எந்த அளவு நியாசினமைட் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்?
நியாசினமைட் (Niacinamide) என்பது வைட்டமின் B3இன் மற்றொரு வடிவம். இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கியமான மூலப்பொருளாக இருப்பதால், தற்போது சீரம், மாய்ஸ்சரைசர், சன்ஸ்கிரீன், ஃபேஸ் வாஷ் உள்ளிட்ட பல அழகுசாதனப் பொருட்களில் இதன் அளவீடுகள், இதன் முக்கியத்துவம் குறித்து விளம்பரங்களில் காண முடிகிறது.
நியாசினமைட்டின் முக்கிய நன்மைகள்
சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்
சருமத்தின் இயற்கையான பாதுகாப்பு அடுக்கை (Skin Barrier) வலுப்படுத்தி, ஈரப்பதம் இழக்காமல் பாதுகாக்கிறது.
கரும்புள்ளிகளைக் குறைக்கும்
முகப்பரு தழும்புகள், சூரிய ஒளியால் ஏற்பட்ட நிறமாற்றம் போன்றவற்றைக் குறைத்து, சரும நிறத்தை சமப்படுத்த உதவுகிறது.
எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்தும்
எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கு சீபம் (Sebum) உற்பத்தியைக் குறைத்து, முகப்பரு வருவதைக் கட்டுப் படுத்த உதவுகிறது.
முகப்பரு மற்றும் சிவப்பைக் குறைக்கும்
அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) தன்மை கொண்டதால், முகப்பருவால் ஏற்படும் சிவத்தல் மற்றும் எரிச்சலைக் குறைக்கிறது.
முதுமை அறிகுறிகளைக் குறைக்கும்
கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து, வயது மூப்புக் கோடுகள் மற்றும் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது.
2% நியாசினமைட்
*சென்சிட்டிவ் அதிகமான சருமத்திற்கு ஏற்றது.
*சரும ஈரப்பதம் மற்றும் பாதுகாப்பு அடுக்கை மேம்படுத்தும்.
4% - 5% நியாசினமைட்
*பெரும்பாலான தோல் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவு.
*கரும்புள்ளிகள், எண்ணெய் பசை மற்றும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் நல்ல பலன் தருகிறது.
10% நியாசினமைட்
*அதிக எண்ணெய் சுரப்பு மற்றும் முகப்பரு தழும்புகளுக்கு பயன்படுத்தப்படலாம்.
*சிலருக்கு எரிச்சல் அல்லது சிவத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. 15% - 20% அல்லது அதற்கு மேல்
*எல்லோருக்கும் அவசியமில்லை.
*அதிக சதவீதம் இருப்பதால் கூடுதல் பலன் கிடைக்கும் என்று உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. மாறாக, சென்சிட்டிவ் அதிகமான சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தலாம்.
யார் பயன்படுத்தலாம்?
*எண்ணெய் பசை சருமம்
*வறண்ட சருமம்
*கலப்பு சருமம்
*முகப்பரு பாதிப்பு உள்ளவர்கள்
*கரும்புள்ளிகள் மற்றும் நிறமாற்றம் உள்ளவர்கள்
*வயதான தோற்றத்தைக் குறைக்க விரும்புபவர்கள்
பொதுவாக அனைத்து சரும வகையினருக்கும் ஏற்றதாகக் கருதப்படுகிறது.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
*காலை அல்லது இரவு இரு வேளைகளிலும் பயன்படுத்தலாம்.
*முகத்தை சுத்தம் செய்த பிறகு, நியாசினமைட் சீரம் தடவி, அதன் மேல் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம்.
*பகல் நேரத்தில் கட்டாயம் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.
*இது ஹையாலுரோனிக் ஆசிட், செரமைடுகள் மற்றும் பல பொதுவான ஸ்கின்கேர் பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
கவனிக்க வேண்டியவை
*முதன்முதலில் பயன்படுத்துபவர்கள் 5% அல்லது அதற்கும் குறைவான அளவில் தொடங்குவது நல்லது.
*புதிய தயாரிப்பை பயன்படுத்தும் முன் சரும சோதனை (Patch Test) செய்ய வேண்டும்.
*எரிச்சல், அரிப்பு அல்லது அதிக சிவத்தல் ஏற்பட்டால் பயன்படுத்துவதை நிறுத்தி தோல் மருத்துவரை அணுக வேண்டும்.
இயற்கையாகவே இந்த வைட்டமின் பி3 உடலுக்குள் என்னென்ன பலன் களைக் கொடுக்கின்றன? உண்ணும் உணவு மூலம் இந்த நியாசின்? நியாசினமைட் பெறுவது எப்படி?
வைட்டமின் B3 ,உடலுக்குத் தேவையான நீரில் கரையக்கூடிய வைட்டமின். இது நியாசின் (Niacin) மற்றும் நியாசினமைட் (Niacinamide) என்ற வடிவங்களில் காணப்படும். உணவை ஆற்றலாக மாற்றுவதிலிருந்து தோல் ஆரோக்கியம் வரை பல முக்கிய பணிகளில் பங்கு வகிக்கிறது.
நாம் சாப்பிடும் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு ஆகியவற்றை உடல் ஆற்றலாக மாற்றுவதில் முக்கிய பங்கு B3 வைட்டமினுக்கு உண்டு. சருமத்தின் பாதுகாப்பு அடுக்கை வலுப்படுத்துகிறது. கரும்புள்ளிகள் மற்றும் முகப்பரு தழும்புகளைக் குறைக்க உதவுகிறது. தோலின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது. மூளை மற்றும் நரம்புகளின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது. நினைவாற்றல் மற்றும் நரம்பு ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கிறது.
செரிமான உறுப்புகள் ஆரோக்கியமாக இயங்கவும், உணவில் உள்ள சத்துக்களை உடல் பயன்படுத்தவும் உதவுகிறது. செல்களின் வளர்ச்சி மற்றும் DNA பழுதுபார்ப்பு செயல்முறைகளில் B3 முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக அளவு நியாசின் மருந்தாக மருத்துவக் கண்காணிப்பில் கொடுக்கப்படும்போது HDL (நல்ல கொலஸ்ட்ரால்) அதிகரிக்கவும், LDL மற்றும் டிரைகிளிசரைடுகளை குறைக்கவும் உதவலாம். ஆனால், தானாகவே அதிக அளவு சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்ளக் கூடாது.
B3 குறைபாடு ஏற்பட்டால்?
*அதிக சோர்வு
*தோல் அழற்சி
*நாக்கு மற்றும் வாய் புண்கள்
*வயிற்றுப்போக்கு
*நினைவாற்றல் பாதிப்பு
கடுமையான குறைபாட்டால் பெல்லாக்ரா (Pellagra) என்ற நோய்
ஏற்படலாம்.
வைட்டமின் B3 அதிகம் உள்ள உணவுகள்
*சிக்கன்
*மீன் (டுனா, சால்மன்)
*வேர்க்கடலை
*காளான்
*முழுதானியங்கள்
*பருப்பு வகைகள்
*முட்டை
*ஈஸ்ட் மற்றும் செறிவூட்டப்பட்ட தானியங்கள்
பெண்களுக்கு ஒரு கூடுதல் நன்மை
அழகுசாதனப் பொருட்களில் பயன் படுத்தப்படும் நியாசினமைட் (Vitamin B3), சருமப் பொலிவு, முகப்பரு கட்டுப்பாடு, கரும்புள்ளிகள் குறைதல் மற்றும் முதுமை அறிகுறிகளைத் தாமதப்படுத்துதல் போன்ற பல நன்மைகளுக்காக தற்போது தோல் மருத்துவர்களால் பரவலாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
- ஷாலினி நியூட்டன்


