Experience), எண்ணிம விளையாட்டு வடிவமைப்பு (Digital Game Design), தகவல் வடிவமைப்பு (Information Design), இடைவிளைவு வடிவமைப்பு (Interaction Design), உலகளாவிய வடிவமைப்பு (Universal Design) கற்பிக்கப்படுகின்றன.
வயது மற்றும் கல்வித்தகுதிகள்: மேற்காணும் இளநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பு (B.Des) மற்றும் பட்டதாரி நிலையிலான வடிவமைப்பு பட்டயப்படிப்பு (GDPD) ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் மேல்நிலைக்கல்வி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது நடப்புக் கல்வியாண்டில் தேர்வு எழுதுபவர்களாக இருக்க வேண்டும்.
முதுநிலை வடிவமைப்புப் பட்டப் படிப்பிற்கு (M.Des) விண்ணப்பிப்பவர்கள் நான்கு ஆண்டுகால அளவிலான (10+2+4) இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மூன்று ஆண்டுகால அளவிலான (10+2+3) இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று ஒரு வருட காலம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நான்கு ஆண்டு கால அளவிலான (10+2+4) வடிவமைப்புப் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது இதற்கு இணையான கல்வித்தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும். நடப்புக் கல்வியாண்டில் தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்க முடியும்.
இளநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பு (B.Des) மற்றும் பட்டதாரி நிலையிலான வடிவமைப்பு பட்டயப்படிப்பு (GDPD) ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 20 வயதுக்கு மிகாமலும், முதுநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடி வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மூன்று ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
வடிவமைப்புத் திறனாய்வுத் தேர்வு: மேற்காணும் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்குத் தனித்தனியாக வடிவமைப்புத் திறனாய்வுத் தேர்வு (Design Aptitude Test) 21.12.2025 அன்று நடைபெறவிருக்கிறது. இந்த வடிவமைப்புத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://admissions.nid.edu/NIDA2026/Default.aspx எனும் இந் நிறுவன இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 1, 2025.
கூடுதல் தகவல்கள்: இப்படிப்புகளுக்கான திறனாய்வுத் தேர்வு, மாணவர் சேர்க்கை விவரங்கள், கல்விக் கட்டணம், விடுதி வசதிகள் உள்ளிட்ட முழு தகவல்களையும் https://admissions.nid.edu/NIDA2026/Default.aspx என்ற இணையதளத்தைப் பார்வையிட்டுத் தெரிந்துகொள்ளலாம்.


